1500 ரூபாய்க்கு ஸ்மார்ட போன்!



டெக் உலகின் டாடா நானோ

ரிலையன்ஸ் கொடுத்த ‘ஐந்நூறு ரூபாய்க்கு ரெண்டு’ போனும் டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ காரும்தான் இந்த நூற்றாண்டின் இரு பெரும் வணிகப் புரட்சியாக வர்ணிக்கப்படுகின்றன. இதோ அதில் இன்னொரு என்ட்ரி. வெறும் 1500 ரூபாய் விலையில் ஸ்மார்ட் போன் தயாரித்து விற்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறது மோசில்லா கார்ப்பரேஷன்.

இதை ‘மொபைல் போன் சந்தையில் மாபெரும் சுனாமி அறிகுறி’ என்கிறார்கள் வல்லுநர்கள். நோக்கியா, சாம்சங், மற்றும் மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களில் இப்போது அபாயக் கொடி ஏற்றாத குறைதான்! இணையத்தில் ஒரு முறை உலவியவர்களுக்குக் கூட ‘மோசில்லா’ என்ற பெயரைத் தெரிந்திருக்கும். கணினி வழியாக இணையப் பக்கங்களைப் பார்க்க உதவும்  இன்டர்நெட்  பிரௌ சர்களில் இன்று மோசில்லாவின் நெருப்பு நரி   (Firefox) தான் நம்பர் ஒன்.

மொபைல் உலகிலும் வலது கால் எடுத்து வைக்க நினைத்த மோசில்லா, ஆண்ட்ராய்டுக்கு பதிலாக ஓர் இயங்குதளத்தை உருவாக்கி கடந்த வருடம் வெளியிட்டது. ஆனால், திருப்பதியில் சீப்பு கடை வைத்தது போல, ஆண்ட்ராய்டு காய்ச்சலுக்கு முன்னால் அது போணியாகவில்லை.

ஆக, ‘இனி, நானே போன் தயாரிக்கிறேன். அதில் என் இயங்குதளத்தைப் பயன்படுத்துகிறேன்’ என மோசில்லா எடுத்திருக்கும் அதிரடி முடிவுதான் இது. ‘ஆப்பிளுக்காகவும் அதிநவீன சாம்சங் போனுக்காகவும் காத்திருக்கும் அமெரிக்க மக்கள் எங்கள் குறிக்கோள் அல்ல. இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில், சாதாரண பட்டன் போன் வைத்திருக்கும் சாமானியர்களை நாங்கள் ஸ்மார்ட் போனுக்குள் இழுத்து வரப் போகிறோம்’ என எடுத்த எடுப்பிலேயே தைரிய ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது மோசில்லா.

ஏனென்றால், ஏழைகளின் ஸ்மார்ட் போன் என்றழைக்கப்படும் ஆண்ட்ராய்டு போன்கள் கூட, இதுவரை 3000 ரூபாய்க்குக் கீழ் இறங்கவில்லை. இது அதிலும் பாதி விலைக்கு வந்து பட்டையைக் கிளப்பப் போகிறது. அதுவும் எப்படி? 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகமுள்ள டூயல் கோர் ப்ராசஸர், 2 ஜி.பி உள் ளடங்கிய மெமரி, 512 எம்.பி ராம், 4.5 அங்குல திரை எனப் பல ‘வாவ்’ அம்சங்களோடு!
சரி, இந்த விலை எப்படி சாத்தியம்?

* பொதுவாக எல்லா நிறுவனங்களும் லாபத்துக்காக இயங்குபவை. ஆனால், மோசில்லா நிறுவனம் லாப நோக்கற்ற ஒரு ஃபவுண்டேஷன் மூலம் இயங்குகிறது. ‘நெருப்பு நரி’ உட்பட இதன் மென்பொருள் தயாரிப்புகள் அத்தனையும் இலவசம்தான். இவர்கள் தயாரிக்கும் போனிலும் நிச்சயம் லாப நோக்கம் அதிகம் இருக்காது.

* மொபைல் தயாரிப்புக்காக ஸ்ப்ரெட்டிரம் என்ற சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது மோசில்லா. சீனாவில் விற்கும் மலிவு விலை மொபைல்களில் சரி பாதி இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான் என்றாலும், உலக அளவில் இதன் ரேங்க், 17. ஆக, உலக மார்க்கெட்டில் நிற்பதற்காக இவர்களும் லாபத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போட்டியாளர்களின் ஆறுதல்

* இன்று ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கு லட்சக்கணக்கான ஆப்களும் விளையாட்டுகளும் உருவாக்கப்பட்டு விட்டன. அவை இலவசமாகவே கிடைக்கின்றன. இந்த Firefox இயங்குதள போன்களால் அவற்றைப் பயன்படுத்த முடியாது. எனவே, என்னதான் விலை குறைவென்றாலும் ஆகா ஓஹோ வரவேற்பு கிடைக் காது!

* ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்றவை ஜாவா மொழியில் உருவாக்கப்பட்ட இயங்குதளங்கள். ஆனால், Firefox, HTML5 எனும் மொழியில் உருவானது. இன்றுதான் புதுக்குழந்தையாக உருவெடுத்திருக்கும் இந்த Firefox, மூன்று வருடத்துக்கு முந்தைய ஆண்ட்ராய்டு போலத் தோற்றமளிக்கிறது. யாருக்கும் இதன் மீது ஈர்ப்பு இல்லை!
இதில் நன்மை யாருக்கு?

* ஆப்பிள் உள்ளிட்ட சில பெரிய நிறுவனங்கள் இந்த போனைப் பார்த்து அதிகம் பயப்படவில்லை. காரணம், இந்த போன் ஏற்கனவே ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களை ஈர்க்கப் போவதில்லை. புது வாடிக்கையாளர்களைத்தான் உருவாக்கப் போகிறது. அவர்கள் அடுத்த கட்டமாக ஆப்பிள் போன்ற பெரிய தயாரிப்புகளை வாங்கலாம். சந்தை விரிவடைவது எல்லோருக்கும் நல்லதுதானே!

* ஸ்மார்ட் போன்களின் பெருக்கத்தால் 3ஜி உள்ளிட்ட இன்டர்நெட் பயன்பாடு உயரும். எனவே, ஏர்டெல், வொடஃபோன் உள்ளிட்ட மொபைல் ஆபரேட்டர்களுக்கு கொண்டாட்டம்தான்.
கெட்ட காலம் யாருக்கு?

* அடித்தள மக்களிடம் ஆண்ட்ராய்டு போன்களை விற்கும் இந்திய நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், லாவா, ஸ்பைஸ், கார்பன், செல்கான் போன்றவற்றுக்கு இது பெரிய அடி. அதிரடி விலைக் குறைப்பு செய்யாவிட்டால் நெருக்கடிதான்.

* இந்த போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள Firefox இயங்குதளத்தை பிரபல ஆண்ட்ராய்டு போன்கள் பலவற்றிலும் நிறுவிக்கொள்ள முடியும். ஒருவேளை, பெரும்பாலான மக்களிடம் இருப்பது Firefox போன்கள்தான் என்ற நிலை வந்துவிட்டால், ஆண்ட்ராய்டு போன் ஓனர்களும் அதை Firefox போனாக மாற்றிக் கொண்டால், சாம்சங் போன்ற பெரு நிறுவனங்களின் நிலையே ததிங்கினத்தோம்தான்.

கோகுலவாச நவநீதன்