சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்

சென்ற வேகத்திலேயே சோழ மன்னரின் வாள் வெளியே வந்தது. உயர்த்தி நுனியை ஆராய்ந்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் பிரதி பலிக்கவில்லை. வாளை உறையில் இட்டவர், பூக் கூடைகளை சுற்றி வந்தார். ஒவ்வொரு மூங்கில் கூடையையும் அசைத்துப் பார்த்தார். மூடியை விலக்கி கைகளை உள்ளே விட்டு துழாவினார். எதுவும் தட்டுப்படவில்லை.

தலையை அசைத்து உள்ளே கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். தலை வணங்கிய காவலர்கள், கூடைகளை சுமந்தபடி சென்றார்கள். ‘‘ஏதேனும் தெரிந்ததா?’’குரல் வந்த திசையை நோக்கி பெருநற்கிள்ளி திரும்பினார். தீப்பந்த வெளிச்சம் படாத இடத்திலிருந்து சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வெளியே வந்தார்.‘‘இல்லை...’’

‘‘அப்படியானால் பாண்டிய இளவரசர்..?’’
‘‘பூக்கூடை வழியே இந்த மாளிகைக்குள் நுழையவில்லை...’’
‘‘ஒற்றர்கள் பொய் சொல்ல மாட்டார்களே?’’

‘‘திட்டம் மாறிய தகவல் அவர்களை எட்டாமல் இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும் பாண்டிய இளவல் செழியன் இப்போது புகாரில்தான் இருக்கிறார். என் வீரர்கள் அங்குலம் அங்குலமாக அலசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் சிக்காமல் போக மாட்டார். எங்கு மறைந்திருந்தாலும் இளமாறனை விடுவிக்க வெளியே வருவார். அப்போது பிடித்துவிடலாம்...’’ என்றபடி சோழ மன்னர் நடந்தார். யோசனையுடன் சேர மன்னர் அவரைப் பின்தொடர்ந்தார்.

இருவரும் மந்திராலோசனை அறைக்குள் சென்றதும் தூண் மறைவிலிருந்து யவன ராணி வெளியே வந்தாள். பூக்கூடைகள் இறக்கப்பட்ட இடத்தைக் குனிந்து பார்த்தாள். பூவிதழ்கள் சிதறியிருந்தன. அவற்றைத் தன் கைகளில் திரட்டினாள். பந்த வெளிச்சத்தில் ஆராய்ந்தாள். நாசிக்கு அருகில் கொண்டு சென்று முகர்ந்தாள். வியர்வை வாசம். அவள் புருவம் உயர்ந்தது.
சுற்றிலும் பார்த்தாள். வீரர்கள் அங்கிருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. ஓசையெழுப்பாமல் கூடைகள் சென்ற திசையில் நடந்தாள். சரியாக இளமாறன் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் அந்த கூடைகள் இறக்கப்பட்டிருந்தன.

ஆனால் -காவலுக்கு நிற்க வேண்டிய வீரர்கள் அங்கில்லை. யோசனையுடன் இளமாறன் இருக்கும் அறைக்கதவைப் பார்த்தாள். வெளிப்புறமாக பூட்டியிருந்தது. சாளரம் வழியே உள்ளே எட்டிப் பார்த்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மீண்டும் பூட்டை சரிபார்த்து விட்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்த அறைப்பக்கம் வந்தாள். சத்தம் வராமல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். யாரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கதவை மூடினாள்.

இருட்டாக இருந்தது. சற்று நிதானித்தாள். இருள் பழகியதும் அறைக்குள் இருந்த பொருட்கள் தெரிந்தன. மூங்கில் கூடைகளும், மரப் பீப்பாய்களுமாக அந்த அறை நிரம்பியிருந்தது. எல்லாமே ஒரே அளவுள்ள மூங்கில் கூடைகள், பீப்பாய்கள். ஒவ்வொன்றையும் திறந்து பார்ப்பது இயலாத காரியம். ஆனாலும் பாண்டிய இளவரசர் ஏதோவொரு கூடைக்குள்தான் இருக்கிறார். அவள் உள்ளுணர்வு அப்படித்தான் சொன்னது. மனித வியர்வையின் மணத்தை பூவிதழ்களின் வழியே அவள் நுகர்ந்தது பொய்யில்லை.

என்றாலும் உணர்ந்ததை சோழனிடமோ, சேரனிடமோ சொல்ல முடியாது. காரணம், கூடைகளை சுமந்து வந்த வீரர்களின் வியர்வையாகவும் அது இருக்கலாம். என்ன செய்வது என்று அவள் தனக்குள் ஆலோசித்தபோது -அறைக்கதவு திறந்தது. ஆறு சோழ வீரர்கள் தீப்பந்தத்துடன் உள்ளே வந்தார்கள். யவன ராணியைப் பார்த்து திகைத்தார்கள். ‘‘வணக்கம் ராணி...’’ தலைவன் போல் காணப்பட்டவன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறினான். தலைதாழ்த்தி வணங்கினான்.

யவன ராணியின் உதடுகளில் புன்னகை பூத்தது. சாதாரண எடுபிடி வீரர்களின் குணம் இதுதான். கோழைகள். எதிர்பாராத இடத்தில், நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களை சந்தித்தால் போதும்... எதற்காக அந்த இடத்தில் அவர்கள் நிற்கிறார்கள், வந்திருக்கிறார்கள் என்று யோசிக்க மாட்டார்கள். புத்தி வேலை செய்யாது. அநிச்சையாக அடிபணிவார்கள். ஏதோ தாங்கள்தான் தவறு செய்துவிட்டோம் என்பது போல் நடுங்குவார்கள். இந்த இயல்பை, குணத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள்.

மிடுக்குடன் வீரர் தலைவன் வணங்கியதை ஏற்றவள், ‘‘என்ன விஷயம்?’’ என்று அதட்டினாள்.
‘‘கூடைக்குள் இருக்கும் பொருட் களை பீப்பாயில் மாற்ற வேண்டும்...’’ திக்கினான்.
‘‘செய்யுங்கள்...’’ கட்டளையிட்டாள்.

‘‘உத்தரவு...’’ என்றவன், சக வீரர்கள் மீது பாய்ந்தான். ‘‘வேடிக்கை பார்க்காமல் துரிதமாக பொருட்களை பீப்பாயில் அடையுங்கள்...’’ உடன் வந்தவர்கள் விழுந்தடித்துக் கொண்டு கூடையில் இருந்தவற்றை அள்ளி, பீப்பாயில் அடைத்தார்கள். வழக்கத்துக்கு மாறாக அவர்களை அதட்டி அதட்டி வேலை வாங்கிய வீரர் தலைவன், அடிக்கடி யவன ராணியைப் பார்த்தான். அந்தப் பார்வை ‘பார்த்தீர்களா... சரியாக வேலை வாங்குகிறேன். சோழ மன்னரிடம் சொல்லி எனக்கு பதவி உயர்வு வாங்கித் தாருங்கள்’ என்று கேட்பது போலவே இருந்தது.

யவன ராணி இதைக் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. பீப்பாய்க்குள் அடைக்கப்படும் பொருட்களையே பந்த வெளிச்சத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தாள். பூக்கள் தவிர மிளகும், உப்பும் பீப்பாயில் அடைக்கப்பட்டன. எந்தக் கூடையிலும் யாரும் பதுங்கி இருந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. ‘‘படகுத் துறைக்கு எப்போது இதைக் கொண்டு செல்வீர்கள்?’’ வீரர் தலைவனை பார்த்து கேட்டாள்.

‘‘கருக்கல் நேரத்தில் ராணி...’’ தலை வணங்கியபடி பதிலளித்தான். எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே வந்த யவன ராணி திடுக்கிட்டாள். காரணம், இளமாறன் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே இப்போது காவல் வீரன் நின்று கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கு முன்பு அவனை அங்கு காணவில்லையே... ‘‘எங்கு சென்றிருந்தாய்?’’

‘‘த...ண்ணீ...ர் குடிக்க...’’ ‘‘முட்டாள். பூட்டைத் திற...’’ கர்ஜித்தாள். பதற்றத்துடன் அந்த வீரனும் பூட்டைத் திறந்தான். கதவைத் தள்ளி வேகமாக உள்ளே நுழைந்தவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். காரணம் -இளமாறனின் உடையில் அங்கு பூரண மயக்கத்தில் படுத்திருந்தவர் வேறு யாருமல்ல. அவளது தந்தைதான்.

மகேஷால் நம்பவே முடியவில்லை. சூனியக்கார பாட்டி யின் முன்னால் நின்று கொண்டிருந்தவன் ஹாரி பாட்டரேதான். கூடவே இருந்து இப்படி குழி பறிக்க பார்த்திருக்கிறானே...
அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு அடக்கினான். பயத்தில் அவன் சிறகுகள் படபடக்கப் பார்த்தன. தம் பிடித்து அடக்கினான். சத்தம் கேட்டு அவர்கள் திரும்பினால், தான் மாட்டிக் கொள்வோம். அமைதியாக அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.

‘‘அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா?’’ சூனியக்கார பாட்டி கேட்டாள்.
‘‘சொல்லிட்டேன்...’’ ஹாரி பாட்டர் பதிலளித்தான்.
‘‘அந்த ‘நேம் ஆஃப் த ரோஸ்’ புத்தகத்தைப் பத்தி?’’
‘‘விளக்கிட்டேன்...’’

‘‘நல்ல காரியம் செஞ்ச. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். அந்த புக்குல என்ன எழுதியிருக்குனு கண்டுபிடிக்கவே முடியல. கூட இருக்கிற வௌவால்களையும் அனுப்பிப் பார்த்தேன். எல்லாமே அந்த புக்கை தொட்டதும் செத்துப் போயிடுச்சுங்க. அப்புறம்தான் மந்திரவாதி சொன் னான்... மகேஷை தவிர வேற யாராலயும் அந்தப் புத்தகத்தை படிக்க முடியாதுனு. எப்படியாவது அவன் அந்த புக்கை படிச்சுடணும். அப்பத்தான் நம்ம கனவு நிறைவேறும்...’’
‘‘ஆனா, அந்த புக்கை படிச்சதும் மகேஷ் செத்துடுவானே..?’’

‘‘மாட்டான்...’’
‘‘என்னது?’’
‘‘ஆமா ஹாரி. மகேஷ் சாக மாட்டான்...’’ சூனியக்கார பாட்டி புன்னகைத்தாள். ‘‘வேற மாதிரியா மாறிடுவான்...’’
‘‘எப்படி?’’

‘‘அதை நான் சொல்ல மாட்டேன். நீயே பார்க்கத்தான போற. சரி, கிளம்பு. நான் சொன்னது நினைவுல இருக்கட்டும்...’’
தலையை ஆட்டிவிட்டு ஹாரி பாட்டர் சென்றான். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இறந்த வௌவால்களின் சடலங்களை தன் கையால் தடவி விட்டு சூனியக்கார பாட்டி சென்றாள்.
அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டார்கள் என்று தெரிந்த பிறகும் மகேஷ் அசையவேயில்லை. ஐந்து நிமிடங்களுக்கு பிறகுதான், மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான்.

ஆனால் -அவனால் பறக்க முடியவில்லை. அவனது இறக்கைகள் சிக்கியிருந்தன. சிக்கை விடுவிப்பதற்காக திரும்பினான். அதிர்ந்தான். காரணம், எந்த ‘நேம் ஆஃப் த ரோஸ்’ புத்தகத்தை அவன் படிக்க வேண்டுமென்று சூனியக்கார பாட்டி விரும்பினாளோ அந்தப் புத்தகத்தின் பக்கங்களுக்குள்தான் அவனது சிறகுகள் மாட்டிக் கொண்டிருந்தன.
சட்டென்று அறையை விட்டு வெளியேற முற்பட்டாள் தேன்மொழி.

இதை ரங்கராஜன் எதிர்பார்த்திருக்க வேண்டும். எனவே அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.
‘‘தொடாத...’’ சீறினாள். ‘‘கடைசில நீயும் துரோகிதான் இல்லையா?’’ கையை உதறியபடி விலகினாள்.
‘‘இங்க யாரும் துரோகி இல்ல...’’

‘‘இல்லையா?’’ பாய்ந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்தாள். ‘‘இவரு யார் தெரியுமா?’’ ராமை சுட்டிக் காட்டினாள்.
‘‘தெரியும். சுகாதாரத் துறை அதிகாரி...’’ அமைதியாக பதிலளித்தான்.
‘‘அது வெளில. உள்ளுக்குள்ள இவரு ‘மெடிகோ’ நிறுவனத்தோட அல்லக்கை...’’

‘‘ஏம்மா நிறுத்திட்ட? ஸ்காட் வில்லியம்ஸுக்கு உடந்தையா இருக்கறதும் இவருதான். அதையும் சேர்த்தே சொல்லலாமே?’’ தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பெரியவர் காலை நீட்டியபடி பதிலளித்தார். திரும்பி அவரை உற்றுப் பார்த்தாள். ‘‘நீங்க யாரு?’’

‘‘இன்னொரு துரோகி...’’ சிரித்தவர் ராமைப் பார்த்தார். ‘‘ரெண்டு பேருக்கும் டீ கொடு...’’
தலையசைத்த ராம், பிளாஸ்கில் இருந்த தேநீரை இரு டம்ளர்களில் சமமாக நிரப்ப ஆரம்பித்தார்.
தேன்மொழிக்கு குழப்பமாக இருந்தது. ரங்கராஜனின் சட்டையைப் பிடித்திருந்த கையை தளர்த்தினாள்.
‘‘இங்க என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘தமிழகத்தைக் காப்பாற்ற முயற்சி நடக்குது...’’ பதிலளித்த ரங்கராஜன், அவள் கையில் இருந்த ஃபைலைப் பிடுங்கி பெரியவரிடம் கொடுத்தான்.
தடுக்கப் போன தேன்மொழி, அதனால் பயனில்லை என்பதை உணர்ந்து அமைதியானாள். ஆனால், மனதில் எழுந்த கேள்வியை மட்டும் விழுங்க முடியவில்லை. கேட்டுவிட்டாள்.
‘‘நீங்க எல்லாம் யாரு?’’

‘‘சமயம் வர்றப்ப சொல்றோம். ஆனா, ஒண்ணு. நாங்க துரோகிகளில்லை...’’ என்றபடி அவள் அருகில் வந்த ராம், தேநீர் கோப்பையை நீட்டினார். குப்பென்று மதுவின் நெடி அவள் முகத்தில் அறைந்தது. ‘‘ஸ்காட்ச். ஸ்காட் வில்லியம்ஸ் ஊற்றிக் கொடுத்தான். உளவு பார்க்கும்போது இப்படி நடக்கறதை தவிர்க்க முடியாது...’’
உதட்டைக் கடித்தபடி தேன்மொழி தேநீரை வாங்கினாள்.

அதற்குள் பெரியவர் அந்த ஃபைலை பார்த்து முடித்திருந்தார். ‘‘எதிர்பார்த்தா மாதிரியே எல்லாம் நார்மல்னு ரிசல்ட் வந்திருக்கு. பேஸின் டெஸ்ட்...’’ பற்களைக் கடித்தார்.
‘‘வாட்..?’’ தேன்மொழி ஆச்சர்யப்பட்டாள். ‘‘அதுபத்தி உங்களுக்கும் தெரியுமா?’’

‘‘இதென்ன பிரம்ம ரகசியமா? டாக்டர்களும், ரத்த பரிசோதனை நிலையங்களும் கூட்டு களவாணிங்கனு உலகத்துக்கே தெரியுமே. நோயாளிகளை பரிசோதிக்கும்போதே டாக்டருக்கு அவர் நார்மலா இருக்கார்னு தெரியும். ஆனாலும் குறிப்பிட்ட லேப்ல ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லி சீட்டு எழுதித் தருவார். பயந்து போய் நோயாளிகளும் அந்த லேபுக்கு போவாங்க. பணத்தைக் கொடுத்து தங்களோட ரத்த மாதிரியை எடுக்கச் சொல்வாங்க.

வாங்கின பணத்துல நாற்பது சதவீதம் கமுக்கமா டாக்டருக்கு போயிடும். பேஷன்ட் கிட்டேந்து எடுத்த ரத்தத்தை பரிசோதிக்காம அதை அப்படியே அந்த லேப் டெக்னீஷியன் வாஷ் பேஸின்ல கொட்டிடுவான். நார்மல்னு எழுதித் தருவான். வட இந்தியாவுல இப்படித்தான் நடந்துக்கிட்டு இருக்கு. இதை அங்க ‘பேஸின் டெஸ்ட்’னு சொல்வாங்க. இந்த திருட்டு இப்ப தமிழகத்துலயும் ‘ஸிங்க் டெஸ்ட்’ங்கிற பேர்ல பரவிட்டு வருது...’’

நிறுத்திய பெரியவர், தரையில் கையை ஊன்றியபடி எழுந்தார். அவர் முகம் இறுகியிருந்தது. அறையில் இருந்த மூவரையும் பார்த்தபடி தொடர்ந்தார். ‘‘மருத்துவமே வணிகமா மாறினதோட விளைவைத்தான் இப்ப நாம அனுபவிச்சுட்டு இருக்கோம். ரத்தப் பரிசோதனைல நார்மல்னு எந்த அடிப்படைல சொல்றோம்? யாருக்குமே தெரியாது. ஆனா, உலகம் முழுக்க இந்த ‘நார்மல்’ அளவு ஒரே எண்ணிக்கையாதான் இருக்கு. அது எப்படி சாத்தியம்னு யாருமே கேட்கறதில்லை. நோய் வந்து செத்துடுவோமோன்னு எல்லாருமே பயப்படறாங்க. அதனாலதான் டாக்டர்ஸ் என்ன சொன்னாலும் தலையை ஆட்டறாங்க...’’

தேன்மொழியின் அருகில் வந்த பெரியவர், அவளை உற்றுப் பார்த்தார். ‘‘ஐரோப்பாவோட சீதோஷ்ண நிலை வேற. அமெரிக்காவோட தட்பவெப்பம் வேற. இந்தியனும், சீனனும், ஆப்ரிக்கனும் உயரத்துல வேற வேற. இப்படி உடல் அமைப்பே வேற வேறயா இருக்கும்போது ரத்தப் பரிசோதனை முடிவை மட்டும் எந்த அடிப்படைல உலகம் முழுக்க ஒரே மாதிரியா கணக்கிடறோம்? இந்த அடிப்படை கேள்விக்கான பதில்லதான் மெடிக்கல் பிசினஸே அடங்கியிருக்கு.

ஒரே ஆள், ஒரே நாள்ல ஐந்து வெவ்வேறு ரத்த பரிசோதனை நிலையத்துல ரத்தம் கொடுத்தார்னா, அஞ்சு ரிசல்ட்டும் அஞ்சு மாதிரியா இருக்கும். இந்த அஞ்சுல எது சரியான ரிசல்ட்? டாக்டர்ஸுக்கே தெரியாது. ஆனா, தெரிஞ்சா மாதிரி நடிக்கிறாங்க. பேஷன்ட்ஸை பயமுறுத்தி வேற வேற டெஸ்ட் எடுக்க வைச்சு பணத்தைத்தான் கறக்கறாங்க. நான் சொல்றது சரிதானே?’’

‘‘கரெக்ட்தான் பெரியவரே... அதனாலதான் ‘மெடிகோ’ மேல எனக்கு சந்தேகமே. அவங்க விஷக் காய்ச்சலுக்கு மாத்திரை தர்றதும், நோயாளிகளோட ரத்தத்தைப் பரிசோதிக்கறதுக்கும் பின்னாடி பெரிய திட்டம் இருக்கு. அது என்னன்னு முதல்ல கண்டுபிடிக்கணும்...’’
‘‘அதுக்கு அவசியமில்லை...’’ ரங்கராஜன் இடையில் புகுந்தான்.
‘‘ஏன்?’’

‘‘ஸ்காட் வில்லியம்ஸ் எதுக்காக தமிழகம் வந்திருக்கான்னு தெரிஞ்சு போச்சு...’’
‘‘எதுக்காக வந்திருக்கான்?’’

‘‘இதுக்காக...’’ தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சில காகிதங்களை எடுத்தவன், அதைப் பெரியவரிடம் கொடுத்தான். ‘‘தோழர், ‘ரெட் ரத்தப் பரிசோதனை நிலை’யத்துல இது கிடைச்சது. நாம சந்தேகப்பட்ட மாதிரியே கிட்னி, கல்லீரல், இதயங்களைத் திருடத்தான் அவன் வந்திருக்கான்...’’
‘‘என்னது..?’’ அதிர்ந்தாள் தேன்மொழி.
‘‘யெஸ் டாக்டர். ரெட் மார்கெட்...’’

(தொடரும்)

‘‘நம்ம தலைவர் பண்றது ரொம்ப ஓவர்...’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘நம்ம கட்சி சார்பா அமெரிக்க அதிபர் வேட்பாளரை அறிவிக்கலாமான்னு கேட்கிறாரே!’’

‘‘அந்த டாக்டர் ரொம்ப பொறுமைசாலி...’’
‘‘சரி, அதுக்காக தெர்மா மீட்டரை இரண்டு மணி நேரமா வாயில வச்சிருக்கச் சொல்லணும்?!’’

‘‘தலைவர் பேப்பர் ரோஸ்ட் சாப்பிடவே மாட்டாரா... ஏன்?’’
‘‘அவருக்குத்தான் படிக்கத் தெரியாதே!’’
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.