கவிதைக்காரர்கள் வீதி



யோசனை
அழகாக இருக்கும் தனக்கு
எதில் திருஷ்டி சுற்றிப்
போடப் போகிறார்கள்
என யோசிக்கிறது
செடியில் தொங்கும்
எலுமிச்சம்பழம்
-இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

தேடல்
குழந்தைகளை ராஜகுமாரனாக்கி
கதை சொன்ன பாட்டிகள்
முதியோர் இல்லத்துக்குப்
போய் விடவே,
குழந்தைகள்
தேடியெடுத்துப் படிக்கின்றன
பாட்டி கதைகளை
‘நெட்’டிலிருந்து...
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

அழுகை
பெற்றெடுத்தபோது
அழுத தாயை
அழுதே சிரிக்க வைத்தது
குழந்தை
- த.ஜெகன், சரலூர்.

நினைவு
பெருக்கப்படாத வீடு
துடைக்கப்படாத கண்ணாடி
துவைக்கப்படாத துணிகள்
திறக்கப்படாத அலமாரி
அறியப்படாத சீரியல் முடிவு
குழந்தைகளின் சீண்டல்
இல்லாத படுக்கை
முகத்தில் அறையும் வெறுமை...
யாவும் நினைவூட்டுகிறது
ஊருக்குப் போன மனைவியை!
- சா.இரா.மணி, வந்தவாசி.

வேண்டுதல்
குழந்தைகள் அழும்போது
பூஜை மணியின் ஒலிக்கு
செவி சாய்ப்பதேயில்லை
கடவுள்
- சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

சுமை
தண்டவாளங்கள் சந்தித்தால்
பகிர்ந்து கொள்ளக்கூடும்
தங்கள் பயணச் சுமைகளை!
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.