25 கிலோ நகை... ராஜநடை வடிவேலு!



ஜிகுஜிகு அரண்மனை செட்டில் எக்கச்சக்க இளந்தாரிப் பெண்கள் கிறங்கடிக்க, வடிவேலு ஜாலி கேலி மன்னனாக செம ‘ஜொள்’ளடிக்கிறார். வடிவேலு ஆடுகிற தினுசைப் பார்த்து ஏரியாவே கலகலக்கிறது. எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்திருக்கிறார் யுவராஜ் தயாளன். தமிழகமே எதிர்பார்க்கும், ‘தெனாலிராமன்’ படத்தின் இயக்குநர். ‘‘ஒரு காட்சின்னா வடிவேலு அண்ணன் பல விதமா செய்து காட்டுவார்... எல்லாமே அம்சமா இருக்கும். எதை விடுவது, எடுத்துக்கொள்வது என மூளையில் ‘கிர்’றடிக்கும்.

மகா கலைஞன் இல்லையா, அது அப்படியே ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும். எவ்வளவு மாத்தி செய்தாலும் எதுவும் கேரக்டரை விட்டுத் தாண்டாது. ரொம்ப திருப்தியாக இருக்கிறது. பேப்பரில் இருந்த ஸ்கிரிப்ட் இப்படி நம்ம கண்ணு முன்னாடி முழுசா நடமாடிக்கிட்டு, பேசிக்கிட்டு உடல் அதிர சிரிக்கிற மாதிரி வந்திருக்கு. எல்லாமே வடிவேலுங்கிற கலைஞனால் மட்டுமே சாத்தியம்’’ - சிலிர்த்துப் பேசுகிறார் யுவராஜ்.

‘‘ரெண்டு வருஷ கேப் விட்டு, வடிவேலு நடிக்க வர்ற படம்... அந்த படபடப்பை நீங்களும், அவரும்  ஏத்துக்கிட்டிங்களா?’’‘‘இப்ப அப்படி இல்லவே இல்லை. நாங்க ரெண்டு பேருமே அந்த நிலையில் இல்லை. ஒரு காலம் வரைக்கும் மனசில், நினைவில் அப்படி ஒரு நினைப்பு இருந்தது. எந்த வேலையும் ஆகலை. எதைக் கண்டாலும் பயம். யார் என்ன சொல்லுவாங்களோன்னு ஒரு நினைப்பு விடாம துரத்திக்கிட்டே இருக்கும். திடீர்னு நாங்க ரெண்டு பேருமே அந்த நினைப்பையெல்லாம் தூக்கி தூரப் போட்டோம்.

ஷூட்டிங்குக்கு வந்துட்டா, இருபது இருபத்தஞ்சு கிலோ நகைகளை போட்டுக்கிட்டு அப்படியே அவர் ராஜநடை நடக்கிறதைப் பார்த்தால் எல்லா டென்ஷனும் ஓடிப் போயிடும். அந்த நகைகளே பெரிய லக்கேஜ் மாதிரி... அந்தக் காலத்தில அதையெல்லாம் போட்டு நடிச்சு, ஆடி, பாடி, வசனம் பேசி... அய்யோ, ரொம்பக் கஷ்டம்ணே! எம்.ஜி.ஆர்., சிவாஜி எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாங்கன்னு இப்பதாண்ணே தெரியுது. ‘அது சரி, மக்கள் நம்மளை ரசிக்கிறாங்களே, அதுக்காக எம்புட்டு அளவுக்கும் சிரப்படலாம்ணே’ன்னு வடிவேலு சொல்வார். மக்களோட நாடித் துடிப்பை அறிஞ்ச மனுஷன்... எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்’’

‘‘இரட்டை வேடமாச்சே... எப்படியிருக்கு?’’ ‘‘அவர் செய்திருக்கிற வித்தியாசத்தை நினைச்சுப் பார்த்தால், யாராலும் நம்பவே முடியாது. ‘இம்சை அரசனில்’ ஒருத்தர்தான் சிரிப்பு... இன்னொருத்தர் சீரியஸ் அரசன். வடிவேலு அண்ணன் அதை சும்மா ஊதிக் காட்டிட்டுப் போயிட் டார். இதில் தெனாலிராமன், மன்னன் இரண்டு பேருமே சிரிப்புதான். டயலாக் பேசுறதுக்கு முன்னாடியே களை கட்டும். ரெண்டு பேரும் ஒரே ஆளுன்னு எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது.

மன்னன்னா வேற நடை, உடை, பாவனை, பேச்சுன்னு பின்னுவார். அப்போ மருந்துக்குக்கூட தெனாலிராம னின் சாயல் எட்டிப் பார்க்காது. தெனாலிராமனா வந்திட்டா பண்ற சேட்டைகள், அக்குறும்பு எதுவும் மன்னன் கேரக்டரில் தெரியாது. நாமெல்லாம் அஞ்சாறு மிருகக்காட்சி சாலைகளை உள்ளே வச்சுக்கிட்டு உறுமிக்கிட்டே இருக்கோம்.

இப்ப தெரியாத்தனமா கூட பேப்பரைப் பிரிச்சு பார்க்க முடியுதா? எந்தப் பிரச்னையும் இல்லாம ‘அப்பாடா’ன்னு சிரிப்பும், களிப்புமா பார்க்கத்தான் இப்ப படம் தேவை. ரெண்டு பேரா உயிர் மாறி செய்த மாதிரி உழைச்சிருக்கார் வடிவேலு அண்ணன். இதோ பிள்ளைகளுக்கு லீவு விட்ட பின்னாடி தெனாலிராமன்தான். மக்களுக்கு திருவிழாதான். ரெண்டு வருஷமா அவரை எப்படி தவறவிட்டிருக்கோம்னு தெரியும்ங்க... இதை நான் சொல்லாட்டியும் நீங்க சொல்லப்போறீங்க’’

‘‘நிறைய வதந்திகள் கிளம்பிச்சே...’’ ‘‘ஆமாங்க... எங்களுக்கே ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும். ஷூட்டிங் வர்றதுக்கு முன்னாடி இன்னிக்கு என்ன செய்தி றெக்கை கட்டி பறக்குதுன்னு அண்ணன் கேட்டுக்கிட்டே வருவார். டைரக்டருக்கும் வடிவேலுவுக்கும் சண்டை, புரொடியூசர் கோபம், ‘செட்’டை பிரிச்சாச்சுன்னு செய்திகள்லயே நிறைய காமெடி. வடிவேலு அண்ணனுக்கு காமெடிதான் சாமி! எல்லோரும் பயமுறுத்தினாங்க. ‘அவர் சீனியர். நீயெல்லாம் அவரோட படம் செய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க.

ஆனா, அண்ணன் அபூர்வ வகை மனுஷன். அதைவிட பெரிய கலைஞன். நடிச்சு பின்னுவார். ‘எப்படி நடிக்கணும்னு சொல்லுய்யா’ன்னு ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்டுட்டு, அவர் தர்றது எல்லாமே எங்களுக்கு கொடைதான்!’’‘‘ஹீரோயின் பத்தி சொல்லுங்க... அதுவும் விஷயம்ல?’’ ‘‘மீனாட்சி தீட்சித்னு மும்பையிலிருந்த பொண்ணு. தமிழ் மட்டும்தான் வராது. அவங்க பேச வேண்டிய வசனத்தை வடிவேலு அண்ணன்கிட்டே கொடுத்திடுவேன். அவர் சிரிச்சு சொல்லிக் கொடுத்து, அந்தப் பொண்ணு அதை அப்படியே திருப்பிச் சொல்லிடும். நமக்கு பாதி வேலை குறைஞ்ச மாதிரி...’’ ‘‘இமான்... பழைய இசைக் கோர்ப்புகளில் எப்படி?’’

‘‘இமான்கிட்ட எதையும் கேட்கலாம். அப்படியே அந்தக் காலத்திற்கு நம்மைக் கூட்டிட்டுப் போறார். இப்ப இருக்கிற அவர் பெயருக்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை. எந்தக் காலத்தையும் அவரால் கொண்டு வர முடியுது. படத்தில் இருக்கிற நல்ல விஷயங்களில் இசையும் ஒண்ணு!’’

நா.கதிர்வேலன்