கரீனா சோப்ரா சந்தானம்... காதல் தேவதை காஜல்..!





கார்த்தி ரசிகர்கள் ‘அழகுராஜா’ காய்ச்சலில் இருக்க, நிஜ காய்ச்சலில் கார்த்தியின் உடம்பு கதகதத்துக் கொண்டிருந்த நேரத்திலும் நமக்காக நேரம் ஒதுக்கினார். ‘‘சமந்தாவுக்குக் கூட காய்ச்சலாமே கார்த்தி?’’ என்றதுதான் தாமதம், ‘‘ஹலோ... அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்? ‘அழகுராஜா’ பற்றிக் கேளுங்க’’ என்று அலர்ட் ஆனார்.
‘‘தலைப்பே கவுண்டமணிய ஞாபகப்படுத்துதே..?’’

‘‘அம்பாசமுத்திரத்தில் ‘ஆல் இன் ஆல்’ பெயரில் டி.வி சேனல் நடத்துறவன்தான் படத்தோட ஹீரோ. அவன் பேரு அழகுராஜா. அந்த இரண்டையும் மிக்ஸ் பண்ணினதில கிடைச்ச டைட்டில்தான் இது. மத்தபடி கவுண்டமணி சார் இந்தப் படத்தில் நடிக்கல. அவரை நடிக்க வைக்க ட்ரை பண்ணினோம். சில சூழ்நிலைகளால முடியாமப் போச்சு. இயக்குனர் ராஜேஷும், நானும், ஏன்... நாம எல்லாருமே கவுண்டமணி ரசிகர்கள்தானே! டைட்டில்லயாவது அவர் இருக்கறது சந்தோஷம்தான். சன் டி.வி ரேஞ்சுக்கு வந்துடணும்னு ஆசைப்படுற ‘அழகுராஜா’ எடுத்து வைக்கிற அடியெல்லாம் கலகலப்பு... அவரோட எடுபிடியா வர்ற சந்தானம் பண்றதெல்லாம் காமெடிதான். கரீனா கபூரும் இல்லாம, ப்ரியங்கா சோப்ராவும் இல்லாம இரண்டையும் கலந்து கரீனா சோப்ராங்குற கேரக்டரில் சந்தானம் வர்ற சீனில் தியேட்டரே கலகலக்கும். என்னோட பெற்றோர்களா பிரபு சாரும் சரண்யா மேடமும் நடிச்சிருக்காங்க. வழக்கமா ராஜேஷ் படங்கள், ஒருசில கேரக்டர்களை வைத்தே நகரும். இந்தப் படத்தில் முதல் முறையா நிறைய கேரக்டர்கள். எல்லா கேரக்டர்களுமே பேசப்படும்.’’
‘‘இந்த அழகுராஜா வித்தியாசமா இருப்பாரா?’’

‘‘ ‘பருத்திவீரன்’ படத்துக்குப் பிறகு கிராமத்துப் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு. அதான் ஒரு குட்டி டவுன் பேக்டிராப்பில் நடக்கிற கதைன்னு ராஜேஷ் பேச ஆரம்பிச்சதுமே ஆர்வமா கேட்டு சம்மதிச்சேன். ஓடுற ரயில் மேல ஓடி சண்டை போட்டு அலுத்துடுச்சு. கை, காலுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாமேன்னுதான் ஆக்ஷன் எட்டிப் பார்க்காத குடும்பப் பின்னணியில் நடக்கிற இந்தக் காதல் கதையில் என்னைப் பொருத்திக்கிட்டேன். படம் பிரமாதமா வந்திருக்கு!’’
‘‘காஜலோட லவ் ட்ராக் எப்படி வந்திருக்கு?’’


‘‘ ‘நான் மகான் அல்ல’ படத்துக்குப் பிறகு நானும் காஜலும் ரெண்டாவது முறையா சேர்ந்து நடிச்சிருக்கோம். படத்தில காதல்தான் பிரதானம். ‘தான் உலகத்தில் பிறந்ததுக்காக இந்த உலகம்தான் கொடுத்து வச்சிருக்கு’ன்னு நினைக்கிற ஒரு பணக்கார வீட்டுப் பொண்ணுதான் காஜல். சித்ரா தேவி ப்ரியாங்கற அவரோட பெயருக்கு ஒரு காரணம், அதுக்குப் பின்னாடி ஒரு கதைன்னு செமயா கலக்கி இருக்காங்க. எங்களோட லவ் டிராக் படத்தோட ஹை லைட்டா இருக்கும். தமிழ் டயலாக்கை புரிஞ்சிக்கிட்டு உச்சரிப்பை சரியா கொடுத்து நடிச்சிருக்கார். இன்னொரு விஷயம்... சின்ன வயசு பிரபு கேரக்டரிலும் நான்தான் நடிச்சிருக்கேன். ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம், குரல்னு பிரபு சாரோட சாயலுக்காக நிறைய ஹோம் வொர்க்கெல்லாம் செய்தேன். அந்த எபிசோடில் நடிச்சு முடிச்சதும் யூனிட்லயே நல்ல வரவேற்பு கிடைச்சது. இந்த தீபாவளிக்கு எனக்கு மட்டுமில்லாம, ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் ஸ்வீட்டா ‘அழகுராஜா’ இருப்பான்...’’
‘‘அடுத்து?’’

‘‘பொங்கலுக்கு ‘பிரியாணி’. இது சிட்டியில நடக்கிற கதைதான். சீரியஸான விஷயத்தைக்கூட காமெடியா சொல்லிடுவார் வெங்கட் பிரபு. அந்த வகையில், ‘பிரியாணி’யிலும் வெங்கட்டோட ரசனை கமகமக்கும். அடுத்ததா ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்குற ஒரு படத்தில் நடிக்கிறேன். அப்புறம், ‘சார்பட்டா பரம்பரை’ன்னு ஒரு கதையில் நடிக்கப்போறேன். நிறைய டைம் எடுத்து பண்ண வேண்டிய கதை அது.’’


‘‘அண்ணனோட சேர்ந்து எப்போ நடிக்கப் போறீங்க?’’
‘‘ரெண்டு பேரோட கால்ஷீட்டும் அதுக்கேத்த கதையும் அமையும்போது நடிப்போம். ஆனா, அண்ணனோட நடிப்பு பசிக்கும், அவர் இருக்கிற பரபரப்புக்கும் இப்போதைக்கு சேர்ந்து நடிக்கும் சந்தர்ப்பம் அமையாதுன்னு நினைக்கிறேன். அண்ணன் அடுத்தடுத்து எடுத்து வைக்கும் அடிகளையும், உழைப்பையும் உன்னிப்பா கவனிச்சுட்டு வர்றேன். அவர்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே, கதை தேர்வு செய்யும் விதமும் அதற்கான மெனக்கெடலும்தான். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தப்போ அவர் கும்பகோணத்தில் ‘நந்தா’ ஷூட்டிங்கில் இருந்தார். அவரைப் பார்க்க ரூம் கதவைத் தட்டியதும் வெளியில் வந்தவரைப் பார்த்து எனக்கு அடையாளமே தெரியல. முகமெல்லாம் கறுத்துப் போய் வேறொரு ஆளா தெரிஞ்சார். பாலா சார்கிட்ட நிறைய கத்துக்கிட்டார். ஒரு படத்துக்காக அவர் பண்ற ஹோம் ஒர்க்கையெல்லாம் பார்க்கும்போது எனக்குள்ளேயும் ஒரு உத்வேகம் பிறக்கும்.


‘வாரணம் ஆயிரம்’ சமயத்தில் அவரோட சேர்ந்து ஒய்.எம்.சி.ஏ கிரவுண்டுக்கு உடற்பயிற்சி செய்யப் போவேன். அவர் 25 ரவுண்டு ரன்னிங் போற நேரத்தில், நான் 15 ரவுண்டுதான் அடிச்சிருப்பேன். அப்படியொரு அபாரமான உழைப்பாளி. என்னோட படங்களைப் பார்த்துட்டு, நிறைய கருத்து சொல்வார். வல்கரான காட்சிகளோ, வசனமோ இல்லாம பார்த்துக்கோன்னு அட்வைஸ் பண்ணுவார். ஒரு சட்டைக்காகவும், பைக்கிற்காகவும் அவரோட கட்டிப் புரண்டு சண்டை போட்ட காலமெல்லாம் இருக்கு. ‘பருத்தி வீரன்’ ரிலீஸ் ஆனதும், எனக்கும் நடிகன்ங்கிற அந்தஸ்து கிடைச்சது. நான் பெரிசா அலட்டிக்கல. அண்ணன்தான் ‘டேய்... இனிமே நீ கார்லதான் போகணும்’னு ஆசை ஆசையா ஒரு கார் வாங்கிக் கொடுத்தார். அவர்கிட்ட கத்துக்க நிறைய இருக்குங்க...’’
- அமலன்