பொம்மை



ரேகாவின் செல்போன் ஒலித்தது... அலுவலகத்திலிருந்து அவள் கணவர் அசோக்தான் பேசினார். ‘‘நம்ம அழகப்பன் மகளுக்கு சின்னதா ஆக்ஸிடென்ட். மாடியில இருந்து தவறி விழுந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம். நம்ம ஷிவானி வயசுதான் அவளுக்கு, செகண்ட்தான் படிக்கிறா. பாவம்! நான் பர்மிஷன் கேட்டுட்டு சீக்கிரமே வர்றேன். நீயும், ஷிவானியும் ரெடியா இருங்க. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துட லாம்...’’

‘‘ஷிவானிக்கு டியூஷன் இருக்கேங்க... அவளும் வரணுமா? நீங்க மட்டும் போகலாமே!’’
‘‘ப்ச்... எல்லாரும் போய் பார்த்துட்டு வந்தாதாம்மா நல்லாயிருக்கும்...’’
‘‘சரிங்க!’’

போகும் வழியில் ஷாப்பிங் சென்டரில் டூவீலரை நிறுத்தி பெரியதாக பொம்மை ஒன்று வாங்கினார் அசோக். ‘‘உடம்புக்கு முடியாதவங் களை பார்க்கப் போறப்ப ஆப்பிள், ஆரஞ்ச், ஹார்லிக்ஸ்னுதான் வாங்குவாங்க. நீங்க எதுக்கு பொம்மை வாங்கறீங்க?’’ - கிண்டலாகக் கேட்டாள் ரேகா. ‘‘பொதுவா குழந்தைகளுக்கு விளையாட்டு தான் உயிர்.

சாப்பாடெல்லாம் மல்லுக் கட்டிதான் ஊட்டணும். அடிபட்ட குழந்தைக்கு நாம என்ன ஆறுதல் சொல்ல முடியும்? அதான், அவ வயசுள்ள நம்ம ஷிவானியக் கூப்பிட்டேன். அவ கொடுக்காத நம்பிக்கையைக் கூட ஒரு பொம்மை அந்த குழந்தைக்குக் கொடுக்கட்டும்னு தான் பொம்மை வாங்கினேன்...’’புரிந்துகொண்டாள் ரேகா!    *

பெ.பாண்டியன்