சாயி : ஷீரடி பாபாவின் புனித சரிதம்

தோல்வியிலிருந்து தப்பிக்க நினைப்பது, அனுபவப் பாடங்களைக் கற்பதிலிருந்து தவறுவதாகும். ஆகவே, தோல்வியைப் பார்த்து பயப்படாதீர்கள், தோல்வி வேண்டாம் என ஓடாதீர்கள், தோல்வியை எதிர்கொள்ளுங்கள். அதிலிருந்து நிறைய பாடங்களைக் கற்கலாம்.
- பாபா மொழி 

காலையில் எழுந்தார் ராபர்ட். இரவு நன்றாகத் தூங்கியதால், புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். குளித்து முடித்து, அவசரமாகத் தயாராகி, ‘‘கிளம்பலாமா?’’ எனக் கேட்டார், மாதவராவ் அங்கு வந்தவுடன்.
‘‘சரி...’’
‘‘பாபாவைப் பார்க்க முடியுமா?’’
‘‘முடியும்!’’
‘‘என்னிடம் பேசுவாரா?’’
‘‘அதைச் சொல்ல முடியாது. அவருடைய மனதில் விருப்பம் இருந்தால்தான் பார்ப்பார், பேசுவார். இல்லையென்றால், இல்லைதான்!’’ - மாதவராவ் முதல் அடி கொடுத்தார்.
‘‘அதெப்படி? நான் இவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். மேலும் நான் ஒரு பெரிய அதிகாரி. இங்கே எங்களுடைய ஆட்சி நடக்கிறது. அப்படியிருக்க உங்களுடைய சாது நான் சொன்னால் கேட்க மாட்டார் என்றால் என்ன அர்த்தம்?’’
‘‘உங்களுடைய அதிகாரம் எல்லாம் எங்கள் மேல்தான்! ஆனால், பாபாவின் அதிகாரம் உலகம் முழுவதும் இருக்கிறது! அதைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்!’’
‘‘இது எனக்கு வித்தியாசமான அனுபவம்...’’
‘‘ஆமாம். மனதில் அகங்காரம் கொண்டு பழகாதீர்கள்! ‘நாங்கள் இந்த நாட்டை ஆளுபவர்கள்’ என்கிற மமதையுடன் சென்றால், பாபாவை நெருங்க முடியாது!’’ - மாதவராவ் இன்னொரு போடு போட்டார்.

‘‘ஆச்சரியமாக இருக்கே! மிஸ்டர் மாதவராவ், நீங்கள் அந்த பாபாவை கடவுளாகப் பார்க்கிறீர்களா?’’
‘‘நிச்சயமாக! எப்படி உங்களுக்கு ஏசுநாதரோ, அப்படி எங்களுக்கு சாய்பாபா!’’
‘‘அவரைப் பாக்கும் ஆவல் எனக்கு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மிஸ்டர் மாதவராவ், நாம் கிளம்புவோமா?’’
‘‘நிச்சயமாக!’’
இரண்டு பேரும் கிளம்பி மசூதிக்கு வந்தார்கள்.

பிரசன்ன முகத்துடன் பாபா உட்கார்ந்திருந்தார். பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் பாபாவைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். அவர்களுக்கு விதவிதமான பழங்களை பாபா கொடுத்துக்கொண்டிருந்தார். கதை சொல்லி அவர்களைச் சிரிக்க வைத்தார்.
அந்த நேரத்தில் ராபர்ட்டை அழைத்துக்கொண்டு மாதவராவ் அங்கு வந்தார். அவர்கள் மசூதியின் படிக்கட்டில் ஏறக் காலெடுத்து வைத்தபோது, பாபா ‘‘ஸ்டாப்!’’ என்று கத்தினார்.
பாபாவின் வாயிலிருந்து ஆங்கில வார்த்தைகள் முதல்முறையாக வந்ததைக் கண்டு அங்குள்ளவர்கள் திடுக்கிட்டார்கள். மாதவராவ் ஸ்தம்பித்தார்.
ராபர்ட் மேலே வர முடியாமல் அவஸ்தையில் தவித்தார். கீழே இறங்கினாலும் அவமானம்; கட்டளையை மீறி மேலே ஏறிச் சென்றாலும் பிரச்னையாகிவிடும். இந்த தேஜஸ்வியான சாது தங்களுடைய பாஷையைப் பேசுகிறான் என்ற நினைப்பே அவருக்கு ஆச்சரியம் தந்தது. நாநா சாந்தோர்கர் தன்னிடம் சொன்னது ராபர்ட் நினைவிற்கு வந்தது. இவர் சாதாரண சாது அல்ல! வித்தியாசமானவர்... சம்திங் ஸ்பெஷல்!

பாபாவின் தேஜஸைப் பார்த்துப் பரவசமடைந்தார் ராபர்ட். இவர் சாமான்யமானவர் அல்ல என்பதைப் புரிந்துகொண்டவுடன் இரண்டடி பின்வாங்கினார். அவருடைய முகத்தி
லிருந்த அகம்பாவம் நீங்கியது. ‘‘உங்களை வணங்குகிறேன் பாபா’’ எனப் பணிவுடன் ஆங்கிலத்தில் வணக்கம் சொன்னார்.
‘‘காட் பிளெஸ் யூ’’ என்ற பாபா, மேலே தொடர்ந்தார்... ‘‘ஷாமா, அவனை மேலே வர விடாதே. மற்ற உபசாரங்களைச் செய். என்ன இருந்தாலும், அவன் நம்முடைய விருந்தாளி!’’
‘‘சரி சுவாமி. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாநா எனக்குக் கடிதத்தில் எழுதியபடி அவருக்கு எல்லா ஏற்பாட்டையும் செய்திருக்கிறேன்!’’
‘‘சரி... சரி... அவனை அழைத்துக்கொண்டு போ. இல்லை அவன் கொஞ்ச நேரம் உட்காருவதானால் உட்காரட்டும்!’’
அவர் ஒரு மணிநேரம் கீழே உட்கார்ந்திருந்தார்.

பிறகு பாபா மற்ற பக்தர்களைப் பார்க்க ஆரம்பித்தார். ராபர்ட் பக்கம் திரும்பவேயில்லை. அவர் பாபாவின் திரு
வுருவத்தைக் கண்களில் பதித்துக்கொண்டார். பிறகு மாதவராவுடன் கிளம்பினார். தலை சாய்த்து, இந்திய முறைப்படி பாபாவை நோக்கிக் கைகூப்பினார். பாபாவும் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.
மறுநாள் திரும்பவும் மசூதி அருகில் வந்தபோது, மாதவராவைப் பார்த்து, ‘‘இன்றாவது பாபா என்னை மேலே ஏறிவரச் சொல்லுவாரா, அல்லது நேற்றைப் போல மறுபடி விரட்டி விடுவாரா?’’ என்று கேட்டார் ராபர்ட்.

‘‘அது அவருக்குத்தான் தெரியும்!’’
‘‘ஏன் இப்படி நடந்துகொள்கிறார்?’’
‘‘உங்களுடைய மனசு களங்கமில்லாமல் இருக்கணும். பவித்திரத் தன்மையுடன் இருக்கணும். உங்கள் மனதில் அகங்காரம் சிறிதளவு இருந்தால்கூட, அவர் வரவிடமாட்டார்...’’
‘‘ஆனால் என்னில் அகங்காரம் இல்லையே!’’
‘‘அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். பாபாவிற்குத் தெரியணுமே. பாபா கையில் ஒரு குச்சி இருக்கிறது. அதனால் சிலரை பாபா அடிக்கவும் செய்கிறார்’’ என்று விவரித்தார் மாதவராவ்.
‘‘மை காட்! அடி வாங்குவதைவிட, இந்த அவமானத்தைத்தான் தாங்க முடியாது!’’
பேசிக்கொண்டே இருவரும் துவாரகமாயிக்கு வந்தார்கள்.
மெல்ல ராபர்ட் சொன்னார்... ‘‘பாபா, நீங்கள் தடுக்காமலிருந்தால், நான் படியேறி மேலே வந்து, உங்கள் அருகில் உட்காருகிறேன். என்னுடைய விருப்பம் என்னவென்றால், உங்கள் அருகில் வந்து முழங்காலிட்டு வணங்கி, உங்களுடைய பவித்திரமான கைக்கு முத்தம் கொடுக்கணும். உங்கள் பக்கத்தில் உட்காரணும்!’’
‘‘அதற்குத் தேவையே இல்லை. நீ அங்கேயே, நேற்று உட்கார்ந்ததுபோல உட்கார். அங்கிருந்தபடியே தரிசனம் செய். உனக்கு என் ஆசீர்வாதம்!’’ என்றார் பாபா.
‘‘சரி...’’
ராபர்ட் அங்கிருந்தபடியே நமஸ்காரம் செய்தார். மற்ற பக்தர்கள் இதை ஆச்சரியத்துடன் நோக்கினார்கள்.
ஆங்கிலேயர்களின் சட்டம் பாபாவின் முன் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வெள்ளைக்கார அதிகாரி, கை கட்டி, வாய்பொத்தி, கீழே நின்று, பாபாவின் கருணைக்காகக் காத்திருந்தார். இந்த இடத்தில் பாபா சர்வ வல்லமை பொருந்தியவராகவும், வெள்ளைக்கார ஆசாமி அவருடைய தர்பாரில் ஒரு பிச்சைக்கார
ராகவும் காட்சியளித்தனர்.

மூன்றாவது நாள் ராபர்ட் வெறுப்படைந்தார். மாதவராவ் அங்கு சென்றபோது, அவர் மூட்டை கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
‘‘சார்...’’
‘‘யெஸ் மாதவராவ்!’’
‘‘சாமான்களையெல்லாம் ஏன் பேக்-அப் செய்கிறீர்கள்? இன்று மும்பைக்குப் பயணமா?’’
‘‘ஆமாம்!’’
‘‘ஆனால் நீங்கள் கிளம்புவதற்கு பாபாவிடம் உத்தரவு வாங்கவில்லையே?’’
‘‘வாட்?’’
‘‘ஷீரடியை விட்டுப் போவதாயிருந்தால் பாபாவின் அனுமதி மிக முக்கியம்!’’
‘‘எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. நான் என்னுடைய இஷ்டப்படி வந்தேன். என் இஷ்டப்படியே திரும்பிப் போகிறேன்! இதற்கு ஏன் பாபா அனுமதி தர வேண்டும்?’’
‘‘ரொம்பவும் தப்பாகப் பேசுகிறீர்கள்...’’
‘‘அப்படியென்றால் என்ன?’’
‘‘நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ... அவர் அனுமதி இல்லாமல் யாரும் ஷீரடிக்குள் வரவோ, போகவோ முடியாது.’’
‘‘எனக்கு நம்பிக்கை இல்லை!’’
‘‘சரி... உங்கள் இஷ்டம்... ஆனால் இன்று பாபாவிடம் போகிறோமா இல்லையா?’’
‘‘நிச்சயமாகப் போவோம். ஆனால் மாதவராவ், இன்றாவது பாபா என்னை மேலே ஏறி வரச் சொல்லுவாரா? எனக்கு அவரின் கரங்களைத் தொட்டு அந்த ஆன்மிக அனுபவத்தை உணர வேண்டும். முடியுமா?’’
‘‘முடியும் என்று நம்புவோம்!’’
‘‘நன்றி...’’
இருவரும் மசூதிப் பக்கம் வந்தனர். ராபர்ட்டின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. மனம் தைரியமிழந்தது. இந்த இரண்டு நாட்களில் பாபாவைப் பற்றியும், அவருடைய மகத்துவத்தையும் அறிய முடிந்தது. இன்று எப்படியாவது அவரைத் தொட்டு வணங்கி, தெய்வத்தின் அருளைப் பெறத் துடித்தார்.

ஆனால்...
இன்றும் பாபா அவருக்குக் கடாட்சம் கொடுக்கவில்லை. ஷாமாவின் மத்தியஸ்தமும் உபயோகப்படவில்லை. ராபர்ட் கோபத்தில் ஆழ்ந்தார். கடைசியில் வெறுப்படைந்து எழுந்தார். கீழிருந்தபடியே நமஸ்கரித்து, ‘‘பாபா’’ என்றார்.
‘‘சொல்...’’
‘‘நான் இன்று ஷீரடியை விட்டுப் போகிறேன்...’’
‘‘நாளைக்குப் போகலாம். ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்?’’ என்றார் பாபா.
‘‘இல்லை... நான் இன்றைக்குப் புறப்படணும்!’’
அதற்கு பாபா ஒன்றும் பேசவில்லை, மௌனமானார்.
‘‘மாதவராவ், எனக்குத் துணையாக வாருங்கள்!’’
‘‘சரி...’’
இருவரும் கிளம்பினார்கள்.
‘‘மாதவராவ்’’ - மேலேயிருந்து மகல்சாபதி கூப்பிட்டார்.
‘‘அவரை இன்றைக்குத் தங்கச் சொல்லுங்கள். பாபாவிடமிருந்து உத்தரவு வரவில்லை. அவருக்கு சங்கடம் ஏதேனும் நேரலாம்’’ என்றார்.
‘‘நான் பிரயத்தனம் செய்கிறேன். ஆனால் அவர் பிடிவாதமாக இருக்கிறார்!’’
‘‘இருந்தாலும், சொல்லுங்கள்!’’
‘‘ம்...!’’
இருவரும் டென்ட் பக்கம் வந்தார்கள்.

‘‘மிஸ்டர் ராபர்ட்...’’
‘‘யெஸ்!’’
‘‘இன்றைக்கு ஒரு நாள் இங்கு தங்குங்கள். பாபா, உங்களை நாளைக்குப் போகச் சொல்லி
யிருக்கிறார். நாளைக்கு உங்களை மசூதிப்படி ஏறி, மேலே வரச்சொல்லி, அருகில் உட்கார வைக்கலாம். இன்று இருங்கள். நாளைக்கு உங்களுடைய எண்ணம் பூர்த்தியடையும்!’’
‘‘இல்லை, அது சாத்தியமே இல்லை. நான் இன்றைக்கே புறப்படுகிறேன்’’ என்றவாறே தன்னுடைய சாமான்களைப் பையில் அடைத்தார். அவர் புறப்படத் தயாராகிவிட்டார் எனத் தெரிந்தது.
‘‘ஆனால்...’’
‘‘பாபாவிடமிருந்து போக உத்தரவு வரவில்லை. அதுதானே? உங்களுடைய பாபா மேலே ஏறிவர உத்தரவும் கொடுப்பதில்லை... தவிர, ஷீரடியை விட்டுப் போகவும் அனுமதி கொடுக்கவில்லை. இதற்கு என்னவென்று சொல்வது? உத்தரவு வராவிட்டாலும் நான் போனால் என்ன ஆகும்?’’
‘‘இதற்கு முன், இப்படி உத்தரவு இல்லாமல் போனவர்களுக்கெல்லாம் கேடு நேர்ந்திருக்கிறது. அதைத் தடுக்கத்தான் உங்களை பாபா, போக வேண்டாம் என்றார்.’’
‘‘ஆச்சரியமாக இருக்கே’’ என்றவாறே, பையைத் தோளில் மாட்டிக்கொண்ட ராபர்ட், ‘‘தயவுசெய்து எனக்கு ஒரு டாங்காவை வரவழையுங்கள்’’ என்றார்.
‘‘நான் இன்னும் சொல்கிறேன்...’’
‘‘மாதவராவ்ஜி! எது நடக்கணுமோ அது நடக்கும். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? டாங்காவைக் கொண்டு வாருங்கள்...’’
கடைசியில் டாங்கா வந்தது. எல்லா சாமான்களையும் அதில் வைத்தார். பின்னால் உட்கார்ந்த ராபர்ட், ‘‘ஓ.கே. மாதவராவ். நீங்கள் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டீர்கள். நன்றி! சாயிபாபாவிற்கு என் நமஸ்காரத்தைச் சொல்லுங்கள். வருகிறேன்...’’

மாதவராவ் கவலையுடன் டாங்காவைப் பார்த்தார். குதிரை வண்டி ஷீரடியைப் பின்னால் தள்ளிவிட்டு, வேகமாகச் சென்றுவிட்டது.
முதலில் குதிரை ஒழுங்கான பாதையில்தான் சென்றது. பிறகு ஏரிப்பக்கம் வேகமாகப் போய்க்கொண்டிருந்தபோது எதிரில் வந்த சைக்கிள்காரன் மீது மோதியதில், குதிரை நிலைகுலைந்து, வண்டி பள்ளத்தில் இறங்கியது. வண்டி நிலைகுலைந்ததால் உள்ளேயிருந்த ராபர்ட் அடுத்த கணம் தூக்கியெறியப்பட்டார்.
ரோட்டில் விழுந்ததால் அவருக்கு எலும்புகள் நொறுங்கின. தலையில் அடி. உடம்பில் காயம் பட்டதால் ரத்தம் கசிந்தது. மேலேயிருந்து விழுந்ததால், சரிந்து சரிந்து உருண்டு கீழே போனார். டாங்கா கட்டுக்கடங்காமல் துள்ளியது. ஆனால் அங்கிருந்த ஜனங்கள் குதிரையை அடக்கினார்கள். வண்டிக்காரனும் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.
ஜனங்கள் ராபர்ட்டை தூக்கி, மறுபடி டாங்காவில் உட்கார வைத்தார்கள். காயமடைந்த இடங்களிலிருந்து ரத்தம் இன்னும் கசிந்தது.
‘‘பாபா! என்னை மன்னியுங்கள்... தயவுசெய்து மன்னியுங்கள். நான் இப்போது என் தவறை உணர்கிறேன்!’’ என்று ராபர்ட் அலறினார்.
குதிரை வண்டிக்காரன் ஆச்சரியத்துடன், பின்னால் திரும்பிப் பார்த்தான்.
‘‘ஆஸ்பத்திரி எங்கேயிருக்கு?’’ அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை மராத்தியில் கேட்டார்.
‘‘கோபர்காங்வில்...’’
‘‘அப்படியானால், வண்டியை அங்கு விடு!’’
‘‘சரி, எஜமானரே!’’
‘‘என்னப்பா, உனக்கு எங்காவது அடி பட்டதா?’’
‘‘இல்லை. நான் தினமும் காலையில் சாய்பாபாவிடம் உத்தரவு வாங்கிவிட்டுத்தான் வேலைக்குக் கிளம்புகிறேன்’’ என்றான் வண்டிக்காரன் சாந்தமாக. ராபர்ட்டின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.
(தொடரும்...)