நாடகத்தில் நடித்த ரஜினி!



ஒரு ஸ்பெஷல் வேடம்

ரஜினி... இந்தப் பெருநதியின் பிறப்பிடம் நிச்சயம் ஒரு புனிதத் தலம்தான். அப்படித்தான் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் பெங்களூருவைப் பார்க்கிறார்கள். அங்கே ரஜினி நடந்த வீதிகள், வசித்த வீடு, பழகிய மனிதர்கள், உறவுகள் எல்லாமே ஸ்பெஷல்தான் இன்று. அப்படியொரு ஸ்பெஷல் மனிதராகத்தான் அடையாளம் காட்டுகிறார்கள் பி.எஸ்.சந்திரசேகர் உபாத்யாயாவை. 85 வயது முதிர்ந்த இவர், ரஜினியின் பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல... அவரின் முதல் நாடக குருவும் கூட!

கவனித்துக்கொள்ள பிள்ளைகள் இல்லை... உடல்நிலை பாதித்த மனைவியோடு வறுமையில் வாழ்ந்து வரும் இவரிடம் ரஜினி பற்றிப் பேசினால், அந்தக் காலங்களில் மூழ்குகிறார் சுகமாக.
''நான் பிறந்தது உடுப்பியில். பிழைப்பு தேடி பெங்களூரு வந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்று, பத்திரிகை ஒன்றில் நிருபராகச் சேர்ந்தேன். சில மாதங்களுக்குப் பின் பசவனகுடியில் உள்ள ஏ.பி.எஸ் பள்ளியில் இந்தி ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது சிவாஜிராவ் காயக்வாட் என்ற மாணவன் கவிபுரம் குட்டஹள்ளியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 7ம் வகுப்பு முடித்து எங்கள் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனாக வந்து சேர்ந்தான்.

அவனைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். காரணம், பெங்களூருவில் அவன் பிறந்து வளர்ந்த ஏரியா அப்படி. பயங்கர ரௌடிகள், திருடர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சமூக விரோதிகள் நிறைந்து வாழும் அந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்த அவன், நடுநிலைப் பள்ளி வரை முடித்து உயர்நிலை பள்ளிக்கு வந்து சேர்ந்ததே அந்தக் காலத்தில் பெரிய அதிசயம்தான்.

சேற்றில் மலர்ந்த தாமரை என்று அவனைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். மென்மையான தோற்றம், அமைதியான சுபாவம், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை அவனிடம் கண்டு வியந்திருக்கிறேன்’’ என்கிற சந்திரசேகரின் கண்களில் ‘என் மாணவன்’ எனும் பெருமிதம் பொங்கி வழிகிறது.

‘‘அந்தச் சமயத்தில் பெங்களூருவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையிலான நாடகப் போட்டி நடந்தது. எங்கள் பள்ளியும் நாடகத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பி, தலைமை ஆசிரியராக இருந்த ராமாச்சாரிடம் அனுமதி கேட்டோம். ‘நாடகத்தில் பங்கு கொள்ளுங்கள்... ஆனால், செலவுக்கு பணம் கொடுக்க முடியாது’ என்றார்.

எனவே, நானே கதை, வசனம், பாடல்கள் எழுதி, ‘இதயம் தொடும்...’ என்ற நாடகத்தை இயக்கி, எனது சொந்த செலவில் அரங்கேற்றம் செய்தேன். ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அந்த நாடகத்தில், பரமஹம்சர் கொல்கத்தாவில் இருந்து காளி கோயிலுக்கு தன் மனைவி சாரதா தேவியுடன் வனப்பகுதியில் நடந்து வருவார். அப்போது, திருடர்கள் கூட்டம் அவரை வழிப்பறி செய்யும். அந்தக் கள்ளர் கூட்டத் தலைவராக, சிவாஜிராவ் காயக்வாட் மிகவும் சிறப்பாக நடித்தார்.

நாடக அரங்கேற்றம் முடிந்து, பரிசு வழங்கும் விழாவில் நான் இயக்கிய நாடகத்திற்கு முதல் பரிசு கேடயமாக வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு, சிவாஜிராவ் காயக்வாட்டுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவரை வாழ்த்தி, ‘பிற்காலத்தில் பெரிய கலைஞனாக வளர்வாய்!’ என்றேன். ஆனால், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என எதிர்பார்க்கவில்லை!’’ என்கிறவர், நடிகரான பிறகு ரஜினியை இதுவரை சந்திக்கவோ பேசவோ முயற்சிக்கவில்லையாம்.

‘‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பரிசை சிவாஜிராவ் காயக்வாட் வாங்கினார். 30 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் சென்றபோது, என் பழைய மாணவன் ஒருவன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். தன் பெயர் சுப்பிரமணி எனச் சொல்லிக் கொண்ட அவன், ‘தங்களிடம் படித்த சிவாஜிராவ் காயக்வாட், சென்னை சென்று பெரிய நடிகராகியுள்ளார். பெயரை ரஜினி காந்த் என்று மாற்றிக் கொண்டுள்ளார்’ என்ற தகவலையும் சொன்னான். அதன் பின்புதான் ரஜினி என் மாணவன் என்பதே எனக்குத் தெரிந்தது. ரஜினி நடித்த படங்களின் கேசட்டுகளையும் அந்த மாணவன் கொடுத்தான். அதையெல்லாம் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மகிழ்ந்தும் போனேன்.

ஆனால், கர்நாடகாவில் பிறந்து தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினியை கர்நாடக அரசோ அல்லது கர்நாடகாவில் இயங்கி வரும் மராட்டிய அமைப்புகளோ இதுவரை அழைத்து கவுரவிக்காமல் இருப்பதில் எனக்குக் கவலைதான். கர்நாடக அரசு ரஜினிக்கு ராஜ்யோற்சவ விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், அதற்காக யாரையும் போய் சந்திக்கத் தெம்பில்லை. ரஜினியை சந்திக்க முயற்சி செய்யாதது ஏன் என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.

இந்த நிலைமையில் நான் அவரை சந்தித்தால் ஏதோ உதவி கேட்டு வந்த மாதிரி இருக்கும். அவர் தன் பணியை சிறப்பாக செய்யட்டும். ‘கோச்சடையான்’ படமும் உலக அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என் மாணவன் இன்னும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசை!’’ என்கிறார் சந்திரசேகர் உபாத்யாயா பணிவாக!

கள்ளர் கூட்டத் தலைவராக, சிவாஜிராவ் காயக்வாட் மிகவும் சிறப்பாக நடித்தார். சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவரை வாழ்த்தி, ‘பிற்காலத்தில் பெரிய கலைஞனாக வளர்வாய்!’ என்றேன். ஆனால், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என எதிர்பார்க்கவில்லை!

- ஏ.வி.மதியழகன்