எங்களுக்குள் என்ன உறவு?



மனம் திறக்கும் விஷால் - லட்சுமி மேனன்

‘‘கிளாமரா... ம்ஹும், மாட்டேன்’’ என்று லட்சியம் காத்து வந்த லட்சுமி மேனனுக்கு இப்போது
முத்தக் காட்சி கூட சர்க்கரைப் பொங்கலாகிவிட்டது. ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் விஷாலிடம் அவர் உதட்டோடு உதடு பேசிக்கொள்வதாக செய்திகள் றெக்கை விரிக்கின்றன. என்ன ஆச்சு லட்சுமிக்கு? ‘அக்கறையுடன்’ அவரை விரட்டிப் பிடித்தோம்...

‘‘ ‘நான் சிவப்பு மனிதன்’ல என்ன கேரக்டர் உங்களுக்கு?’’ ‘‘மீரான்னு ஒரு பணக்கார வீட்டுப் பொண்ணா நடிக்கிறேன். என்னோட கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள ஸ்கிரிப்ட்... அதனாலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச படமா இது ஆகிடுச்சு. விஷால் சாருக்கும் வித்தியாசமான கேரக்டர்.

ஏதாவது அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பார்த்தாலோ, கேட்டாலோ, தூக்கத்தில் ஆழ்ந்திடுற விநோத நோய் இருக்கிற கேரக்டர் அது. காலேஜ் பொண்ணான என்னையும், வேலை தேடிட்டு இருக்குற விஷாலையும் இணைக்குது சூழ்நிலை. எங்களுக்கிடையேயான காதல் பத்தி விரிவா சொல்ல முடியாது. ‘நான் சிவப்பு மனிதன்’ எனக்கு மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் ஸ்பெஷலா இருக்கும்...’’

‘‘படத்தில் இன்னொரு ஹீரோயின் இருக்காங்களே?’’
‘‘ஆமா. இனியா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கும் நல்ல கேரக்டர்தான். இதில யாருக்கு அதிக முக்கியத்துவம் என்கிற பட்டிமன்ற கேள்வியெல்லாம் வேண்டாம். கதை பிடிச்சிருந்தா ரெண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்னாலும் நடிக்கத் தயாரா இருக்கேன்.’’

‘‘இதே கொள்கைதான் கிளாமரா நடிக்கிறதுக்கும் வச்சிருக்கீங்களா?’’ ‘‘புரியலையே? ஓ... படத்தில் கிளாமரா நடிச்சிருக்கேன்னு வர்ற செய்திகளை வச்சி கேக்கறீங்களா? நிஜத்தில் நான் ரொம்ப கிளாமராவெல்லாம் நடிக்கலை. படம் பார்க்கும்போது அதைத் தெரிஞ்சுக்குவீங்க. கதைக்கு தேவைப்பட்டதால் முத்தக் காட்சியில் நடிச்சிருக்கேன். அந்தக் காட்சி எந்த வகையில் அவசியம்னு இயக்குனரும் விஷாலும் சொன்னாங்க. அதனால நடிக்க சம்மதிச்சேன். கதைக்குத் தேவைப்படாமல் நான் கிளாமரா நடிக்க மாட்டேன். அதில் இப்பவும் உறுதியா இருக்கேன்.’’

‘‘விஷாலுடன் உங்களுக்கு காதல். அதனாலதான் அவர்கூட முத்தக் காட்சியில் நடிச்சீங்கன்னு பேசிக்கிறாங்களே..?’’ ‘‘அப்படியா!? அது பத்தி நோ கமென்ட்ஸ். சசிகுமார், விக்ரம்பிரபு, விஷால், சித்தார்த், கௌதம் கார்த்திக்னு கொஞ்ச நாளிலேயே நிறைய ஹீரோக்களோட நடிச்சிட்டேன். இவங்கள்ல விஷால் சாரும் கௌதம் கார்த்திக்கும்தான் என் நெருக்கமான நண்பர்கள். ஸ்கூல் படிக்கிறப்போ எல்லாருக்குமே ஒரு குளோஸ் ஃபிரண்ட் இருப்பாங்களே... அது மாதிரி சினிமாவில் எனக்கு இவங்க. விஷாலை நான் காதலிக்கலை. அவர் என்னை காதலிக்கிறாரான்னு அவர்கிட்ட தான் கேட்கணும்’’ என்று முடித்துக்கொண்டார் லட்சுமி மேனன்.

‘விஷால்கிட்டதானே..? கேட்டுட்டாப் போச்சு’ - கடைசிகட்ட படப்பிடிப்பில் இருந்த விஷாலை சந்தித்தோம்... ‘‘லட்சுமி மேனனுடன் உங்களுக்கு காதலாமே?’’‘‘படத்திலதானே? அழகான, மனசுக்குக் கொக்கி போடுகிற மாதிரியான ஒரு பெண்ணை முதல் தடவையாப் பார்க்கும்போது அவ முகம், நடவடிக்கை எல்லாம் மனசில பதிஞ்சி மயங்கிடுவோம்ல. அப்படித்தான் இந்தப் படத்தில் லட்சுமி மேனனைப் பார்த்ததும் நிஜமாவே மயங்கி விழுந்திடுவேன். அவங்க குரல் மட்டுமே எனக்குள்ள பதிவாகியிருக்கும்.

 ஏன்னா, ‘லாக்கோலெப்ஸி’ என்கிற தூக்க வியாதி உள்ளவன் நான். நான் மயங்குறது, காதல் வர்றதெல்லாம் கதையில்தான். நிஜத்தில் லவ்வெல்லாம் இல்லை. ‘பாண்டியநாடு’ படத்தைவிட ரெண்டு மடங்கு கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. அடுத்த படத்திலும் எனக்கு ஜோடியா லட்சுமி மேனன் நடிக்க நான் விரும்புறேனோ இல்லையோ... படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பா விரும்புவாங்க.’’ ‘‘உங்களுக்காகத்தான் கிளாமரா நடிச்சாங்களாமே?’’

‘‘இல்லை. கதைக்காகதான் நடிச்சாங்க. அண்டர் வாட்டர் காட்சி ஒன்றிலும் இன்னொரு காட்சியிலும் அப்படி நடிச்சிருக்காங்க. அப்படி நடிக்க சம்மதிச்சதுக்காக லட்சுமி மேனனுக்கு ஹேட்ஸ் ஆஃப்! படத்தில் பெரிய பங்கு அவங்களுக்குத்தான் இருக்கு. அப்படியொரு கேரக்டர். நிஜத்தில் பிளஸ் ஒன் படிக்கிற பொண்ணு...

ஆனா, வயசுக்கு மீறிய பக்குவத்தில் லட்சுமி மேனன் உயர்ந்து நிற்கிறார். கிளாமர் இல்லாம சினிமா இல்லைதான். ஆனா, கெட்ட பேர் வாங்கக் கூடாது என்கிற ஒரு எல்லையோடு அதை நிறுத்திக்கணும். அந்த வகையில் நாங்க இந்தப் படத்தில் கிளுகிளுப்பா எந்தக் காட்சியையும் திணிக்கலை. கிளாமர்னு நீங்க சொல்ற அந்தப் பகுதிதான் படத்தோட ஆன்மாவா இருக்கும்.’’

‘‘ ‘விஷால் என்னோட குளோஸ் ஃபிரண்ட். அவர் என்னைக் காதலிக்கிறாரான்னு அவர்கிட்டதான் கேக்கணும்’ என்கிறாரே லட்சுமிமேனன்?’’ ‘‘இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதையே கூச்சமா நினைக்கிறேன். என் தயாரிப்பு நிறுவனத்தோட செல்லக் குழந்தை லட்சுமி. அவர் வயசுல நம்ம வீட்டில் ஒரு பொண்ணு இருந்தா எப்படிப் பழகுவோம்? அந்த உறவுதான் அவர்கிட்ட எனக்கு. அவரோட குளோஸ் ஃபிரண்ட் லிஸ்ட்டில் நான் இருந்தால் மகிழ்ச்சி. எங்கள் உறவில் நட்பைத் தாண்டி எதுவும் இருக்கக் கூடாதுன்னுதான் நான் விரும்புறேன்!’’

 அமலன்