கவிதைக்காரர்கள் வீதி




எந்திரக் கடவுள்


* வளைத்து நெளித்து எழுதிய
பிள்ளையின் விரல் பிடித்து
பயிற்றுவித்த ஞாபகம்
மல்லிகைக் கொடியை நேர்கோட்டில்
நிமிர்த்திவிடப் பார்த்தது
குழந்தை
* ஓடியாடும் கடவுள்களை
தலை தொட்டு தரிசித்தது 
தெரு உலா வந்த யானை
* மெட்ரோ ரயில் ஓட்டுனரும்
மோனோ ரயில் ஓட்டுனரும்
முதன்முதலாய்ப் பயிற்சி பெற்றது
குட்டீஸ் ரயிலில்
* எழுதிப் பழகிய ‘கி’ஐ
எங்கோ பார்த்திருந்தானாம்
பூங்கா போய்ச் சேரும்வரை
புரியவில்லை எனக்கு
வழுக்கு மரம் என்பது
* கடவுள் கண்டுபிடித்த
எந்திரக் கடவுள்
குழந்தை 
* ஒரு வாய் பால்சாதம்
வாங்கிக்கோ என்றாள்
செல்லக்கண்ணன்
திருவாய் திறப்பதற்குள்
கிண்ணத்தில் ஒரு கவளம்
பாசத்தைக் குழைத்து வைத்தாள்
* செல்லக் குட்டியை
‘உப்புக்கட்டி’ தூக்கி ஓடியாட
உடம்பில் தைரியம் தரக்கேட்டு
உப்பாய்க் கரைகிறார் தினமும்
சிப்பாய் தாத்தா

கொ.மா.கோ.இளங்கோ