பொலிட்டிகல் பீட்



வழக்கு காரணமாக தேர்தலில் நிற்க முடியாத லாலு, முதல்முறையாக தனது மகள் மிசா பாரதியை இந்தத் தேர்தலில் களமிறக்கி இருக்கிறார். லாலுவின் மனைவி ராப்ரி தேவியும் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து அவரது சகோதரர் சாது யாதவ் சுயேச்சையாக போட்டியிடுவதுதான் எதிர்பாராத ட்விஸ்ட்! ‘‘எங்களுக்கு எதிரிகூட வெளியிலிருந்து வரத் தேவையில்லை’’ என ராப்ரி தேவி விரக்தியாக சொல்லியிருப்பதுதான் ஹைலைட்!

‘ஓ தேரி’ இந்திப் படத்தின் ரிலீஸை காங்கிரஸ்காரர்கள் பயத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். காமன்வெல்த் விளையாட்டு ஊழல் பற்றிய இந்தப் படம், தேர்தல் நேரத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கி விடுமோ என்ற கவலைதான் காரணம். ஆம் ஆத்மி கட்சியும் இந்தப் படத்தை வைத்து காங்கிரஸின் காலை வாரக் காத்திருந்தது. ஆனால் படம் ஃபிளாப் ஆனதில் காங்கிரஸுக்கு பெரும் நிம்மதி!

குஜராத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகளை எழுதச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் வாழ்த்துச் செய்தி வந்தது. பேசியது, மாநில முதல்வர் நரேந்திர மோடி. எல்லோருக்கும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்ன மோடி, ‘‘நான்கூட ஒரு பெரிய தேர்வை சந்திக்கிறேன். அதில் ஜெயிப்பேன் என நம்பிக்கை இருக்கிறது’’ என நாடாளுமன்றத் தேர்தல் பற்றி ஒரு பஞ்ச் வைத்திருந்தார்.

‘‘அந்தக் கட்சியில் சீட் தர்றாங்க...’’, ‘‘இவங்க கட்சியில கூப்பிட்டாங்க’’ என பில்டப் கொடுத்துக் கொண்டிருந்த ராக்கி சாவந்த், ‘ராஷ்ட்ரிய ஆம் கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கிறார். தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என தேர்தல் பிரமாணத்தில் ஒப்புக் கொண்டிருக்கும் ராக்கி, தேர்தல் சின்னமாகக் கேட்டிருப்பது பச்சை மிளகாயை! இதற்காகவே பச்சை டிரஸ் அணிந்து பிரசாரத்துக்குப் போகிறார்.  

உத்தரப் பிரதேச அரசியலில் ஜாதியை யாராலும் தவிர்க்கவே முடியாது போல... சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி மற்றும் அருகிலுள்ள சுல்தான்பூர், புல்பூர் தொகுதிகளில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யப் போனபோது அவரை ‘பண்டிட் ராகுல் காந்தி’ என்றே உள்ளூர்த் தலைவர்கள் அறிமுகம் செய்தார்கள். போஸ்டர்களும் அப்படியே விளித்தன. இந்தத் தொகுதிகளில் 20 சதவீதம் வரை இருக்கும்
பிராமண ஓட்டுக்
களைக் கவரவே இந்த ஏற்பாடு!

இந்தத் தேர்தல் சீசனில் அதிக கட்சி தாவல்கள் நிகழ்வது ஆந்திர மாநிலத்தில்தான். கட்சி தாவிய பிரபலங்களின் எண்ணிக்கை செஞ்சுரியைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு கட்சியிலும் இப்படி ஆட்களை இழுப்பதற்கு என்றே தனியாக ரகசிய டீம் போட்டிருக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சியில் சி.எம்.ரமேஷ், சுஜானா சௌத்ரி ஆகிய இருவரும் இதைச் செய்கிறார்கள்; தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் இதே வேலையாக இருக்கிறார். ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் ஒய்.வி.சுப்பா ரெட்டி இந்த வேலையைச் செய்கிறார். இந்த எல்லா கட்சிகளும் அதிகமாக ஆள் பிடிப்பது காங்கிரஸிலிருந்துதான்! ‘எப்படியும் காங்கிரஸ் சார்பாக நின்று ஜெயிக்க முடியாது’ எனத் தெரிந்ததால், பலரும் அங்கிருந்து ஓடு
கிறார்கள்.

பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒருமுறைகூட நாகாலாந்து மாநிலத்துக்குச் செல்லவில்லை மன்மோகன் சிங். இதையே காரணமாக வைத்து, ‘காங்கிரஸ் அரசு நாகாலாந்தை புறக்கணிக்கிறது’ என அங்கே பிரசாரம் சூடுபிடித்
திருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் புண்ணிய த்தால் துடைப்பத்தின் விலை தாறுமாறாக எகிறி விட்டது. 35 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பதை வாங்கி பிரசாரத்துக்கு பயன்படுத்துவது செலவு பிடிக்கும் வேலை என்பதால், லூதியானா தொகுதியில் போட்டியிடும் பூல்கா, வீட்டிலேயே துடைப்பம் செய்கிறார். ஐந்து ரூபாயில் ஒரு துடைப்பம் ரெடி! ‘உங்கள் சின்னம்’ என அதை ஏந்தியபடி வலம் வருகிறார்கள்.

சமீபகாலம் வரை காங்கிரஸ் கட்சியின் செல்லப்பிள்ளையாக இருந்தார் பஞ்சாபி பாடகர் தலேர் மெகந்தி. கடந்த டிசம்பரில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போதுகூட காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்தார். கட்சியின் பிரசாரப் பாடலைக்கூட அவர்தான் பாடினார். ஆனால் இப்போது டெல்லியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முகமது ஷகீல் ஷஃபியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். சினிமா விநியோகஸ்தரான ஷஃபி, பஞ்சாபிகளின் ஓட்டை வாங்குவதற்காக தலேர் மெகந்தியை வளைத்து விட்டார்.

வாய்ஸ்:

‘‘நான் ஊழல் செய்யவில்லை; பாலியல் வன்முறை நிகழ்த்தவில்லை; ஆபாசப் படம் பார்க்கவில்லை. அதனால் என்னை நீக்கிவிட்டார்களோ என்னவோ?’’
- பாரதிய ஜனதாவில் சேர்த்து ஒரே நாளில் நீக்கப்பட்ட ஸ்ரீராம் சேனா நிறுவனர் பிரமோத் முத்தாலிக்
‘‘அரசியலில் இருப்பது என்பது பாலியல் வன்முறைக்கு ஆளாவது போல. ஒன்று, கத்திக் கூப்பாடு போடலாம்; அல்லது, மகிழ்ந்து அனுபவிக்கலாம்!’’
- திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பெங்காலி நடிகர் தேவ்
எண்கள்:
கடந்த மூன்று தேர்தல்களாக அரசியல் கட்சிகள் எண்ணிக்கை தாறுமாறாக எகிறியிருக்கிறது. இதோ அந்த டேட்டா!
2004
தேசிய கட்சிகள்:     6
மாநிலக் கட்சிகள்:     56
அங்கீகாரம் பெறாத கட்சிகள்: 702
2009
தேசிய கட்சிகள்:     7
மாநிலக் கட்சிகள்:     39
அங்கீகாரம் பெறாத கட்சிகள்: 1014
2014
தேசிய கட்சிகள்:     6
மாநிலக் கட்சிகள்:     47
அங்கீகாரம் பெறாத கட்சிகள்: 1563