வி.ஜ.பி : கு.அருணாசலம்






மினி பஸ்சில் ஏறி உட்கார்ந்த அந்த அழுக்குச் சட்டைப் பெரியவரிடமிருந்து வெளிப்பட்ட பிராந்தி வாடை பஸ்ஸையே குமட்ட வைத்தது. பிச்சை எடுப்பவர் போலிருக்கிறது. உள்ளே போன சரக்கு, பல முரட்டு வார்த்தைகளை அவரிடமிருந்து வெளியே கொண்டு வந்தது. பஸ்ஸில் பள்ளி மாணவர்களைக் கண்டதும் அவருக்குள் உற்சாகம் கரை புரண்டது.
‘‘அந்தக் காலத்துலயே நான் மூணாப்பு... அப்போ வாத்தியாருக்கு நாலணா சம்பளம்!’’
‘‘எம்ஜார் காலத்துல குவாட்டர் பன்னெண்டு ரூபாக்கு வித்துது.’’
‘‘தம்பி! நல்லா படிக்கணும். எஞ்சினியர், டாக்டர் ஆவணும். செல்போன் பேசக்கூடாது!’’
- இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாத பேச்சுகள் உரத்த குரலில் தொடர்ந்தன.
எனக்கு அவரைப் பார்த்து கவலை.
ஏற்கனவே, ‘‘சில்லறையா கொடுங்க... சில்லறையா கொடுங்க...’’ என எல்லோரிடமும் எரிந்து விழும் கண்டக்டர் இவரை எப்படியெல்லாம் பிறாண்டப் போகிறாரோ!
டென்ஷனோடு பக்கத்தில் வந்த கண்டக்டரைப் பார்த்து கொஞ்சமும் பயப்படவில்லை அந்த முதியவர். தன் மடியில் இருந்த பேப்பர் பொட்டலத்தை எடுத்து அவரிடம் நீட்டினார்.
‘‘தம்பி! கோவப்படாத... உடம்புக்கு வரப் போவுது. இதுல நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கு. எடுத்துக்கிட்டு ஒரு நூறு ரூபா நோட்டைத் தள்ளு!’’ என்றார்.
குடி முதியவர் இப்போது கண்டக்டருக்கு வி.ஐ.பியாகத் தெரிந்தார்!