நிழல்களோடு பேசுவோம்



கல்வி என்னும் தண்டனைமார்ச், ஏப்ரல் மாதங்களைப் போல திகில் நிரம்பிய மாதங்கள் எதுவும் இல்லை. பெற்றோர்கள், பிள்ளைகள் அனைவரும் ஏதோ இறுதித் தீர்ப்பு நாளில் கடவுளின் விசாரணையை எதிர்நோக்கியிருப்பதுபோல இந்த நாட்களில் இருப்பதை ஒவ்வொரு வருடமும் காண்கிறேன்.

 பெரும்பாலான வீடுகளில் யுத்தகால நெருக்கடிகளும் கெடுபிடிகளும் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. தேர்வுக் காலம் என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு அவசரநிலைக் காலம். இங்கு எல்லா அடிப்படை உரிமைகளும் ரத்து செய்யப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அநேக வீடுகளில் கேபிள் இணைப்புகளும் இணைய இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.

எனது நண்பரான பத்திரிகையாசிரியர் ஒரு வியப்பூட்டும் செய்தியைச் சொன்னார். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேர்வு காரணமாக பத்திரிகைகளுடைய சர்க்குலேஷன் கணிசமான வீழ்ச்சியைச் சந்திக்கிறதாம். அதாவது அநேக வீடுகளில் பத்திரிகை வாங்குவதையே நிறுத்திவிடுவார்களாம். தேர்வை எழுதும் மாணவரை, உலகத்தினுடைய மற்ற எல்லா தொடர்புகளிலிருந்தும் துண்டித்து விடுகிறார்கள். பெரும்பாலான மாணவர்கள், தங்களது விளையாட்டு, பொழுதுபோக்கு அனைத்திலிருந்தும் முற்றாக அகற்றப்பட்டு விடுகிறார்கள்.

வாழ்க்கையின் அத்தனை விதமான அர்த்தமும், வெற்றி தோல்விகளும், ஒருவர் தேர்வில் பெறும் மதிப்பெண்ணாக மாற்றப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு தேர்வு காலத்திலும் மனதை கசங்கச் செய்யும் ஏராளமான செய்திகள் வெளிவருகின்றன. சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தேர்வு சரியாக எழுதாததால் விரக்தி அடைந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ஷார்ஜாவில் இந்தியப் பள்ளிக்கூடத்தில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

நாமக்கல் அருகே ஒரு மாணவன் பிளஸ் 2 இயற்பியல் இறுதித் தேர்வை எழுதாததால் தற்கொலை செய்துகொண்டான். வேறொரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. சீனாவைச் சேர்ந்த ஒன்பது வயதான நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன், தேர்வில் 100 மதிப்பெண்கள் பெறுவதற்காக ஈடுபாட்டோடு படித்திருக்கிறான். ஆனால் 99 மதிப்பெண்களே பெற்றதால், தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள தனது வயிற்றில் ஊசிகளை குத்தி வைத்துக்கொண்டானாம்.

கல்வி சார்ந்த மன அழுத்தம் என்பது, இன்று உலகளாவிய பிரச்னையாக மாறிவிட்டது. தேர்வும் மதிப்பெண்களும் மிகப்பெரிய சமூக மனநோயாக மாறிவிட்டதைத்தான் இதுபோன்ற செய்திகள் காட்டுகின்றன. கடந்த இருபதாண்டுகளில் சமூகப் பொருளாதார சூழலிலும் கல்வி முறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இந்த சமூக நோய்க்கு முக்கியமான காரணம். உலகமயமாதல், தனியார்மயமாதல், நகரமயமாதல் காரணமாக கல்வி அமைப்பே மனிதர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே காரணியாக மாற்றப்பட்டு விட்டது.

ஒரு காலத்தில் உயர்கல்வி என்பது அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே சார்ந்திருந்த சமூகப் பிரிவினரின் அக்கறையாக இருந்தது. விவசாயிகளையும் கைவினைஞர்களையும் பெருவாரியாகக் கொண்ட ஒரு சமூகத்தில், பாரம்பரியத் தொழில்கள் மட்டுமே நீண்ட காலமாக மக்களின் கல்வியாக இருந்தது. அதற்குள் சாதியரீதியான ஒடுக்குமுறைகள், பாகுபாடுகள் முக்கிய பிரச்னையாக இருந்ததால், நவீனக் கல்வி ஒன்றே சமத்துவத்தையும் நீதியையும் கொண்டுவரும் என்று நம்பினோம்.

நவீன கல்வி, சாதியக் கொடுமைகளை குறிப்பிட்ட எல்லை வரை தகர்க்கவும் செய்தது. ஆனால் நவீன கல்வி என்பது வெறுமனே ஒரு கல்வி அல்ல. அது ஒரு பன்னாட்டு பொருளாதாரச் சூழலோடு ஒட்டுமொத்த சமூகத்தையும் பிணைக்கும் செயல். விவசாயம், கைத்தொழில் சார்ந்து நமக்கு மரபான ஒரு அறிவும் தொழில்நுட்பமும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக அந்த அறிவுதான் நமது சமூகத்திற்கு வாழ்வளித்து வந்தது.

ஆனால் நவீன கல்வி இந்தப் பாரம்பரிய அறிவையும் தொழில்நுட்பத்தையும் முற்றாகத் துடைத்து அழித்துவிட்டது. இன்று விவசாயம் அழிவின் விளிம்பிற்குச் சென்றிருப்பதற்குக் காரணம், விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது மட்டுமல்ல; விவசாயம் செய்யத் தெரிந்தவர்கள் பெருமளவு குறைந்து போய்விட்டார்கள். கால்நடை வளர்ப்பிலும் இதே நிலைதான். சர்வதேச சந்தைப் பொருளாதாரத்தின் வழியாக உள்ளூர் கைவினைஞர்கள் முற்றாக அழித்துத்துடைக்கப்பட்டு விட்டார்கள்.

இப்போது நாம் ஐ.டி நிறுவனங்களிலும் இன்ன பிற நவீன தொழில் துறைகளிலும் நிலவும் சாதிய உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நமது மரபான நன்மைகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டன; ஆனால் நமது மரபான தீமைகள் எல்லா தாக்குதல்களுக்குப் பிறகும் எப்படியோ உயிர்பெற்று எழுந்துவிடுகின்றன. நமது பழமையான தானியங்களையும் சிட்டுக்குருவிகளையும் நம்மால் பாதுகாக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு நவீனமயமாக்கலுக்குப் பிறகும் நமது சாதி, மத உணர்வுகள் முன்னைவிட மூர்க்கமாக உயிர் பெற்று எழுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பொருளாதார அமைப்பின் தேவைகளுக்கேற்ப சமூகத்தின் ஒட்டுமொத்த கல்வியையும் மாற்றியமைத்ததால், அந்த அமைப்பிற்குள் எப்படியாவது தங்களுக்கான இடத்தைப் பிடிக்க முழு சமூகமும் போராடிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதும், சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்வதும் அல்லது எந்த வேலையும் தெரியாதவர்களாக இருப்பதும் நமது காலத்தில், நமது தேசத்தின் மாபெரும் வரலாற்று அவலம்.

இருந்தும் நவீன கல்வி சார்ந்த தொழில் துறைகளை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இந்த கல்வி முறை சார்ந்த போட்டி, மக்களுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறது. மதிப்பெண்களை அவர்கள் வாழ்வா, சாவா போராட்டமாக எடுத்துக்கொள்கிறார்கள். மாணவர்கள் மேல் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. தனியார் கல்வி வியாபாரிகள் இந்த நெருக்கடியை வெகு திறமையாகக் கையாளுகிறார்கள். மதிப்பெண்களுக்காக மாணவர்களை சாட்டையால் அடிப்பதை தங்கள் கல்வி நிறுவனத்தின் சாதனையாகவும் பெருமையாகவும் முன்னிறுத்துகிறார்கள்.

இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால், மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்க இவ்வளவு நெருக்கடிகள் தரும் ஒரு நாட்டில் ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தகுதியற்ற ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. பள்ளி ஆசிரியர்களின் தகுதி சோதிக்கப்பட வேண்டும் என்று 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உத்தரவிட்டது.

தமிழக அரசின் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது. ஆனால் இதில் 99 சதவீத ஆசிரியர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வின்போது பதிலளிக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழும் ஆசிரியர்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்தன. இவ்வாறு கற்பிப்பதற்கான தகுதித் தேர்வைக்கூட எட்ட முடியாத ஆசிரியர்கள் என்னவிதமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பார்கள்?

பரீட்சைத் தேர்வுத்தாள்கள் எப்படி திருத்தப்படுகின்றன என்று சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு ஆசிரியை ஒரு இசைக் கச்சேரியை கேட்டுக்கொண்டே பரீட்சைத்தாளை திருத்துகிறார். இன்னொரு ஆசிரியர் திருத்தவேண்டிய பரீட்சைத்தாள்களை அவரது மனைவிதான் திருத்துவாராம். வேறொரு ஆசிரியரின் 6ம் வகுப்பு படிக்கும் மகள், தனது அப்பா வீட்டில் கொண்டுவந்து போடும் 10ம் வகுப்பு மாணவர்களின் பரீட்சைத் தாள்களை திருத்தி மதிப்பெண் போட்டுத் தருவாராம். இப்படி எண்ணற்ற அலட்சியங்களையும் மோசடிகளையும் அந்தக் கட்டுரையில் விவரிக்கிறார்.

தகுதியற்ற ஆசிரியர்கள், பொறுப்பற்ற மதிப்பீட்டு முறை, எந்த உத்தரவாதமும் தராத கல்வி முறை... இதற்காகவா நம் குழந்தைகளை நாம் இவ்வளவு வதைக்கிறோம்? இவ்வளவு மனநெருக் கடிகளை அவர்களுக்கு உருவாக்குகிறோம்? ஒரு பைத்தியக்காரத்தனமான கல்விச் சூழலின் பலியாடுகளாக நம் குழந்தைகளை மாற்றி விட்டோம். ஒரு அர்த்தமற்ற போட்டியில் நம் குழந்தைகள் தோல்வியடையக் கூடாது என்ற ஆவேசத்தில், அவர்களை பைத்தியமாக்கி தற்கொலைக்குத் தூண்டிக்கொண்டிருக்கிறோம். இந்த தேர்வுக் காலத்தின் பதற்றங்கள் எவ்வளவு அர்த்தமற்றவை என்று நாமே வெட்கப்படும் நேரம் ஒன்று வரும்.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

கூட்டணி இல்லாமல் பல கட்சிகள் தவிக்கின்றனவே?
- எஸ்.மோகன், கோவில்பட்டி
தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இது இருண்ட காலம்.
கூட்டணிகள் எங்கு உருவாகின்றன, எங்கு உடைகின்றன?
- எம்.சம்பத்,
வேலாயுதம்பாளையம்.
அப்பத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் இடத்தில்...
உங்களால் திருத்திக்கொள்ள முடியாத பழக்கம் எது..?
- மு.மதிவாணன், அரூர்.
மனிதர்களிடம் எவ்வளவு ஏமாந்த பிறகும் மனிதர்களை நம்புவது!
ஒருவரின் கண்களைப் பார்த்தே அவரின் குணத்தைக் கண்டுபிடித்துவிடமுடியுமா?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
முடியும், உங்களால் சரியாகப் பார்க்க முடிந்தால்!
ஒரு எழுத்தாளன் நன்றாக எழுத அவனுக்குத் தேவை சராசரி உணவா, சத்தான உணவா?
- மு.ரா.பாலாஜி,
கோலார் தங்கவயல்.
ஒரு எழுத்தாளனைப் பற்றி இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்கும் ஒரே சமூகம் உலகத்திலேயே தமிழ்ச் சமூகம்தான்.

நெஞ்சில் நின்ற வரிகள்

மிஷ்கினின் ‘நந்தலாலா’ படத்தைத் திரையிடலுக்கு முன் அவருடையை அறையில் எனக்குப் போட்டுக் காட்டினார். அதன் டைட்டில் பாடலைக் கேட்டபோது மனம் பெரும் துயரத்தில் அழுந்தியது. அநாதைத் தன்மையைப் பற்றியது அந்தப் பாடல். இந்த உலகின் மிகக் கொடிய உணர்ச்சி, இந்த அநாதைத் தன்மை. வாழ்வில் ஏதாவது சில தருணங்களில் ஒவ்வொருவருமே அநாதைகளாக உணர்வோம். ஆனால் அதையே ஒரு வாழ்வாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின் தனிமையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அநாதையாக தம்மை உணரும் ஒவ்வொருவரையும் இறுக அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

ஒண்ணுக்கொண்ணு
துணை இருக்கும் உலகத்துல
அன்பு ஒண்ணுதான் அநாதையா
அன்பு ஒண்ணுதான் அநாதையா

யாரு இதை கண்டுகொள்வார்...
கைகளிலே ஏந்திக் கொள்வார்...
சொந்தம் சொல்ல யார்
வருவார்...அன்புக்கு யார் அன்பு செய்வார்...

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்


ஃபேஸ்புக் உரையாடல்களின் ஒரு பிரமாண்ட களம். எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் பெண்கள் தினத்தன்று இன்னொருவரது கருத்துக்களை மேற்கோள் காட்டி எழுதிய அழுத்தமான குறிப்பு இது:
வாழ்த்து அட்டைகள், புதிய உடைகள், வாழ்த்துக்கூறல்கள், சாக்லெட்டுகள் என்று உலக உழைக்கும் மகளிர் தினம் மாறிவிட்டது. உழைக்கும் என்ற வார்த்தை புதிதாகத் தொற்றியது போலத் தோன்றலாம். அதற்கு ஒரு அரசியல் இருக்கிறதுதானே. உழைக்காமல் ஒரு ஆண் இருக்க முடியும். ஆனால் ஒரு பெண் அப்படி இருப்பது சாத்தியமே இல்லை.

அதனால் இது சாலப் பொருத்தமே. பிள்ளை பெறும் எந்திரமாய், அழகுப் பதுமையாய் ஒளித்து வைத்து வளரும் பெண்களைப் பார்த்தால் பாவமாய்தான் இருக்கிறது. மனிதகுலம் பரிணாம வளர்ச்சியில் வேறு தளத்தில் பயணிக்கையில் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களைப் போலவோ, பழங்குடியினர் போலவோ பின்தங்கி விடுவார்கள். இன்னும் மோசமாகக் கூட இருக்கலாம் இல்லையா என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.

பெண் குழந்தைகளை ஆண்களை போல வளர்க்க வேண்டும் என்றார் பெரியார். என்னைக் கேட்டால் ஆணை விட ஒருபடி மேலே தெனாவெட்டாக வளர நாம் அவளுக்கு உதவ வேண்டும். முக்கியமாக வயதுக்கு வந்த பிறகு பெண்களை வீட்டுக்குள்ளே உட்காரவே விடக் கூடாது. பொருளாதாரரீதியாக சுயேச்சையாக இருக்குமாறு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

எனக்கு ஒரு ஆசை. சென்னையில் பெண்கள் டீக்கடையில் கேஷுவலாக கூட்டமாக வந்து பஜ்ஜி சாப்பிட்டு ஸ்டிராங்காக டீ குடிக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா?
by Mani Naanmani நான் டீக்கடையில் மணி சொல்வதைபோல கிளாஸில்தான் டீ வேண்டுமென்று கேட்டுக் குடிக்கிறேன். எல்லாப் பெண்களும் எந்த கூச்சமின்றியும் அப்படி டீக்கடையில் நிற்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.

https://www.facebook.com/chandra.thangaraj.5

மனுஷ்ய புத்திரன்