சிரமங்களை ரசிக்கிறார் விக்ரம்!



ஷங்கரின் ‘ஐ’ ஸ்பெஷல்

“எப்படியிருக்கும் ‘ஐ’? விக்ரம் அதில் எப்படி இருப்பார்?’’ - எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறது கோலிவுட். ‘‘எப்போ சார், ‘ஐ’ ரிலீஸ்?’’ என்ற கேள்வி துரத்தியபடியே இருந்தாலும், அந்தப் பதற்றம் துளியும் காட்டாமல், ‘இந்த வெயிலுக்கு இளநீர் நல்லது’ என சிபாரிசு செய்துவிட்டு, என்னிடம் பேசத் தயாராகிறார் டைரக்டர் ஷங்கர். தமிழ் மக்கள் ரசித்து ரசித்துக் கொண்டாடுகிற பிரம்மாண்ட இயக்குநர்.

‘‘நானே என் படத்தைப் பற்றிச் சொல்லிக்க கூச்சமாயிருக்கு. ஆனால், பெரிய எதிர்பார்ப்பு எல்லா இடத்திலும் இருக்கு. நிச்சயம் எதிர்பார்ப்பை நிறைவு பண்ணும். அடுத்த கட்டம் போற அளவுக்குக் கூட வொர்க் அவுட் ஆகும். அப்படி ஒரு நம்பிக்கை எனக்குள் இருக்கு!’’ - என தீர்மானமாகப் பேசும் ஷங்கரின் டிராக் ரெக்கார்டுகள் வியப்பூட்டுபவை. மேலே, உயரே, உச்சியிலே என எகிறிக்கொண்டு இருக்கிறது ஸ்டேட்டஸ். ‘‘ ‘ஐ’..?’’

‘‘ரொமான்டிக் த்ரில்லர். என்னோட பிற படங்களின் சாயல் இருக்காது. அதே சமயத்தில் என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதெல்லாம் இருக்கும். சோஷியல் பிராப்ளம் தவிர, நடுவில் ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’ செய்திருக்கேன். சயின்ஸ் ஃபிக்ஷன் போயிருக்கேன். இதில், இது வரைக்கும் போகாத ரூட். ‘எந்திர’னில் சில விஷயங்கள் செய்து பார்த்திருக்கோம். ‘ஐ’யில் மேக்கப் பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கு. வேட்டா ஸ்டுடியோவில் பேசினோம். முன்னே கூட அவங்ககிட்ட பேசியிருக்கேன்.

அப்ப அவங்க பயங்கர பிஸி. ‘ஹாபிட்’ படத்தில் இருந்தாங்க. இப்ப மறுபடியும் ‘ஐ’ படத்திற்கான தேவைகள் குறித்து தொடர்பு கொண்டபோது, ‘ஆஹா... இதுல எங்களுக்கே தூண்டுதலா சில விஷயங்கள் கிடைக்குது... கண்டிப்பா செய்யறோம்’னு சொன்னாங்க. அவங்க பண்ணியிருக்கும் அந்த விஷயங்கள்தாங்க, ‘இந்திய சினிமா, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத’ காட்சிகளா வந்திருக்கு. கதையும் இந்த பட்ஜெட்டை, விஷுவலை, மேக்கப்பை டிமாண்ட் செய்தது.

சீனாவில் கால்வாசி படத்திற்கு மேல் படமாக்கியிருக்கோம். ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்தில சீனாவுக்கு ‘டேக் ஆஃப்’ ஆயிடுவோம். இன்டர்வெல் வரைக்கும் படம் அங்கேதான். சீனாவில் படம் எடுக்கிறது கஷ்டம். நம்ம ஆளுங்க மாதிரி பணிவாக, அன்பாகக் கூட இருப்பாங்க. ஆனால், சமயங்களில் எல்லா இடத்திலும் கண்ணுக்குத் தெரியாத டென்ஷன் உருவாகும். அங்கேயிருந்த ஒவ்வொரு நாளும் மிஷன் மாதிரிதான். தேடி எடுத்த லொகேஷன்கள் அப்படி. வழக்கமான இடங்களை பார்க்க வைக்க விரும்பலை. தேவைப்பட்ட இடங்களை நானே தேடிப் போனேன். சீனாவில் பெரிய பூக்கள் நிறைந்த ஃபீல்டு இருக்கு. உங்களுக்கு ‘அந்நியன்’ ஆம்ஸ்டர்டாம் தோட்டம் ஞாபகம் வருமே... அதையெல்லாம் தாண்டி ஒரு இடம். அதை ‘நண்பன்’ படம் பண்ணும்போதே பார்த்திட்டு வந்திட்டேன்.

ஒவ்வொரு இடமும் தூரம். நிறைய டிராவல்... கார், படகுன்னு க்ஷ்தாண்டிப் போக வேண்டியிருக்கும். போக வர வசதிகள் இருக்க, அதெல்லாம் டூரிஸ்ட் ஸ்பாட்டும் இல்லை. ‘மென் இன் ப்ளாக்’கில் வேலை பார்த்த மேரி வாட், இதில் ஒரு பாடல் பண்ணியிருக்காங்க. அதெல்லாம் பார்க்க பெரிய ட்ரீட். தற்பெருமை போல எடுத்துக்காதீங்க... அற்புதமாக வந்திருக்கு ஃபைனல் ரிசல்ட்!’’
‘‘விக்ரம் இதில் காட்டியிருக்கிற கெட்டப், வித்தியாசம் எல்லாம் இதுவரை இந்திய சினிமா கண்டிராத சோதனை முயற்சி. அவர் சம்மதிச்சது எப்படி? பரஸ்பரம் நம்பிக்கையா? அல்லது உங்களில் யாருக்காவது இதை செய்தே ஆகணும் என்ற விருப்பமா?’’

‘‘நல்ல கதை... எந்த நடிகரும் ‘இதை நான் செய்யணும்’னு ஆசைப்படுகிற கதை. அவர் கேரியரில் இன்னும் ‘பளிச்’னு சொல்லக்கூடிய விஷயம். எல்லா நடிகரும் ஆசைப்படலாம்... ஆனால், எல்லா நடிகரும் பண்ண முடியுமான்னு தெரியலை. ஈஸியும் கிடையாது. அப்படிச் செய்தால் அவர்கள் சில தியாகங்களுக்குத் தயாரா இருக்கணும். குறிப்பா, ஒரே நேரத்தில் இரண்டு படம் செய்ய முடியாது. இதில் உண்டான பெரிய சிரமங்களைக் கடந்துதான் வரணும்.

‘இந்தக் கதை, இது மாதிரி இனி எனக்கொரு வாய்ப்பு கிடைக்குமா சார்’னு விக்ரம் அடிக்கடி சொல்லுவார். ரொம்ப நெகிழ்ந்து போயிருக்கேன். கூடவே, எனக்கு டென்ஷனா இருக்கும். அவர் ஜாலியா இருப்பார். ‘நான் ஒவ்வொரு நாளும் சந்தோஷமா இருக்கேன்’னு சொல்வார். இவ்வளவு சிரமங்களைக்கூட சந்தோஷமா மாற்றுகிறார். ‘யாரும் செய்யாததை செய்றோம். ரசிச்சுப் பண்றோம்’ங்கிற மனோபாவம் அது.

அது ஒரு பிரத்யேகமான கேரக்டர். அதற்கு உடல் மாற்றம் கூட அவசியமா படலை. அவரேதான் ‘இந்த கேரக்டருக்காக உடம்பை இளைச்சுக்கிறேன்’னு சொன்னார். ‘அவசியமில்லை, அதை மேக்கப்ல சரி பண்ணிக்கலாம்’னுதான் நான் சொன்னேன். ‘இல்லை, உடம்பை இறக்கிடுறேன்’னு சொன்னார். யோசிச்சுப் பார்த்தேன். ‘அது படத்துக்கு கூடுதல் பலம்தான்... நல்லது தான். ‘ஓகே... ரைட்’னு சொல்லிட்டேன். ‘ஆனா, ஒரு விஷயம்...

 உங்க ஹெல்த்தான் முதல்ல... அப்புறம்தான் படம். உடம்பை பாதிக்கிற மாதிரி போயிட வேண்டாம்’னு சொன்னேன். ‘இல்லை சார், பாதிக்காத மாதிரி பண்றேன்’னு அவர்தான் சொன்னார். அவர் மனைவிகிட்டே, ‘நான் சொல்லலைங்க, அவர்தாங்க ஆர்வமா எடுத்துப் பண்றார்... அவர் ஹெல்த்தை பார்த்துக்கங்க’னு சொன்னேன். ‘சார், அவர் ஹேப்பியா இருக்கிறார்’னு அவங்க சொன்னது ஆறுதல்.

அப்புறம் நியூஸிலாந்திலிருந்து எனக்கு போன். மேக்கப் பண்றவங்க, ‘சார், உங்க ஆர்டிஸ்ட் ‘ஹெட் ஷேவ்’ பண்ணிப்பாரா... எங்களுக்கு மேக்கப் ஈஸியாகிடும்’னு சொன்னாங்க. எனக்கு விக்ரம் செய்வார்னு தெரியும். ஆனால், நாம் எல்லாத்தையும் ‘கிரான்டட்’டா எடுத்துக்கக் கூடாது இல்லையா? அதனால அவருக்கு போன் பண்ணிச் சொன்னேன். ‘சார், இந்தப் படத்திற்காக எதையும் செய்வேன்’னு சொன்னார். எனக்கு நெகிழ்ச்சியாகி விட்டது. இப்படியொரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, அது எப்படியொரு கொண்டாட்டம்!

அது மட்டுமில்ல... நாங்க விதவிதமா சாப்பிடுவோம். விக்ரம் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில இரண்டு, மூணு காய்கறி வகைகளை சுரண்டி சாப்பிட்டுக்கிட்டிருப்பார். சந்தேகமேயில்லை, விக்ரமின் சிரமத்திற்கு, ஆர்வத்திற்கு, உழைப்பிற்கு, நடிப்புக்கு, பெரிய பலன் கிடைக்கும்!’’ எமி ஜாக்சன்... ஏ.ஆர்.ரஹ்மான்... குடும்பம்... கிசுகிசு...

ஷங்கரின் அதிரடி பதில்கள் அடுத்த இதழிலும்...

நா.கதிர்வேலன்