சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

தைரியத்தை இழந்து விடாதே. உன் மனதில் எந்தவிதமான கவலையும் வேண்டாம். எல்லாம் சுகமாகிவிடும். நான் உன்னை ரட்சிப்பேன்.
- பாபா மொழி

ஒருநாள் பாபா திடீரென்று ‘‘தாத்யா... தாத்யா’’ எனக் கூப்பிட்டார்.
துனிக்காக விறகை அடுக்கிக் கொண்டிருந்தவன், பாபாவின் குரலைக் கேட்டு ஓடி வந்தான்.
‘‘புறப்படு, உன் வீட்டுக்குப் போகலாம்!’’
‘‘இப்பொழுது எதற்காக?’’

‘‘என் குழந்தைகளைப் பார்க்கணும், வா!’’
‘‘சரி’’ என்று தாத்யாவும் அவருடன் புறப்பட்டான்.
இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். பாய்ஜாபாய்க்கு ரொம்ப சந்தோஷமாயிற்று.
‘‘குழந்தாய், நீ பெரியவனாகிவிட்டாய். எல்லோரும் ஷீரடிக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். ஆதலால் உனக்கு என்னைப் பார்க்க நேரமில்லை. நீ வந்ததில் ரொம்ப திருப்தி. சப்பாத்தி சாப்பிட்டு விட்டுப் போ.’’

‘‘தாயே, சாப்பிடத்தான் வந்திருக்கிறேன். உன் கையால் செய்த வெங்காயச் சப்பாத்தியைச் சாப்பிட்டால், வயிறு என்ன, மனமும் திருப்தியடைகிறது. கறியும் இருக்கிறதா?’’
‘‘எல்லாம் இருக்கிறது.’’
‘‘சரி தாயே. சப்பாத்தி செய்து முடிப்பதற்குள் நான் என் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்.’’
‘‘வா... வா... உனக்கு ஒன்று சொல்லணும்...’’
‘‘என்ன?’’

‘‘உன் பெண், நான்கு குஞ்சுகளை ஈன்றிருக்கிறாள்...’’
‘‘யார்?’’

‘‘அட, பெண் மயிலப்பா. முட்டையின் மீது அடை காக்க உட்கார வைத்திருந்தேன். இன்று காலைதான் நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன. பாக்கி இரவில் வரும்!’’ ‘‘வா...வ்...வா...! - பாபா சின்னக் குழந்தை போல உற்சாகத்துடன் குதித்தபடி கொல்லைப்புறத்துக்கு வந்தார். பாபா இங்குதான் தன்னுடைய பிராணிகளைத் தங்க வைத்திருந்தார். பசுக்கள் அவரைப் பார்த்ததும் தலையை அசைத்து, ‘‘ம்மா...’’ என்றன. கன்றுக்குட்டிகள் அவரிடம் தாவின.

இரண்டு மயில்கள் துறுதுறு வென்று தாவி அவரிடம் ஓடி வந்தன. இரண்டு பூனைகள், ‘‘மியாவ்... மியாவ்...’’ என்றவாறே அவரிடம் வந்தன. புறாக்கள் பறந்து வந்து அவர் தோளில் உட்கார்ந்தன. பாபா எல்லாவற்றையும் தூக்கிக் கொஞ்சினார், பேசினார். அதற்குள் ஒரு பெண் மயில் ஒரு விதமான சத்தத்தை எழுப்பியது. 

‘‘உன்னுடைய குட்டிகளைப் பார்க்கணும் இல்லையா... எல்லோரும் வாருங்கள்... அவற்றுக்கு அழகான பெயர்களைச் சூட்டலாம்’’ என்றார் பாபா. பிறகு அந்த இடத்திற்குச் சென்றார்... அங்கு அழகான நான்கு மயில் குஞ்சுகள் இருந்தன. பாபா அவற்றை ஆசையாக எடுத்துக் கொஞ்சினார். பசுக்கள், பறவைகளுடன் இவ்வளவு அன்னியோன்னியமாகப் பழகும் பாபாவை, குளிர்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள், தாத்யாவும் பாய்ஜாபாயும்! இந்த பாபா மாறுபட்டவராகத் தெரிந்தார். சிகட்ராவ்!

சிகட் என்றால் ‘கருமி’ என்று பொருள். உண்மையில், அதுவல்ல அவர் பெயர். அவருடைய கருமித்தனமான சுபாவத்தினால் அப்பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. அவர் பணக்காரர். எப்பொழுதும் பணத்தைப் பற்றியே நினைத்துக்கொள்பவர். நிறைய சொத்துக்களும், சந்ததியும் இருந்தன. கூடமாட வேலை செய்ய வேலைக்காரர்களும் இருந்தார்கள். பாபாவின் கீர்த்தி அவர் காதுகளில் விழுந்தது. பாபா ஒரு யோகி, பிரம்மஞானி, சாது என்று அறிந்துகொண்டார். பாபாவை ஒருமுறை சந்திக்கும் ஆசை அவர் மனதில் எழுந்தது. யார் எதைக் கேட்டாலும் அதைக் கொடுப்பவர் பாபா என்கிறார்கள். அப்படியானால் தான் என்ன கேட்பது என சிகட்ராவ் மனதில் கேள்வி எழுந்தது.

‘என்னிடம் பணம், சொத்து, குழந்தைகள் போன்ற எல்லா ஐஸ்வர்யங்களும் இருக்கின்றன. ஆனால், ஆன்மிக அறிவாகிய பிரம்மஞானம்தான் இல்லை. அதைத்தான் பாபாவிடமிருந்து பெறணும்!’
ஒருநாள் வண்டியெடுத்து, ஷீரடிக்குப் புறப்பட்டார். அவரின் நண்பன் வழியனுப்ப வந்திருந்தான். ‘‘ஒரு மகானைப் பார்க்க இப்போது உங்களுக்கு என்ன அவசியம்?’’ என்று அவன் கேட்டான்.
‘‘எனக்கு சுகபோக வாழ்க்கைக்கான எல்லா வசதிகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால், ஆன்மிக அறிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை அறிவதற்காக சாயி பாபாவைப் பார்க்கப் போகிறேன்’’ என்றார் சிகட்ராவ்.

நண்பன் விழுந்து விழுந்து சிரித்தான். ‘‘ஏன் இவ்வளவு சிரிக்கிறாய்?’’ ‘‘சிகட்யா, நீ எப்பொழுது பார்த்தாலும் பணம், பணமென்று அதனுடனே ஒட்டிக்கொண்டிருக்கிறாய். மகா கருமி. ஆன்மிகத்தை அறிவது அவ்வளவு சுலபமானதல்ல. யார் பணத்தின் அருமை, மனைவி குழந்தைகளின் பாசம், அதனால் ஏற்படும் சுகம், நிம்மதி இவற்றை அறியாமல் இருக்கிறாரோ, அவர் ஆன்மிகத்தைப் புரிந்துகொள்வது கடினம். இதோ பார் சிகட்யா, வயதானதும், யாரும் உதவிக்கு இல்லை என்றதும், எல்லா அவயவங்களும் ஒடுங்கிப் போனதும், ஆன்மிகத்தைப் பற்றிய நினைவு வரும். அப்படியிருக்கிறது உன் வாழ்க்கையும். நீயோ எச்சில் கையுடன் காக்கையை விரட்டாத கஞ்சன்.

உன் கையிலிருந்து பணம் செலவழித்தால்தான், இதைப் பற்றிய அறிவு கிட்டும்’’ என்றான் அவன். ‘‘உன்னைப் போன்ற அயோக்கியன்தான் இப்படியெல்லாம் சொல்லுவான். நான் பாபாவைப் பார்ப்பதில் திட்டவட்டமாக, உறுதியுடன் இருக்கிறேன். அவருடைய காலில் விழுந்தால், அவர்களின் ஆசையை அவர் பூர்த்தி செய்வதாக நான் கேட்டிருக்கிறேன்’’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டு, டாங்காவில் ஏறினார் சிகட்ராவ்.

நண்பன் மறுபடி சிரித்தான். டாங்கா ஷீரடிக்குப் பறந்தது. ஷீரடிக்கு வந்ததும் பாபாவை தரிசித்துவிட்டு, அவர் அருகில் அமைதியுடன் உட்கார்ந்தார் சிகட்ராவ்.
‘‘வாப்பா, என்ன இவ்வளவு தூரம்? பார்ப்பதற்கு சகல வசதிகளுடன் கூடிய செல்வந்தனாகத் தெரிகிறாய். நான் உனக்கு ஒரு பொருட்டே அல்ல. அப்படியிருக்க, எதற்காக வந்திருக்கிறாய்?’’ என்று நக்கலாகக் கேட்டார் பாபா.

சிகட்ராவ் முன்னே சென்று வணங்கி, ‘‘பாபா, நீங்கள் என் நிலைமையை நன்கு அறிந்து சொன்னீர்கள். நான் காசு, பணத்திற்காக வரவில்லை. எனக்கு பிரம்மம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள ஆசை. மனதில் ஆன்மிகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளணும் என்று நீண்ட நாட்களாக ஒரு துடிப்பு. பாபா, எனக்கு பிரம்மத்தைக் காட்டுங்கள்! நான் தன்யன் ஆவேன்!’’ என்றார் சிகட்ராவ்.
இதைக் கேட்டு, பாபா சிரித்தார்.

‘‘பக்தா, இதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாதே. நிம்மதியான மனதுடன் உட்கார். உனக்கு உடனே பிரம்மம் என்ன என்று காண்பிக்கிறேன். நான் கடன் சொல்வதில்லை. உண்மையில் சொன்னால், இப்படி உன்னைப் போல கேட்டு வருபவர்கள்தான் ரொம்பக் குறைவு. பணம், காசு, குழந்தை, நோய்க்கு நிவாரணம், பதவி, சுகம் இவை நாடித்தான் என்னிடம் வருகிறார்கள். சுயநலக்காரர்கள். உன்னைப் போன்ற ஆன்மிகத் தேடலுக்காக வருபவர்கள் மிகவும் குறைவு. கடவுளை அடைய வேண்டுமென்று தேடி வருபவர்களைக் காண நான் ஆர்வமாக இருக்கிறேன்.’’
‘உண்மைதான் பாபா’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, தலையாட்டினார் சிகட்ராவ்.

‘‘ஆன்மிக அறிவை அடையணும் என்கிற துடிப்பு இருக்கிறதே, அதுதான் உண்மையான ஆர்வம். பக்தனே, கடவுளின் மேலிருக்கும் பயத்தினால், சூரியன், சந்திரன் முதலியவை நேரப்படி, காலப்படி தவறாமல் உதிக்கின்றன - மறைகின்றன. ஒளி, இருள் போன்றவையும் வசந்த காலம், மழைக்காலம் போன்ற பருவங்கள் வருவதும் கட்டுப்பாட்டுடன் நடக்கின்றன. இந்திரன், அக்னி, யமன், வருணன், குபேரன், வாயு மற்றும் ஈசன் போன்ற மக்களைக் காப்பாற்றும் கடவுள்கள் - யாவரும் முறையாகத் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். இந்த பிரம்மத்தை அறிந்துகொள்ளாமல் இறந்து போவோமானால், பிறப்பு இறப்பு என்பது தொடரும். கடோபநிஷத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது.
பயாத ஸ்யாக்னி ஸ்தபதி பயாத்
தபதி ஸுர்யாஹ:
பயாதிந்த் ஸ்ச்ச வாயுஷ்ச
ம்ருத்யுர்தாவதி பஞ்சமஹ:
இஹசேதஷகத போந்து ப்ராக்
ஷரீரஸ்ய விஸ்த்ரச:
தத: ஸர்கேசு லோகேஷு
ஸரிரத்வாய கல்பதே
பாபாவின் சமஸ்கிருத அறிவைக் கண்டு, சிகட்ராவ் பிரமிப்படைந்தார்.

‘‘பாபா, உங்களுக்கு ஆழ்ந்த படிப்பறிவு இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்’’ என்று சிகட்ராவ் கேட்டார்.இவருடைய உருக்கமான பேச்சைக் கேட்டு ஷாமா, மகல்சாபதி, தாத்யா முதலியவர்களுக்குச் சிரிப்பு வந்தது. பாபா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

‘‘அர்த்தம் சொல்கிறேன் கேள். எந்த பிரம்மத்தின் பயத்தினால் நெருப்பு சுடுகிறதோ, சூரியன் பிரகாசிக்கிறதோ, இந்திரன், வாயு போன்ற கடவுள்களும், பிறப்பு, இறப்பு போன்ற செய்கைகளும் தானாக இயங்கிக் கொண்டிருக்கின்றனவோ, அப்படிப்பட்ட பிரம்மத்தை நாம் இறப்பதற்கு முன்னால், இந்த ஸ்தூல சரீரத்துடன் அறியவில்லையென்றால், பல யுகங்களுக்கு, பலவித சரீரங்களை அடைய வேண்டியிருக்கும்.’’

‘‘ஆஹா, நான் தன்யன் ஆனேன். நீங்கள் சொன்ன அந்த பிரம்மத்தை எனக்கு சீக்கிரம் காண்பியுங்கள்’’ என்றான் சிகட்ராவ்.
‘‘அடேய், உனக்குத் தலைமுதல் கால்வரை சுற்றிக் கொண்டிருக்கும் அந்த பிரம்மம் எனும் தளையை அவிழ்த்துக் காட்டுகிறேன்’’ என்று சிரித்துக்கொண்டே பாபா, சிகட்ராவை உட்கார வைத்தார். அவன் பயந்துகொண்டே உட்கார்ந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, பாபா ஒரு பையனை அருகில் அழைத்தார். ‘‘பையா, சீக்கிரமாக நந்து மார்வாடியிடம் சென்று, பாபாவிற்கு ஐந்து ரூபாய் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று சொல்லி உடனே வாங்கி வா.’’

‘‘இதோ வருகிறேன்’’ என்று அந்தப் பையன் ஓடிப்போய், வெறுங்கையுடன் திரும்பினான். ‘‘அவர் வீடு பூட்டியிருக்கிறது’’ என்றான். ‘‘பாளா என்கிற வணிகனிடம் போய்க் கேள்.’’ பையன் ஓடிப் போய், உடனே திரும்பி வந்தான். அவனும் வீட்டில் இல்லை.

‘‘எனக்கு இப்பொழுது ஐந்து ரூபாய் உடனடியாகத் தேவைப்படுகிறது. என்ன செய்வது? இன்னும் ஒருமுறை அண்ணா சௌகாரிடம் போய்க் கேட்டு வா.’’ பையன் ஓடிப் போய், மெதுவாக நடந்து வந்தான். அவனுடைய முகம் வாடியிருந்தது. ‘‘அவரும் இல்லை பாபா. அவர் நிம்காவ் போயிருக்கிறாராம்.’’

‘‘பையா, நீ உட்கார். பலனில்லாமல் போய் வந்து களைத்திருக்கிறாய். எனக்கு கொஞ்ச நேரத்திற்கு ஐந்து ரூபாய் தேவைப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. என்ன செய்வது?’’
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சிகட்ராவ் உட்கார்ந்திருந்தார்.

அவர் குழப்பத்தில் இருந்தார். அவரிடத்தில் 250 ரூபாய் இருந்தது. அதிலிருந்து ரூ.5 கொடுப்பது ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால், அவருடைய கருமித்தனம் தடுத்தது. மேலும், இந்த பக்கீருக்குக் கொடுத்தால், திரும்பி வருமா வராதா என்கிற ஐயம் எழுந்தது. அவர் ஒரு ரூபாயைக் கூட பாக்கெட்டிலிருந்து எடுக்கவில்லை. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பாபாவோ, பிரம்மத்தைக் காண்பிப்பதாக இல்லை. பாபா அவரை லட்சியம் செய்யவில்லை. அவர் இருப்புக் கொள்ளாமல், ‘‘பாபா’’ என்று அழைத்தார்.
‘‘என்ன?’’

‘‘எனக்கு நேரமாகிறது. அவசரமாகச் செல்ல வேண்டும். வாடகை டாங்கா பேசிக்கொண்டு வந்திருக்கிறேன்.’’
‘‘அதற்கு என்ன?’’

‘‘சீக்கிரம் பிரம்மத்தைக் காண்பியுங்கள்.’’
‘‘இதுவரை என்ன செய்துகொண்டிருந்தேன்? உனக்குக் கடவுள் தெரியவில்லையா? உட்கார்ந்த இடத்திலேயே கடவுளைக் காண்பிக்க வேண்டும் என்று இதுவரை முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது உனக்குத் தெரியவில்லையா?

அட பைத்தியக்காரா, கடோபநிஷத்தில் சொல்லப்பட்டிருப்பது போல, கடவுளைப் பார்ப்பதற்காக ஐந்து உயிர், ஐந்து ஞான இந்திரியங்கள், ஐந்து கர்ம இந்திரியங்கள், அகங்காரம், புத்தி மற்றும் மனம் இவை எல்லாவற்றையும் அவனிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும். யோகப்பியாசம் செய்யும்பொழுது, ஐந்து இந்திரியங்களும் மனதும் ஒருநிலைப்படுகிறது. புத்தியும் எந்த சஞ்சலமும் இல்லாமல் ஒரு நிலைப்படுகிறது. அதைத்தான் யோகிகள் ஒரு நிலைப்படுதல் என்கிறார்கள். பிரம்மஞானத்தின் மார்க்கம் கடினமானது.

 இதைச் செய்வது எல்லோருக்கும் சுலபமானது அல்ல. தினமும் முறை தவறாமல் ஒழுக்கத்துடன் கர்மாவைச் செய்து வந்தால், மனமானது சலனமில்லாமல் ஒரு
நிலைப்படும். இதற்கு நாளாகும். அதுவரை, கடவுளை அடைவது என்பது சாத்தியமல்ல. பிரம்மம் என்பது நித்தியமானது. மற்றவையெல்லாம் நிலையற்றது. நாம் பார்ப்பது எல்லாம் நிலையானது அல்ல. இதுதான் உண்மையானது. பிரம்மத்தைப் பற்றி விளக்கிச் சொல்வது கடினம்.

அதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனும் கிடைப்பது அரிது. அன்பும் அனுபவமும் நிறைந்த சத்குரு கிடைப்பதும் அரிது. பிரம்மம் என்ன, வழியில் கிடைக்கும் பொருளா? மலையின் குகைக்குள் அடைந்திருக்கும் யோகிகளுக்கும், தவ வலிமையோடு தியானத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கும்கூட பிரம்மம் தெரிவதில்லை. உன்னைப் போன்ற லோபிகளால் எப்படியப்பா அவ்வளவு சீக்கிரத்தில் அறிய முடியும்?’’
(தொடரும்...)

பிரம்மத்தை இந்த ஸ்தூல சரீரத்துடன் அறியவில்லையென்றால், பல யுகங்களுக்கு, பலவித சரீரங்களை அடைய வேண்டியிருக்கும்.

கடவுளைப் பார்ப்பதற்கு ஐந்து உயிர், ஐந்து ஞான இந்திரியங்கள், ஐந்து கர்ம இந்திரியங்கள், அகங்காரம், புத்தி மற்றும் மனம் இவை எல்லாவற்றையும் அவனிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.

வினோத் கெய்க்வாட்

தமிழில்: பி.ஆர்.ராஜாராம்