நேத்து கட்டினோம்... இன்று இடிச்சோம்!



சிவகாசியில் ‘ஒரு நாள் கோயில்’கள்


கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி காலமெல்லாம் சாமி கும்பிடுவதுதான் உலக வழக்கம். ஆனால், கட்டிய கோயிலை வழிபாடு செய்து மூன்றே நாட்களில் இடிக்கும் வழக்கத்தை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள் சிவகாசிவாசிகள். என்னவோ மணல் விளையாட்டு போல கட்டிக் கட்டி இடிக்கும் இந்த நடைமுறையை ‘தெருக்கட்டுப் பொங்கல்’ என்கிறார்கள்.

பட்டாசு ஆலை, பிரின்டிங் பிரஸ் போன்றவற்றுக்கு மட்டுமல்ல... குலதெய்வ வழிபாட்டிலும் சிவகாசி மக்களை மிஞ்ச ஆளில்லை. மாசி மாதம் முழுவதையுமே குலதெய்வ வழிபாடுகளுக்காக டெடிகேட் செய்யும் இவர்கள், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு தெருவிலும் தெருக்கட்டுப் பொங்கலை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

‘‘இந்த விழா எப்படி தொடங்கினுச்சுன்னு தெரியாது தம்பி... ஆனா, எனக்கு தெரிஞ்சு 50 வருஷமா கொண்டாடிட்டு வர்றோம்’’ என உற்சாகம் பரப்புகிறார் சிவகாசி நேஷனல் காலனியைச் சேர்ந்த எஸ்.வி.கே.செல்வராஜ். ‘‘மாசி மாசத்துல ஏதாவது ஒரு வாரம் இந்த விழாவைக் கொண்டாடுவோம். இது இங்குள்ள எல்லா தெருக்கள்லயும் நடக்கும். முதல்ல தெருவுல இருக்கிற எல்லா வீடுகள்லயும் வரி பிரிப்போம். முளைப்பாரி எடுக்கிற பெண்கள் விரதம் இருப்பாங்க. பிறகு, தெருவுல எல்லாருக்கும் பொதுவான ஒரு இடத்தை சுத்தப்படுத்தி, அங்க விளக்கு ஏத்துவோம்.

இங்க வசிக்கிற பெண்கள் எல்லாரும் சேர்ந்து, அந்த விளக்கை அம்மனா நினைச்சு கும்மி அடிச்சு பூஜை செய்வாங்க. பிறகு வெள்ளிக்கிழமை காலையில விளக்கு வச்சு, சாமி கும்பிட்ட இடத்துல சின்னதா ஒரு கோயில் கட்டுவோம். பூடமாக இருக்கும் அம்மன், மறுநாள் முத்தாலம்மனா மாறிடுவா. அவளுக்கு கோழியோட கால் ரத்தத்துல கண்திறப்பு நடத்துவோம்!’’ என்கிறார் அவர்.

இந்த விழாவுக்காக கையில் காப்பு கட்டி ஒரு வாரம் விரதம் இருக்கிறார்கள் பெண்கள். செங்கல் அடுக்கி, செம்மண் குழைத்து கோயில் கட்டத் துவங்குவது வெள்ளிக்கிழமை என்றாலும், அம்மனின் உருவம் அமைக்கப்படுவது சனிக்கிழமை இரவில்தான். இதில் மாரியம்மன், முத்தாலம்மன் என ஒவ்வொரு தெருக்காரர்களும் தங்களுக்குப் பிடித்த அம்மனின் திருவுருவைச் செய்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த உருவும் செம்மண்ணால் ஆனதே! முளைப்பாரி ஊர்வலம், அன்னதானம் என களைகட்டும் விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, கட்டிய கோயிலை உடைத்து சாமியைக் கிணற்று நீரில் கரைத்து விடுகின்றனர்.

‘‘சனிக்கிழமை ராத்திரி பெண்கள் எல்லாரும் சேர்ந்து சாமிக்குப் படையல் போடுவோம். கோழி, கருவாடு, முட்டைன்னு எல்லாத்தையும் படைச்சு சாப்பிடுவோம். இதுல ஆண்கள் யாரும் கலந்துக்கக் கூடாது. மறுநாள் முளைப்பாரி ஊர்வலம் எல்லாம் முடிஞ்ச பிறகு எல்லாரும் வீட்டுக்குப் போயிருவோம். அப்பறம் வயசான பெண்கள் மூணு பேர் சேர்ந்து, அம்மன் சிலை இருக்கிற மண்ணை ஒரு பிடி மட்டும் எடுத்து தனியா ஒரு துணியில கட்டி வச்சிருவாங்க. இதை அந்தப் பெண்களைத் தவிர வேற யாருமே பார்க்கக் கூடாதுங்கிறது நாங்க கடைபிடிக்கிற ஐதீகம்.

அப்பறம் அம்மன் சிலையை கிணத்துல கரைச்சிருவாங்க. கோயிலை இடிச்சிருவாங்க. எடுத்து வச்ச அந்த ஒரு பிடி மண்ணை அப்படியே பத்திரமா வச்சிருந்து, அடுத்த வருஷம் கோயில் கட்டுறப்போ அந்த மண்ணோட கலந்துடுவாங்க’’ என்கிறார் மலர்கொடி. ஒவ்வொரு வருஷமும் தெருக்கட்டு பொங்கலுக்காக விரதம் இருந்து அங்குள்ள பெண்களை வழிநடத்துபவர் இவர்.

‘‘அம்மன் பிறந்து 24 மணி நேரத்துக்குள்ள அழியறதுதான் இந்தத் திருவிழாவோட விசேஷமே. இப்படிக் கும்பிடறதால நோய், நொடி எல்லாம் பறந்து போயிருதுப்பா. கேட்டதெல்லாம் கொடுக்குறா எங்க முத்தாலம்மன். குழந்தையில்லாதவங்க விரதம் இருந்து, குழந்தை பாக்கியம் கிடைச்சிருக்கு. தங்களோட குழந்தைகள் எல்லாம் எந்தக் குறையும் இல்லாம வாழணும்னு பெத்தவங்க வேண்டிக்கிட்டது நடக்குது. இப்படி சொல்லிட்டே போகலாம்’’ என அம்மன் அருளை விவரிக்கிறார் அந்தத் தெருவில் வசிக்கும் உஷாதேவி பக்தியுடன்.

சிவகாசியைச் சேர்ந்த கவிஞர் திலகபாமாவும் இதே பகுதியில் வசிப்பவர்தான். ‘‘20 வருஷத்துக்கு முன்னாடி, புது மருமகளா சிவகாசிக்கு வந்தப்ப என்னை வியக்க வச்ச திருவிழா இது. எந்த வித வைதீக நடைமுறையையும் கையிலெடுக்காத விழான்னுகூட இதைச் சொல்லலாம். இதோட ஸ்பெஷலிட்டியே எல்லா சாதி, சமயத்தைச் சேர்ந்தவங்களும் கலந்துக்கறது தான். தெருவுல வசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்து தெருவே கூடி நின்னு நடத்தி ஒற்றுமையை நிரூபிப்பாங்க’’ என்கிறார் அவர் நெகிழ்ச்சியாக.  

- பேராச்சி கண்ணன்
படங்கள்: பா.கார்த்திகேயன்