பொறுப்பு



கே.எம்.எஸ்

‘‘கேஷியர் கவுன்ட்டர்ல தூங்குறாரா? கியூ கொஞ்சங்கூட நகரலை..? பேங்க் எல்லாத்தையும் தனியார் மயமாக்கணும். அப்பதான் சரிப்பட்டு வரும்’’ - பொறுமை இழந்த ஒருவரின் கத்தல்.
அதைத் தொடர்ந்து தலைக்குத் தலை கூச்சல், குழப்பம்.

ஆனால், கேஷியர் கேசவன் வாயே திறக்கவில்லை. மௌன விரதம் போல அமைதியாக இருந்தார். அதுதான் ஏனென்று சீஃப் மேனேஜர் சிவராமுக்குப் புரியவில்லை. தன் கண்ணாடி அறையிலிருந்து எல்லாவற்றையும் கவனித்தவர், பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

நீண்ட நேர தேக்கத்திற்குப் பிறகு, திடீர் திருப்பமாக வரிசை மளமளவென்று கரைந்தது. மதிய இடைவேளையின்போது கவுன்ட்டரை மூடிய கேசவனுக்கு, சீஃப் மேனேஜரிடமிருந்து அழைப்பு.
‘‘என்ன கேசவன்! ‘கவுன்ட்டிங் மிஷின் ரிப்பேர்...

அதான் லேட்டாகுது’ன்னு வாயைத் திறந்து சொல்ல வேண்டியதுதானே..?’’ ‘‘சார்... வரிசையில முதல் ஆளா ஒரு வயசானவர். என்ன அவசரத் தேவையோ... ஒரு லட்சத்து இருபதாயிர ரூபாய் எடுத்தார். அவ்வளவு பணத்தைக் கையில எண்ணிக் கொடுத்தா லேட் ஆகத்தான் செய்யும்னு நான் சொல்லியிருந்தா, அது பணம் எடுத்திட்டுப் போற அந்தப் பெரியவருக்குப் பாதுகாப்பா இருக்காது. அதான் பேசலை!’’ பொறுப்பான இந்த பதிலில் பூரித்துப் போனார் சீஃப் மே னேஜர்.