கச்சத்தீவு இப்போது ஒரு நேரடி ரிப்போர்ட்



கச்சத்தீவு... நம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தமிழக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் அழுத்தமாக உச்சரிக்கும் பெயர்.

‘கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை கோர்ட்டிலும், மத்திய அரசிடமும், தேர்தல் அறிக்கையிலும் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக கச்சத்தீவில் நடந்துவரும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, இந்த வருடம் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்ததற்கு அதுவே காரணம். இரு நாட்டு மீனவர் பிரச்னை சூறாவளியாக சுழன்றடிக்க, அதன் நடுவே மக்களோடு மக்களாக கச்சத்தீவு பயணம் மேற்கொண்டோம்...

காலை 6.00 மணி... இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்படும் செய்தி கேட்டு கொஞ்சம் கலகலப்பாகவே இருக்கிறது ராமேஸ்வரம். அங்குள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கு தமிழகம், புதுச்சேரி என எல்லாப் பகுதியிலிருந்தும் மக்கள் கூட்டம் குவிகிறது. படகு எண் மைக்கில் அறிவிக்கப்பட, அதற்குரியவர்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக எடுத்துக்கொண்டு வரிசையில் முன்னேறுகின்றனர். க்யூ பிரிவு போலீசாரின் அரை மணி நேர முதல்கட்ட சோதனை... கஸ்டம்ஸ் அதிகாரிகளின் அடுத்தகட்ட சோதனை... எல்லாம் முடிந்து படகு ஏறவே 2 மணி நேரம் பிடித்துவிடுகிறது.

தமிழகத்திலிருந்து 97 படகுகளில் 3,150 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கிறிஸ்துவர் மட்டுமல்லாது இந்து, முஸ்லிம் என எல்லா மதத்தினரும் இதில் அடக்கம். ராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்காக 17 கி.மீ தொலைவில் இருக்கும் கச்சத்தீவை நோக்கிப் புறப்படுகிறது படகு. ஒவ்வொரு 3 கி.மீ இடைவெளியிலும் இந்திய கடற்படையினர், படகு எண்களையும், பயணிகள் எண்ணிக்கையையும் சரி பார்க்கின்றனர். கச்சத்தீவை நெருங்கும் சர்வதேச கடல் எல்லையில், இந்தியக் கடற்படை கப்பல் மட்டுமல்லாது இலங்கை கடற்படை கப்பலும் சேர்ந்து, இதே ‘சரி பார்த்தல்’ வேலையைச் செய்கிறது. இவ்வளவையும் கடந்து கச்சத்தீவில் காலடி வைக்க மூன்று மணி நேரம் பிடிக்கிறது.

சுற்றிலும் கடல். அதன் நடுவே 285 ஏக்கரில் ஒரு நிலப்பரப்பு. ‘இந்தத் தீவு எங்களுக்கு மட்டுமே உரிமையானது’ என அழுந்தச் சொல்கின்றன வரிசை கட்டி நிற்கும் இலங்கை கொடிகள். ‘இலங்கை உங்களை வரவேற்கிறது’ என்கிற பேனர் அருகே இலங்கையின் சோதனைச் சாவடி. அதைக் கடந்து புதர்களாக மண்டிக் கிடக்கும் சிறு மரங்களின் ஊடே செல்கிறது மண்பாதை. அதன் இருபுறங்களிலும் இலங்கை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.

சோப்பு, தேங்காய் எண்ணெய், ஸ்கிரீன் துணிகள், நிலக்கடலை எனக் கொண்டு வந்திருந்த பொருட்களை அவர்கள் கூவிக் கூவி விற்கிறார்கள். இதில் ராணி குளியல் சோப்பிற்கும் தேங்காய் எண்ணெய்க்கும் ஏக டிமாண்ட். பதிலுக்கு நம்மவர்கள் கடலை மிட்டாய்களை விற்க, பழைய பண்டமாற்று நவீன முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

புனித அந்தோணியார் ஆலயம், ஓடுகள் வேய்ந்த சிறிய சுவர்க்கட்டிடம்தான். அதன் உள்ளே சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கிறார் புனித அந்தோணியார். மாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. முதலில் தொடங்கிய சிலுவை பாதை நிகழ்ச்சியில் சிலுவை தூக்கிக்கொண்டே இருநாட்டு மக்களும் மீனவர்களும் நல்லுறவுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள். திருப்பலி, தேர்பவனி என அந்தப் பௌர்ணமி நாளில் விழா விறுவிறுப்படைகிறது.

‘‘இத்தனை கெடுபிடி தாண்டியும் இங்கே வர்றோம்னா, அதுக்குக் காரணம் அந்தோணியாரோட சக்திதான். ஹார்ட் அட்டாக் வந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். போன வருஷம் வந்து அந்தோணியாரை கும்பிட்ட பிறகு எல்லாம் சரியாயிருச்சு’’ என்கிறார் அரியலூர் அருகே உள்ள குலமாணிக்கம் கிராமத்திலிருந்து வந்திருந்த ஆல்பர்ட். அதேபோல் மதுரையிலிருந்து வந்திருந்த டேவிட், அந்தோணியாரை வணங்கிய பிறகு குழந்தைப் பேறு கிடைத்ததாகக் கூறுகிறார்.

‘‘முன்னாடி இங்க கிடா வெட்டி, மொட்டை போட்டு, காது குத்தி வேண்டுதல்களை நிறைவேத்துவாங்க. அந்தளவிற்கு விழா சிறப்பா இருக்கும். அந்தக் காலம் மறுபடியும் வரணும்’’ என நெகிழ்கிறார் ராமேஸ்வரம் மீனவர் எமரிட். இலங்கையிலிருந்தும் சுமார் 3 ஆயிரம் பேர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நீர்க்கொழும்பு, தலைமன்னார் போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.
‘‘முப்பது வருஷத்துக்கு முன்னாடி இங்க ரொம்ப சிறப்பா இருக்கும். அப்ப 60 ஆயிரம் பேர் வருவாங்க. அது ஒரு காலம்’’ எனப் பெருமூச்சு விடுகிறார் நெடுந்தீவின் வருவாய் ஆய்வாளர் எட்வர்டு அருந்தவ சீலன்.

‘‘கடல்ல வழி தெரியாம தத்தளிச்ச நிறைய பேரை அந்தோணியார் காப்பாத்தி இருக்கார். இனக்கலவரத்துக்குப் பிறகு இப்பதான் மக்கள் வர ஆரம்பிச்சிருக்காங்க. இலங்கை அரசு 32 லட்ச ரூபாய் செலவுல இந்த வருஷம் 80 டாய்லெட் கட்டியிருக்கு. தண்ணீர் டேங்க் வச்சிருக்கோம். அடிப்படை வசதிகள் பண்ணிட்டிருக்கோம். இந்திய அரசு மூணு வருஷமா திருவிழாவுக்காக 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்குது. அடுத்த வருஷம் இன்னும் சிறப்பா இருக்கும்’’ என்கிறார் அவர் உற்சாகமாக.

‘‘போன மாசம்தான் எனக்குக் கல்யாணம் ஆச்சுங்க. இனியாவது மீன்பிடி தொழில் நல்லா நடக்கணும்னு அந்தோணியார்கிட்ட கேட்டுக்கிட்டேன். ஆனா, அது தமிழ்நாட்டு மீனவர்கள் மனசு வச்சாதான் முடியும்’’ என்கிறார் தலைமன்னாரிலிருந்து வந்திருக்கும் மீனவர் ராஜன். ‘‘தமிழ்நாட்டு மீனவர்கள் இங்க வரைக்கும் வந்து இழுவலையை வச்சு எல்லா மீனையும் அள்ளிட்டுப் போயிடறாங்க. ராத்திரி தமிழ்நாட்டு மீன்பிடி படகெல்லாம் எங்க தீவு கிட்டதான் நிற்குது. அவங்க ‘போட்’ல போடுற பாட்டு கூட எங்களுக்கு நல்லா கேட்கும். அவங்களால எங்களுக்கு மீன் காணல. நாங்க வாரத்துல மூணு நாளு சாதாரண நாட்டுப் படகுலதான் மீன் பிடிக்கோம். ஒரு நாளைக்கு 300 ரூபாய்தான் கிடைக்குது. எப்படி சமாளிச்சு வாழ் றது?’’ என்கிறார் நெடுந்தீவு மீனவர் சங்கத்தைச் சேர்ந்த செல்வா.

ஆனால், ‘‘அங்கேதான் மீன்வளம் இருக்கிறது. வேறு எங்கே போய் மீன்பிடிக்க?’’ எனக் கேள்வி எழுப்புகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிஐடியு மீன்பிடி தொழில் சங்க மாவட்டத் தலைவர் சுடலைக்காசி. ‘‘கச்சத்தீவிலேயே கிடையா கிடந்து மீன் பிடிச்ச காலமெல்லாம் உண்டு. இந்த குடாவுல நெடுந்தீவு, கச்சத்தீவுன்னு சுத்தியிருக்கிற தீவுகள் பக்கத்துலதான் கணவாய், இறால், கட்லான்னு வெரைட்டியான மீன் வகைகள் கிடைக்குது. அவங்களும் நம்ம பகுதிக்கு வந்து மீன் பிடிச்சுட்டுப் போவாங்க.

நடுக்கடலுக்குள்ள நம்ம மீனவர்கள் அவங்களுக்கு ஊறுகாய் தருவோம். அவங்க தேங்காய்ப்பால்ல வச்ச மீன் குழம்பு தருவாங்க. தாயா பிள்ளையா பழகினோம். திடீர்னு இப்ப மீன் பிடிக்கிற உரிமையை ஏன் பறிக்கிறாங்க? கச்சத்தீவு ஒப்பந்தத்துல திருவிழாவுக்கு வர்றது, மீன் பிடிக்கிறதுன்னு எல்லாமே சொல்லியிருக்கு. அதை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே...’’ என்கிறார் அவர் ஆதங்கத்தோடு!

மறுநாள் காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது நம் பயணம். வழக்கமாக இலங்கைக் கடற்படைத் தலைவர் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த விழாவில், முதல்முறையாக ராணுவ லெப்டினட் ஜெனரல் தயா ரத்னகே கலந்துகொண்டது அனைவருக்கும் வியப்பு. ‘கச்சத்தீவு மீது யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை உறுதிப்படுத்தவே அவரின் வருகை’ என்கின்றனர் அங்கு வந்திருந்த இலங்கை பத்திரிகையாளர்கள். கடற்படை முகாமின் விரிவாக்கமும் கூடுதல் கட்டிடங்களும் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த இலங்கையின் கொடிக் கம்பங்களும் அதையேதான் வழி மொழிகின்றன!

கடல் போதாது!

இழுவலை மீன்பிடிப்பு பற்றி தமிழக மீனவர் தரப்பு என்ன சொல்கிறது? ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜாவிடம் பேசினோம். ‘‘இழுவலையை ஆழ்கடல்லதான் பயன்படுத்தணும்னு சொல்றாங்க. நாங்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பழகலை சார். மீன் வளம் நிறைஞ்ச கச்சத்தீவு, நெடுந்தீவு, அப்படியே கக்கடாதீவு, பேசாலை, தலைமன்னார், தனுஷ்கோடின்னு ஒரு ரவுண்ட் அடிச்சி அந்த ‘குடா’வுக்குள்ளதான் காலம் காலமா மீன் பிடிக்கிறோம். இப்ப கூடாதுன்னா எங்க போவோம்?

நம்ம நாட்டுல இழு வலைக்கு தடை கிடையாது. உடனே இதை விட முடியாட்டாலும் மீன்வளம் கெடும்னு சொல்றதால நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்டுதான் வர்றோம். அவங்க சொல்ற மாதிரி சாதாரண வலையைப் பயன்படுத்துணும்னா, இருக்கிற மீனவர்கள் எண்ணிக்கைக்கு இந்த மாதிரி 10 குடா கடல் தேவைப்படும். நாங்க வருஷத்துல 50 நாள்தான் மீன் பிடிக்கவே போறோம். அவங்க ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கப் போறதில்ல.

அதுல 52 நாட்கள் வருது. கூட ஒரு 20 நாட்கள் சேர்த்து 72 நாட்கள் எங்களுக்கு மீன் பிடிக்க வழி வகை செய்யுங்கன்னு கேக்குறோம். எதையும் செய்யாம எல்லை தாண்டுறாங்கன்னு கொடுமைப்படுத்துறதைத்தான் பொறுத்துக்க முடியலை. இலங்கையில நடக்குற மீனவர் பேச்சுவார்த்தையில இதைத்தான் வெளிப்படுத்தப் போறோம்’’ என்றார் அவர்.

பேராச்சி கண்ணன்
படங்கள்: பரமேஸ்வரன்