தேர்தல் பிசினஸ்



புத்திசாலிகளால் மணலிலும் கயிறு திரிக்க முடியும். அப்படிப்பட்டவர்களே இப்போது ஆன்லைன் வர்த்தகத்தில் கலக்குகிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களின் பிசினஸ் ஓஹோ! முன்பெல்லாம் தலைவர்கள் படம் போட்ட வாழ்த்து அட்டைகள், கீ செயின் ஸ்டிக்கர் என பிளாட்பாரங்களில் குவித்து விற்பார்களே... இப்போது அவை வேறு வடிவங்களில் மாடர்னாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. டி.ஷர்ட், சுவர்க் கடிகாரம், போன், மவுஸ்பேட், காபி கோப்பை என இவற்றின் பிசினஸ் அனல் பறக்கிறது.

இந்த பிசினஸில் முன்னோடி என்னவோ பாரதிய ஜனதா கட்சி தான். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததுமே, அவரை ஒரு நுகர்பொருளாக சந்தைப்
படுத்தும் காரியத்தில் இறங்கி விட்டார்கள். www.thenamostore.com என்ற இணையதளம் இதையே பிரதான வேலையாக வைத்திருக்கிறது. மோடியின் படம் அச்சடித்த ஏராளமான பொருட்களை இந்த இணைய தளம் விற்கிறது.

இதில் பெரிய லாப நோக்கம் இல்லை. விற்கப்படும் ஒவ்வொரு பொருளும் மறைமுகமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறது என்ற தாத்பரியத்தை இவர்கள் புரிந்து வைத்திருப்பதால், மற்றவர்கள் மோடி பிராண்டை பயன்படுத்தவும் தடை சொல்லவில்லை. அவர்களின் தயாரிப்புகளையும் இந்தத் தளத்தில் விற்றுத் தருகிறார்கள். மோடி டி-ஷர்ட்கள்தான் இந்தத் தளத்தில் அதிகம் விற்கிறது. 199 ரூபாய் முதல் 349 ரூபாய் வரை விலை.

மோடியை சிங்கம் போல காட்டும் படங்கள், டீ கிளாஸ்களை கம்பீரமாக அச்சிட்ட ஷர்ட்கள் பெரிய ஹிட். மணிக்கட்டில் அணிந்து கொள்ளும் பட்டையாகவும், பென் டிரைவாகவும் டூ-இன்-ஒன் வேலையைச் செய்யும் 4 ஜி.பி. பென் டிரைவ் 450 ரூபாய். மோடி உருவம் பொறித்த வெள்ளி நாணயம் 799 ரூபாய். இவற்றின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதில்லை. நரேந்திர மோடி துவக்கியிருக்கும் பெண் குழந்தைகள் நலத் திட்டத்துக்கு இந்த நிதி போகிறது.

இந்த விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனம், bluegape.com. இவர்கள் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி ஆகிய இரண்டுக்குமே பொருட்களைத் தயாரித்து விற்கிறார்கள். ‘‘இந்தியாவில் 81 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய இலக்கு இந்த அத்தனை பேரும்தான்’’ என பாசிட்டிவ்வாகச் சொல்கிறார் இந்த நிறுவனத்தின் தலைவர் சஹில் பாக்லா. இவர்கள் நரேந்திர மோடிக்கு 132 பொருட்களும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 155 பொருட்களும் விற்கிறார்கள்.

இந்தத் தளத்தில் மோடி காபி கப்கள் 13 மாடல்களில் கிடைக்கின்றன. 349 ரூபாயிலிருந்து விலை ஆரம்பிக்கிறது. மோடி உருவமும் பி.ஜே.பியின் தாமரை சின்னமும் அச்சிட்ட ஸ்டைலான மவுஸ் பேட்கள் 199 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. லேப்டாப் கவர் 299 ரூபாய். இதிலும் கிட்டத்தட்ட 30 மாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மாடர்ன் ஆர்ட்டாக மோடியின் உருவம் தரித்திருக்கிறது. குஷன் கவர், சுவர்க் கடிகாரம், டி-ஷர்ட் என எல்லாவற்றிலும் எண்ணற்ற மாடல்கள். ‘எல்லோரும் நல்லதையும் பார்க்கலாம்; கெட்டதையும் பார்க்கலாம். நல்லதையே பார்க்கத் தீர்மானித்தவர்களே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்’ என்பது போன்ற மோடி மந்திரங்கள் வாசகங்களாக இவற்றில் இருக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியின் பொருட்கள் கவர்ச்சிகரமான வாசகங்களோடு, கெஜ்ரிவாலை பல்வேறு அவதாரங்களில் காட்டுகின்றன. ‘நீ காண விரும்பும் மாற்றமாக நீயே இரு’, ‘ஏற்கனவே நாம் 67 ஆண்டுகள் லேட்’, ‘நான் இப்போது அரசியலை விரும்புகிறேன்’, ‘முதலில் அவர்கள் உங்களை அலட்சியம் செய்வார்கள்; அப்புறம் சிரிப்பார்கள்; அதன்பிறகு உங்களோடு மோதுவார்கள். அப்போது நீங்கள் ஜெயிப்பீர்கள்’ என்பது போன்ற இளைஞர்களை ஈர்க்கும் வாசகங்கள் இந்த பொருட்களில் அச்சிடப்பட்டுள்ளன. இவையும் பரபரப்பாக விற்கின்றன.

www.flipkart.com  நிறுவனம் போஸ்டர்களை ஸ்பெஷலாக விற்கிறது. பளிச் கலர்களில், முன்னணி ஓவியர்கள் உருவாக்கிய டிசைன்களில் இவை கண்ணைப் பறிக்கின்றன. இங்கும் மோடியும் கெஜ்ரிவாலும் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையாகிறார்கள். இவர்கள் எல்லோரையும்விட   www.snapdeal.com நிறுவனம் செய்தது தான் அதிரடி. மோடி ஸ்பெஷல் மொபைல் போன்களையும் ஸ்மார்ட் போன்களையும் விற்கிறது இந்த நிறுவனம். 900 ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாய் வரை இவற்றின் விலை. கவர்ச்சிகரமான தள்ளுபடி இருப்பதால், விற்பனை பரபரவென இருக்கிறது.

‘‘குறிப்பாக ஆம் ஆத்மி பொருட்களை டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் அதிகம் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். மோடி பொருட்கள், மகாராஷ்டிராவில் அதிகம் விற்பனையாகிறது. ராகுல் காந்திக்கும் பிராண்ட் உருவாக்கினோம். ஆனால் அது அவ்வளவாக விற்பனை ஆகவில்லை. சமாஜ்வாடி போன்ற பிராந்தியக் கட்சிகளுக்கு கவர்ச்சிகரமான கோஷங்கள் இல்லாததால், எங்களால் அவற்றை பிராண்ட் செய்ய முடியவில்லை’’ என்கிறார் ப்ளூகேப் நிறுவனத்தின் தலைவர் சஹில் பாக்லா. இந்த பிசினஸே எதையோ உணர்த்துகிறதோ!

அகஸ்டஸ்