ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் கங்கணா ரனாவத் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் திடீரென ட்விட்டரில் ‘கங்கணாவின் அதிகாரபூர்வ பக்கம்’ என ‘மிஸ் கங்கணா’ என்ற பெயரில் ஒரு கணக்கு துவக்கப்பட்டது. பிரத்யேக போட்டோக்கள், பாலிவுட் பிரபலங்களுடன் கங்கணா இருக்கும் காட்சிகள் என ஒரிஜினல் போலவே தோற்றம் காட்ட, சில மணி நேரத்தில் 14 ஆயிரம் பேர் இந்த அக்கவுன்ட்டைப் பின்பற்றினர். கங்கணா பதறிப் போய் மறுத்தபோதுதான் இது போலி எனத் தெரிந்தது.

காதல் தோல்வியில் கண்ணீர் சிந்தும் பெண்களுக்கு மத்தியில், பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் செம ரகளையான கேரக்டர். மூன்று முறை பிரேக்கப் அனுபவித்த அவர், அந்த மூன்று பாய் ஃபிரண்ட்களையும் கிண்டல் செய்து பாடல் எழுதி, ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார்.

‘குயின்’ படத்துக்காக விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற இயக்குனர் விகாஸ் பெஹ்ல், அடுத்து இன்னொரு அதிரடியில் இறங்குகிறார். அவரது ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக தபு நடிக்கிறார். தபு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்கும் படம் இது. 42 வயது தபு, தன்னைவிட 9 வயது குறைவான ஷாகித்துக்கு ஜோடியாக நடிப்பது பாலிவுட்டையே பரபரக்க வைத்திருக்கிறது.

நடிகைகள் பலரும் ஒல்லியாக மாற ஆசைப்படும் நேரத்தில், அலியா பட் குண்டாவதில் ப்ரியம் காட்டுகிறார். ‘‘சாக்லெட், கேக் என இஷ்டத்துக்குச் சாப்பிடும் கேரக்டர் நான். ஆனால் ஒரு நடிகையாக தினம் தினம் எடை மெஷினில் ஏறி, கிராம் கணக்கில் எடை கூடினாலும் பதற்றமடைய வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு பட கேரக்டருக்காக குண்டாக வேண்டியிருந்தால், அதை சாக்காக வைத்து இஷ்டத்துக்கு சாப்பிடலாம்’’ என ஏக்கத்தோடு சொல்கிறார் அலியா.

மேடைகளில் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத பாடகி மைலி சைரஸின் அடுத்த புதுமை, உதட்டின் உட்புறம் டாட்டூ போட்டுக் கொண்டது. சோகமாக கண்ணீர் சிந்தும் ஒரு மஞ்சள் நிறப் பூனையை டாட்டூவாக வரைந்து, உதட்டு டாட்டூ ஃபேஷனை ஆரம்பித்து வைத்திருக்கிறார் மைலி.