டெக்னாலஜி : வி.சகிதா முருகன்





“ஏங்க, நம்ம தெருவுல புதுசா ஒரு பூக்காரி வந்திருக்கா. எல்லாரும் கையிலதானே முழம் போட்டுக் குடுப்பாங்க? இவ ஸ்கேல் வச்சு அளந்து பூ குடுக்கறா... ஏதோ கொஞ்சம் படிச்சவ போலிருக்கு. அதுக்காக அதை இப்படிக் காட்டணுமா! டெக்னாலஜி எல்லாரையும் மாத்திடுச்சு’’ என கிண்டலாக தன் கணவன் கதிரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சுகுணா.
சரியாக அப்போது அந்தப் புது பூக்காரி தெருமுனையில் பூக்கூடையுடன் வந்து கொண்டிருந்தாள்.
வழக்கமாக வரும் பூக்கார அம்மா இன்று வராததால், இன்று சுகுணா அவளிடம் பூ வாங்கினாள்.
அவள் கேட்ட இரண்டு முழம் பூவை பூக்காரி ஸ்கேல் கொண்டு அளப்பதை கதிரும் கண்கூடாகப் பார்த்தான்.
‘‘ஏம்மா... எல்லாரும் முழம்தானே போடுவாங்க. நீ ஏன் ஸ்கேலால அளக்குற?’’ - அடக்க மாட்டாமல் கேட்டுவிட்டான் கதிர்.
‘‘ஐயா, நான் கொஞ்சம் குள்ளம். என் கையால முழம் போட்டா ரொம்ப கம்மியா இருக்கும்னு யாரும் வாங்க மாட்டாங்க. அதனாலதான் ஸ்கேலால அளந்து கொடுக்கறேன். வேற ஒண்ணும் உள்நோக்கம் இல்லீங்கய்யா’’ என்றாள் பூக்காரி வருத்தமாக!
‘படிப்பும் இல்ல... பகட்டும் இல்ல... டெக்னாலஜியும் இல்ல! எதையும் நீயா முடிவு பண்ணாம கேட்டுத் தெரிஞ்சுக்க’ எனப் பார்வையாலேயே
மனைவிக்குப் பாடம் சொல்லிக் கிளம்பினான் கதிர்.