ஏவி.எம். வாரிசுகள்!



அது என்ன கணக்கோ தெரியவில்லை... நிறுவனங்களின் உயர் பதவிகளில் எல்லாம் ஆண்களாகவே இருக்கிறார்கள். அபூர்வமாகத்தான் பெண்கள்! பிரசித்தியும் பாரம்பரியமும் பெற்ற ஏவி.எம் நிறுவனத்துக்குள் நுழைந்தால், ஹைய்யோ... இரண்டு இளம்பெண்கள். அபர்ணா குகன், அருணா குகன் என இந்த துறுதுறு இரட்டையர் ஏவி.எம் அலுவலகத்துக்குள் நிர்வாகம் கற்க வந்தாச்சு! ‘‘படிச்சிட்டு இருக்கும்போதே தாத்தா, அப்பாவோட சினிமா பிசினஸைனு கவனிச்சுக்கிட்டே இருப்போம்.

சின்னப் பிள்ளைகளா இருக்கும்போது ஷூட்டிங் பார்க்கக் கூட வந்ததில்லை. படிப்புதான் முக்கியம் என்பதில் அம்மா ரொம்ப கண்டிப்பு. இன்னும் சொன்னால், நாங்க பார்த்த முதல் ஏவி.எம் படம் ‘மின்சார கனவு’தான். அதில் சண்டைக் காட்சிகள் இல்லை என்பதால் பார்க்க விட்டார்கள். அந்த எட்டு வயதில், காஜோலோடு கொஞ்ச நேரம் நடனம் ஆடியது கூட ஞாபகத்தில் இருக்கிறது’’ - என்கிறார்கள் இருவரும். அருணா படித்தது ஃபைன் ஆர்ட்ஸ். அபர்ணா நுழைந்தது பிஸினஸ் படிப்பில். தற்போது, அபர்ணா ஏவி.எம்மின் இயக்கத்தைக் கையாள, அருணா எடிட்டிங், பப்ளிசிட்டி, காஸ்ட்யூம் டிசைன், புதிய யோசனைகளைச் செயல்படுத்துவது என பரபரக்கிறார்.

‘‘ஓரளவு வளர்ந்த பிறகு எங்க குடும்ப பிசினசைத் தெரிந்துகொள்வதுதான் சரியானது என்பதை உணர்ந்தோம். நிறைய தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நிறைய கத்துக்கணும். அது எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும்னா அது ஏவி.எம்ல தான். ஸோ, பிளஸ் 2 முடித்த பிறகு ஏவி.எம்மில் நுழைந்து எங்களின் இடத்தைத் தெரிந்துகொண்டோம்.’’ - அபர்ணா பேச, தொடர்கிறார் அருணா...

‘‘எங்க தாத்தா ஏவி.எம்.சரவணனோடு எங்களுக்கு மிகுந்த இணக்கம் உண்டு. அவருக்கு இப்போதும் நாங்கள் குழந்தைகள்தான். அவரின் எக்கச்சக்க அனுபவம் எங்களுக்கு ஆச்சரியம். அவருக்குத் தெரியாத சினிமாவின் பக்கங்கள் கிடையாது. நாங்கள் தாத்தாவோடு உட்கார்ந்து ஸ்கிரிப்ட் விவாதங்களில் இடம் பெறுவதுண்டு.

அபர்ணாவின் விருப்பங்களில் சமூக நலனுக்கும் இடம் உண்டு.   ஜிபிசிதி எனப் பெயரிடப்பட்டிருக்கிற கேன்சர் ஃபவுண்டேஷன், புற்றுநோயை தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஆராய்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் வழி செய்கிறது. அவர் பள்ளிகளுக்குப் போய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குகிறார்’’ என்கிற அருணா, ஏவி.எம்மின் கிரியேட்டிவ் வேலைகளில் தன்னை வெகுவாக ஈடுபடுத்திக்கொள்கிறார்.

‘‘பெண்ணாகப் பிறந்து விட்டோமோ என்ற பரிதாப உணர்வும் எங்கள் தாய், தந்தையருக்கு கிடையாது. சமூகத்தில் பெண்களுக்கான இடம் எப்போதும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கக் கூடாது. எங்களை அதுபோலத்தான் வளர்த்திருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை பெண்களுக்கான இடத்தை அவர்கள் விட்டுத்தரக்கூடாது. திருமணம் செய்துகொண்டாலும், தங்கள் சுயத்தை இழக்காதிருக்க வழிவகை செய்துகொள்ள வேண்டும்.

பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு. அதை வெளிக்கொண்டு வந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஒரு புது மனுஷியாக கம்பீரமாக இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டும்!’’ என்கிறார்கள் அபர்ணாவும், அருணாவும். கடந்த இரண்டு வருடங்களாக யூ-டியூப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் நுழைந்து ஏவி.எம்மின் மெருகேற்றிய பக்கங்களை உலகுக்கு அடையாளப்படுத்துகிறார்கள் இருவரும். அந்த விதத்தில், தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் இளைஞர்களின் புது உலகத்தை காட்டுகிறார்கள்.

‘‘சினிமாவுக்கு ஒரு மியூசியம் அமைக்க ஏவி.எம்முக்கு முழுத் தகுதி உண்டு. அதற்கான ஒரு திட்டம் கூட இருக்கிறது. இத்தனை வருடப் பாரம்பரியத்தில் ஏவி.எம் நிறுவனம், தான் பெற்ற அனுபவங்களை இளைஞர்களிடம் பகிர வேண்டிய கடமையும் இருக்கிறது’’ என்கிற இந்த இளம் ரத்தங்கள் இணைந்து, ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பெயரில் 55  நிமிட திரைப்படத்தைத்  தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். யூ-டியூபில் அது செம ஹிட்! க்ஷ்சோ ச்வீட்ல!

நா.கதிர்வேலன்