கிரிவலப் பாதைக்கு ஆபத்து?



திருவண்ணாமலையை சுற்றும் அபாயம்

மனதை தூய்மையாக்கும் அமைதியும், உடலுக்கு இதம் தரும் தூய காற்றும், இயற்கையும், இறையும் கலந்த தெய்வீகப் பிரவாகமும் ஒருங்கே பொதிந்த புண்ணியத்தலம் திருவண்ணாமலை. தகிக்கும் பௌர்ணமி நிலவொளியில், இந்த சுகானுபவத்தைப் பெறுவதற்காகத்தான் பல லட்சம் பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி வருகிறார்கள். இந்த உன்னதத்தை அனுபவிப்பதற்காகவே உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் திருவண்ணாமலையை நாடி வருகிறார்கள்.

இந்த தெய்வீக அமைதியையும், தூய காற்றையும், பரிசுத்தமான இயற்கையையும் சிதைத்து, சூழலைக் குலைப்பதற்கான ஆயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டியிருக்கிறது கவுத்தி-வேடியப்பன் மலைத்தொடர். 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களையும், 60க்கும் மேற்பட்ட விலங்கினங்களையும், 80க்கும் மேற்பட்ட பறவை வகைகளையும், ஏராளமான மூலிகை வளத்தையும் உள்ளடக்கிய புதர்காட்டைத் போர்த்திக் கொண்டிருக்கும் இம்மலைகள், திருவண்ணாமலையைப் போலவே ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் வேடியப்பன் வழிபாட்டின் தலைமை பீடம், வேடியப்பன் மலைதான். இம்மலைக் கோயிலுக்கு பின்புறம் சுரக்கும் ஊற்று நீரைக் குடித்தால் எந்நோயும் தீரும் என்பது நம்பிக்கை. கவுத்தி மலை, கௌதம முனிவரின் ஆசிரமம் இருந்த மலை. இம்மலைச்சாரலில் உற்பத்தியாகும் துரிஞ்சலாற்றில் மாசி மகத்தன்று நீராடுவது புனிதமாகக் கருதப்படுகிறது.

இந்த மலைகளில் சுமார் 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரும்புத்தாதுவை வெட்டி எடுக்கும் பணியை ஜிண்டால் நிறுவனத்தோடு இணைந்து மேற்கொள்ள தமிழக தொழில் மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ) 2009ல் முடிவு செய்தது. இதற்காக இரு நிறுவனமும் இணைந்து ‘தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம்’ (டிம்கோ) என்ற நிறுவனத்தை நிறுவின. வேடிக்கை என்னவென்றால், இந்த நிறுவனத்தில் ஜிண்டாலின் பங்கு 99%. தமிழக தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு 1%. 2009 தொடக்கத்தில் இது தொடர்பான செய்திகள் வெளிவந்தவுடன் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

‘‘இங்க வர்றதுக்கு முன்னாடி சேலத்துக்குப் பக்கத்தில கஞ்சமலைக்கு போயிருக்கு ஜிண்டால் நிறுவனம். அங்கே மக்கள் எதிர்ப்பு தெரிவிச்ச உடனே இங்கே வந்திருக்காங்க. இங்கேயும் கடும் எதிர்ப்பு. கருத்தறியும் கூட்டங்கள்லயும் எதிர்ப்பு தெரிவிச்சோம். அப்போ கலெக்டரா இருந்த ராஜேந்திரன், மக்களோட குரலுக்கு மதிப்பளிச்சு அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அதன்பிறகு திட்டத்தைக் கிடப்புல போட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் ஜிண்டால் நிறுவனம், உச்ச நீதிமன்றத்துக்குப் போய் அனுமதி கேட்டுச்சு. உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெய்கிருஷ்ணன் தலைமையில ஒரு ஆய்வுக்குழுவை நியமிச்சுச்சு. அந்தக் குழு ரகசியமா வந்து ஆய்வு பண்ணிட்டுப் போயிடுச்சு.

இன்னும் முறையான அனுமதி வழங்கப்படாத நிலையில, வேலைகளை படிப்படியா ஆரம்பிச்சுட்டாங்க. தலைமுறை தலைமுறையா எங்களுக்கு வாழ்வாதாரமாவும், வழிபாட்டுத் தலமாவும் இருந்த மலையை வெடி வச்சுத் தகர்த்து எங்க வாழ்க்கையை நாசமாக்கப் போறாங்க...’’ - மிகவும் வருத்தமாகப் பேசுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியும், கவுத்தி-வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அழகேசன்.

‘‘இந்த மலையில ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கு. ஆனா 8 மீட்டர் சுற்றளவு இருந்தாதான் அது மரம், இல்லைன்னா புதர்னு கணக்கு பண்ணி, இப்போ ஒன்றரை லட்சம் மரங்கள்தான் இருக்குன்னு சொல்றாங்க. இங்கவுள்ள மரங்களை அழிச்சுட்டு, அதுக்குப் பதிலா அம்பாசமுத்திரத்துல மரம் வளர்ப்பாங்களாம். இந்தக் கொடுமை உலகத்துல எங்காவது உண்டா? ஒரு வருஷத்துக்கு 1 மில்லியன் டன் இரும்புத்தாது எடுக்கிறதா சொல்றாங்க. 10 டன் மலையை உடைச்சு, சலிச்சா 4 டன் இரும்புத்தாது கிடைக்குமாம். அப்போ, 1 மில்லியன் டன்னுக்கு எவ்வளவு மலையை ஒடைப்பாங்க? உடைக்கும்போது மண்ணை 361 மீட்டர் உயரத்துக்குக் கொட்டி வைப்பாங்களாம். ‘100% வெடி வச்சுத் தகர்ப்போம்’னு சொல்றாங்க.

இங்கிருந்து 8 கிமீ தொலைவில திருவண்ணாமலை கிரிவலப்பாதை இருக்கு. அமைதியையும் ஆண்டவனோட ஆசியையும் நாடித்தான் மக்கள் திருவண்ணாமலைக்கு வர்றாங்க. அமைதிக்குப் பதிலா வெடிச்சத்தமும், ஆண்டவனோட ஆசிக்குப் பதிலா தூசியும்தான் அவங்களுக்குக் கிடைக்கும். உருவாகுற கழிவுநீரை எங்கே விடுவாங்கன்னு திட்டமில்லை. நிலத்தடி நீர்ல இரும்புத்தாது கழிவுகள் சேந்தா என்னவாகும்? இந்த மலையில உருவாகுற துரிஞ்சலாறை வச்சு 147 ஏரிகளுக்கு நீர்ப் பாசனம் செய்யிறதுக்காக 1000 கோடி செலவுல நந்தன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கு. ஜிண்டால் போட்டிருக்கிற ப்ராஜெக்ட் படி துரிஞ்சலாறு இடைமறிக்கப்படுது. அப்போ அந்த திட்டம் என்னவாகும்? மலையைச் சுத்தியிருக்கிற 60 கிராமத்து மக்களும் சோத்துக்குப் பதிலா இரும்பைத் திங்க முடியுமா? காத்துக்குப் பதிலா தூசியை சுவாசிக்க முடியுமா..?’’ - ஆதங்கமாகக் கேட்கிறார் அழகேசன்.

‘‘பாறைகளை வெடி வச்சுத் தகர்க்கிறப்போ பாதிப்பு ஏற்படலாம்னு அவங்களே சொல்றாங்க. அதுக்குப் பதிலா ஆஸ்பத்திரி கட்டித் தருவாங்களாம். எங்களுக்கு உங்க நோயும் வேண்டாம், ஆஸ்பத்திரியும் வேண்டாம். பாதுகாப்புன்னு காரணம் சொல்லி மக்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உண்டுங்கிறாங்க.

ஏற்கனவே ரோடு போடுறோம்னு சொல்லி நிலத்தையே மூளி ஆக்கிட்டாங்க. கர்நாடகாவில் குதிரேமுக் பகுதியில இரும்புத்தாது எடுத்ததால துங்கபத்ரா, நேத்ராவதி நதிகளே கெட்டுப் போச்சு. பக்கத்தில இருந்த பெரிய அணைக்கட்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாயிடுச்சு. பல்லாயிரம் மக்கள் இடம் பெயர்ந்துட்டாங்க. குடிநீர் கிடைக்கலே. பெயர் தெரியாத நோயெல்லாம் வந்திருக்கு.

கண்முன்னாடி உதாரணத்தை வச்சுக்கிட்டு எப்படி நாங்க வாழ்க்கையை காவு கொடுக்கமுடியும்...? மலை மட்டுமில்லாம 27 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாழாகப்போகுது. ஜிண்டால் நிறுவனம் செயல்படுற பல இடங்களுக்கு நாங்க போய் ஆய்வு பண்ணியிருக்கோம். எந்த இடத்திலயும் இவங்க சொன்னதை செய்ததே இல்லை. இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தப்போற இந்த திட்டத்துல உள்ளூர் ஆட்கள் 180 பேருக்கு வேலை கொடுப்பாங்களாம். அதுவும் வாட்ச்மேன், டிரைவர், கிளீனர் வேலை.

போன சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக திருவண்ணாமலை வந்த முதல்வர் ஜெயலலிதா, ‘இந்தத் திட்டம் கைவிடப்படும்’னு சொன்னாங்க. இப்ப திரும்பவும் தூசி தட்டப்படுது. ஆனா, கடைசி மனுஷனோட உயிர் இருக்கிறவரை எங்க மலையில யாரும் கை வைக்க முடியாது’’ என்று ஆவேசமாகிறார் எழுத்தாளர் குமார் அம்பாயிரம். கல்வெட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான நெடுஞ்செழியன், கவுத்தி-வேடியப்பன் மலைகளை ‘பண்பாட்டு அடையாளங்கள்’ என்கிறார்.

‘‘வேடியப்பன், நடுநாட்டின் எல்லைக்காவலர். இன, மொழி, ஜாதி, மத பேதமின்றி எல்லோரும் அவரை வழிபடுகிறார்கள். இம்மலையில் கி.பி.1200களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் இருக்கின்றன. கற்களை அடுக்கி அறைபோன்ற ஒரு கட்டுமானமும் இருக்கிறது. நாகரிகத்தின் பாதையை அறிந்து கொள்ளும் சாட்சியாக இருக்கிற இந்த மலையை கனிம நிறுவனத்துக்கு தாரை வார்ப்பது அநீதி’’ என்கிற நெடுஞ்செழியன், ‘‘நாம் பல தொழிற்சாலைகளை உருவாக்கலாம்; பல நகரங்களை உருவாக்கலாம்; ஒரு மலையை எக்காலத்திலும் உருவாக்க முடியாது’’ என்று கடுமையாக எச்சரிக்கிறார்.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை அழித்து, பல லட்சம் பேரின் தாகம் தீர்க்கும் ஒரு நதியை அழித்து, வானுயர்ந்து நிற்கிற இரண்டு மலைகளை அழித்து, பல்லாயிரம் விலங்கினங்களையும், பறவையினங்களையும் அழித்து வார்க்கப்படும் இரும்பால் எதைக் கட்டியெழுப்பப் போகிறார்கள்?

- வெ.நீலகண்டன்
படங்கள்: திவாகர்