கமர்ஷியல் என்பதற்கு இங்கே தவறான அர்த்தம் இருக்கு!



இயக்குனர் கிருஷ்ணா

‘‘பரமபதம்தான் வாழ்க்கை. எப்போ ஏணியில ஏறுவோம்... எப்போ பாம்பு கொத்தி இறங்குவோம்னு தெரியாது. சினிமாக்காரனா நான் இதை அனுபவிச்சுட்டேன். ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தில், ‘குழந்தைக்கு அப்பாவா நடிக்க மாட்டேன்’னு நழுவிய ஹீரோக்கள் நிறைய. சூர்யாதான் சம்மதிச்சு நடிச்சார்.

அடுத்ததா, ‘ஏன் இப்படி மயக்கினாய்’னு ஒரு படம் இயக்கினேன். முழுசா ரெடியாகியும், ரிலீஸ் பண்றதில சிக்கல். சினிமாவில் இதெல்லாம் சகஜம்னு என்னைத் தேத்திக்கிட்டு இப்ப ‘நெடுஞ்சாலை’ படத்தை எடுத்து முடிச்சிருக்கேன்’’ - பாரம் இறங்கிய பெருமூச்சு கலந்து பேசுகிறார் இயக்குனர் கிருஷ்ணா.

‘‘சினிமா ஃபீல்டு இப்போ வேற மாதிரி இருக்கு. என்னதான் நல்ல படம் எடுத்தாலும், அதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க பெரிய உந்து சக்தி தேவைப்படுது. ‘நெடுஞ்சாலை’ ஆடியோ ரிலீஸுக்கு வந்திருந்தவங்க எல்லாம், ‘பாட்டு நல்லாயிருக்கு... டிரெய்லர் சூப்பர்’னு பாராட்டினாங்க. இயக்குனர் ராஜேஷ் என்னோட நண்பர்.

 அவர்தான் ‘உதயநிதிக்கு படத்தைப் போட்டுக் காட்டுங்க’ன்னு சொன்னார். உதயநிதி அவ்வளவு பெரிய இடம்ங்கிறதைத் தாண்டி நல்ல சினிமா ரசிகர். படம் எடுக்கும்போதுகூட எனக்கு இல்லாத டென்ஷன், அவர் படம் பார்க்கும்போது இருந்துச்சு.

படம் முடிஞ்சு வெளியே வந்தவர், ‘நல்லாயிருக்குங்க’ என்ற ஒரே வார்த்தையோட கிளம்பிட்டார். எனக்கு அவர் பதிலில் திருப்தி இல்லாம ஒரே அவஸ்தை. வீட்டுக்குப் போனவர், ‘நெடுஞ்சாலை’ சிறந்த படம்னு ட்விட்டர்ல கமென்ட் போட்டார். ‘படத்தை நானே ரிலீஸ் பண்றேன்’னு அவர் சொன்ன அந்த நிமிஷம், என் கவலை பறந்து ஜெயிச்சிட்டோம்ங்கிற நிம்மதி வந்துடுச்சு!’’
‘‘ ‘நெடுஞ்சாலை’ என்ன கதை?’’

‘‘அஞ்சு பேரோட வாழ்க்கைப் பின்னல். 1960, 1980, இப்போதைய காலகட்டம் என மூன்று காலகட்டங்களில் விரியும் கதை. இதில் மையப்பகுதி எண்பதுகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும், எங்கேயோ பார்த்த, படித்த, கேட்ட கேரக்டர்களாகத்தான் இருக்கும். முடிந்த அளவில் நம்பகத்தன்மையோடுதான் கதாபாத்திரங்களும் கதையும் நகரும். 80களில்தான் தமிழ்நாட்டில் தாபா அறிமுகமானது.

அந்தக் காலகட்டத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் தாபா நடத்தும் கதாநாயகி. அவர் தாபாவுக்கு வர்ற சில கேரக்டர்கள், அவங்களோட பிரச்னைகள்தான் கதை. முருகன் என்ற கதாபத்திரத்தில் ஆரியும், மங்கா என்கிற கதாபாத்திரத்தில் வரும் ஷிவதாவும்தான் ஹீரோ-ஹீரோயின். இது காதல் கதை இல்லை. ஆனால், காதல் இருக்கும். சஸ்பென்ஸ், காமெடி, ஆக்ஷன் என எல்லா எமோஷன்களும் கலந்ததுதானே வாழ்க்கை. அது எல்லாமே இந்த படத்தில் இருக்கும். கன்னியாகுமரியில் தொடங்கி, ஜெய்ப்பூர் வரைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் கதை டிராவல் ஆகும்.’’

‘‘பீரியட் ஃபிலிம்னா நிறைய சவால்கள் இருக்குமே?’’‘‘ஆமா. 80களில் இருந்த நெடுஞ்சாலைகளுக்கும் இப்போ இருக்கும் நெடுஞ்சாலைகளுக்கும் நிறையவே மாற்றம். சாலை மட்டுமின்றி அதில் போகிற வாகனங்கள், அதோட நம்பர் பிளேட் வரைக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து செய்யவேண்டியிருந்தது. கதைக்குப் பொருத்தமான லொகேஷன் கிடைச்சிட்டா, ஒரு இயக்குனருக்கு 50 சதவீதம் வேலை எளிதாகிடும். லொகேஷனுக்காக மட்டும் இந்தியா முழுக்க ஆறு மாதங்கள் சுற்றியிருக்கிறேன். பயணங்களில் கைடு தேவையில்லை. பயணமே கைடா மாறிடும் என்பதை கற்றுக்கொடுத்த அனுபவம் அது. கதை இந்தப் படத்தோட ஹீரோன்னா, லொகேஷன் ஹீரோயின்!’’

‘‘சூர்யா மாதிரி ஹீரோவை இயக்கியவர் நீங்கள். இப்போது புதுமுகங்கள் ஏன்?’’‘‘இந்தக் கதையைக்கூட முதலில் ஒரு பெரிய ஹீரோவுக்கு சொல்லத்தான் முயற்சித்தேன். ஆனால், அவர் கதையை கேட்கக் கூட தயாரா இல்லை. என் படத்தைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. இதைச் சொல்வதற்கு தேவை ஒரு உருவம். கதைக்கு ஏற்ற மாதிரி எந்த உருவத்தையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் புதுமுகங்களைத் தேடினேன். என் கதையில் ஹீரோவுக்கு ஃபிட்னஸான உடல்வாகு தேவை. நிஜத்திலேயே சில ஹீரோக்களுக்கு ஃபிட்னஸ் சொல்லிக் கொடுத்த ஆரி, இதுக்கு சரியா வந்தார். என் எதிர்பார்ப்பை ‘நெடுஞ்சாலை’ முழுக்க நிரப்பி இருக்கார்.

‘நெடுஞ்சாலை’ என்பதால் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே நிறைய ரத்த காயங்களை சந்திக்க வேண்டியதிருந்தது. படத்தில் ஒரு ஆட்டோ வருகிறது. இதற்காக பழைய ஆட்டோ ஒன்றை வாங்கி, ரீ மாடல் பண்ணி ட்ரையல் போனேன். கொஞ்ச தூரம்தான் ஓடியிருக்கும்... திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தீப்பிடித்தது. யூனிட்டில் இருந்தவர்கள் பதற்றமாகிவிட்டார்கள். நல்லவேளையாக எரிந்துகொண்டிருந்த ஆட்டோவிலிருந்து நான் மீட்கப்பட்டேன். இப்படி பரீட்சித்துப் பார்த்து புதுமுகங்களை பாதுகாப்பாக நடிக்க வைத்திருக்கேன்...’’ ‘‘படத்துல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கா?’’

‘‘இங்கே கமர்ஷியல் என்பதற்கு ஏதேதோ அர்த்தம் இருக்கு. சுவாரஸ்யமா கதை சொல்வதுதான் உண்மையான கமர்ஷியல். இந்தக் கதையில் தொடங்கி ஒளிப்பதிவு, பின்னணி, எடிட்டிங் என முடிந்தவரை புதிய கோணத்தில் முயன்றிருக்கோம். எங்களுடைய நேர்மையான முயற்சி ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.’’

-அமலன்