கடைசி பக்கம்



அந்த டாக்டரிடம் முதல்முறையாக வந்திருந்தாள் அவள். இந்த ஊருக்குப் புதுக் குடித்தனம் வந்ததிலிருந்து ஏதும் பிரச்னை இல்லை. கடந்த மூன்று நாட்களாக கடும் இருமல். இயல்பாக இது போன்ற நேரங்களில் ஏதாவது கை வைத்தியம் செய்துகொள்வாள். இம்முறை எதுவும் கேட்கவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்ததில், ‘இவர் நல்ல டாக்டர்’ என அபிப்ராயம் சொன்னார்கள்.

வெயிட்டிங் ஹாலில் நிறைய கூட்டம் இருந்தது. காத்திருக்கும் நேரத்தில் புத்தகம் படிக்கலாம் என எடுத்தாள். பக்கத்தில் வந்து அமர்ந்த ஒரு மூதாட்டி இன்னொரு மூதாட்டியிடம் பேசியது அவள் காதில் விழுந்தது. ‘‘இவரை மாதிரி கைராசி டாக்டரைப் பார்க்க முடியாது. ஊசி, மாத்திரை எல்லாம் அப்புறம்தான். இவர் தொட்டுப் பார்த்தாலே குணமாகிடும்!’’ இன்னமும் இப்படி நம்பும் மக்கள் இருக்கிறார்களே என சிரித்துக் கொண்டாள்.

அரை மணி நேரம் கழித்து அவளது டோக்கன் நம்பரைக் கூப்பிட்டார்கள். எழுந்தாள். நீண்ட நேரமாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததால், கால்கள் மரத்துப் போயிருந்தன. அவளால் நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. தட்டுத் தடுமாறி, நொண்டியபடி நடந்து டாக்டர் அறைக்குப் போனாள். பக்கத்து சீட் மூதாட்டி ‘உச்’ கொட்டியபடி பேசியது அவளுக்கும் கேட்டது. ‘‘அழகான பொண்ணு... பாவம் ஆண்டவன் இப்படி நடக்கமுடியாதபடி ஊனமா படைச்சிட்டானே!’’

டாக்டரிடம் ஆலோசனை பெறும் நேரத்துக்குள் அவள் கால்கள் இயல்பாகிவிட்டன. இருமலுக்கான பரிசோதனை முடிந்து வெளியில் வரும்போது நன்றாக நடந்து வந்தாள். இப்போது அந்த மூதாட்டி ஆச்சரியமாக பக்கத்தில் இருந்த மூதாட்டியிடம் சொன்னார்... ‘‘பார்த்தியா! ரெண்டே நிமிஷத்துல இந்தப் பொண்ணை நல்லா நடக்க வச்சிட்டாரு. இந்த மாதிரி அதிசயத்தை இந்த டாக்டராலதான் செய்ய முடியும்.’’ கண்ணால் காண்பது பொய்!

நிதர்ஸனா