அட்டகாச காமெடி...



ஆச்சரியப்படுத்திய  அருள்நிதி!

‘‘எவ்வளவு படம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ‘ஒரு
கன்னியும் மூணு களவாணிகளும்’ டைட்டில் மாதிரியே எங்க படம் தனி வித்தியாசம். எங்கேயாவது ஹோட்டலில் போய் சாப்பிட்டு வந்தாலும் வீட்டில் சாப்பிட்டால்தான் நல்லா பசியாறும்.

நம்ம படம் வீட்டு சாப்பாடு மாதிரி. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. திவ்யமா, ருசிக்க ருசியா இருக்கும்!’’ - அழகாகப் பேசுகிறார் டைரக்டர் சிம்புதேவன். அவரின் அடுத்த பாய்ச்சல் இது.


‘‘எல்லோரும் எதிர்பார்க்கிற படம் இது... எப்படி இருக்கும்?’’

‘‘ ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ ரொமான்டிக் காமெடி. மக்களை சிரிக்க வைக்கிறது பெரும் காரியம். அதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் அருள்நிதி. எதேச்சையா ஒரு சந்திப்பில்தான் அருள்கிட்ட இந்தப் படத்தோட ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சது. கதையை மு.க.தமிழரசு சார்கிட்ட சொன்னப்போ, அவருக்கும் டபுள் ஓகே. நமக்கு மிக நெருக்கமான ஒரு விஷயத்தை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுத் தரமாட்டோம். அப்படி ஒரு நெருக்கடியான மனநிலையில் இருக்கிற நாலு நண்பர்களின் கதை.

ஒரு சூழலில் நண்பனின் காதலி யை கடத்திக்கிட்டுப் போறாங்க. அதுக்குப் பிறகு சுவாரஸ்யங்களின் உச்சிக்குப் போகக் கூடிய நிறைய இடங்கள் இருக்கு. இந்த சென்னைப் பட்டணம், இந்த நண்பர்களை என்ன மாதிரியெல்லாம் பதற வச்சு, தூக்கிப் போட்டு பந்தாட வைக்குதுன்னு முழு நீள நகைச்சுவையில் சொல்லியிருக்கோம். ஒவ்வொரு காட்சியையும் இழைச்சு இழைச்சு மெருகேத்தியிருக்கோம். சந்தேகமில்லாம - தயக்கமில்லாம குடும்பத்தோட வரலாம். என்னோட பலமே காமெடிதான். அருள்நிதி மாதிரி நல்ல நடிகர் அழகா கொண்டு போய் சேர்க்கும்போது சந்தோஷமாயிருக்கு!’’

‘‘படத்தில் டைம் கான்செப்ட் நல்லா வந்திருக்குன்னு சொல்றாங்க...’’

‘‘நேரம் மிகப் பெரிய கான்செப்ட். சித்தர்கள் முதல் விஞ்ஞானிகள் வரைக்கும் காலம் பற்றி பலவிதமா சொல்லிக்கிட்டு இருக்காங்க. காலம் நம்மை நிழல் மாதிரி துரத்திக்கிட்டே வருது. நேரம் கொடுக்கிற அழுத்தம், நமக்கு அவசரத்தின்போதுதான் நல்லா பிடிபடும். அதை முதல் தடவையா இதில் உணர்த்தியிருக்கோம். யாரும் இதுக்கு முன்னாடி சினிமாவில் இதை சோதனை பண்ணிப் பார்த்திருப்பாங்களான்னு தெரியலை. இதில் அப்படி ஒரு விஷயம் பதிவாகியிருக்கு!’’

‘‘அருள்நிதி, ‘மௌனகுரு’விற்கு பின்னாடி மிகத் தேர்ந்த நடிகரா அடையாளம் காணப்பட்டார். அவரை எப்படி பயன்படுத்திக்கிட்டீங்க?’’
‘‘அருள்நிதி எனக்கு சந்தோஷமளித்த நடிகர். கோபமும் ரௌத்திரமும் வந்து சீறுகிற முகத்தில், அப்படியே புரட்டிப் போட்டு சாந்தத்தையும் சிரிப்பையும் அவரால் நிமிடத்தில் கொண்டு வர முடியும். இந்த விஷயத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய நடிகர். சொந்தப் படமென்று எந்த சலுகைகளும் எடுத்துக்காமல், துறுதுறுன்னு எப்ப கூப்பிட்டாலும் உணர்வுபூர்வமா நடிச்சுக் கொடுத்தார். அப்படிப்பட்ட அருளை இதில் முற்றிலும் வேற விதமா கொண்டு வந்திருக்கோம். நடிகன்னா எந்த எல்லைக்கும் போய் வர ரெடியா இருக்கணும். அப்படி இருந்தார் அருள்...’’
‘‘பிந்து மாதவி, அஸிதா

ஷெட்டின்னு இரண்டு ஹீரோயின்கள்... கொண்டாட்டம்தான்..!’’

‘‘பிந்துமாதவியோட பெஸ்ட் இது. ‘டாம் பாய்’னு சொல்வாங்களே... அப்படி ஆம்பளைக்குரிய மிடுக்கோட அசத்தியிருக்காங்க. என் மனசில் இருந்த கதைக்கு அவ்வளவு கச்சிதமான பொருத்தம். அஸிதா ஷெட்டிக்கும் நான் வெரிகுட் சொல்வேன். ஒரு விஷயம் தெரியுமா? இந்த நிமிஷம் நமக்கு இந்த உலகமே ரம்மியமா - சந்தோஷமா இருக்கும். ஆனால், அது எதுவும் நிலையானது இல்லை. இலை உதிர்வது மாதிரி இங்கே எல்லாமே நடக்கும். எதற்கும் தயாராக இருக்கிற மன அவகாசத்தைத் தேடிக்கிற பக்குவம் நமக்கு வரணும்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஒரு சிக்கலில் அகப்பட்ட நண்பர்களில் நாமும் ஒருத்தரா இருக்குற ஃபீலிங் வரும். படத்தில் குத்து டான்ஸ், ரத்தம் உங்க மேல தெறிக்கிற ஃபைட்... எதுவும் இல்லை. எதையும் அவசியமில்லாமல் திணிக்கிறது என் வேலை கிடையாது. இதை அழகா புரிஞ்சிக்கிட்ட தமிழரசு சாருக்கு நன்றி சொல்வது ரொம்ப அவசியம். இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் நடராஜன் சங்கரன்.

பாடல்களை வைரமுத்து எழுதிக் கொடுத்தார். உயிரையும் காதல் உணர்வையும் உருக்குகிற விதத்தில் வந்திருக்கு பாடல்கள். நறுக்னு எடிட் பண்ணித் தந்தது ராஜா முகமது. என் படங்களில் பெண்களை முறையா பயன்படுத்துவேன். எப்பவும் என் படங்களுக்கான ஆடியன்ஸ் குழந்தைகளோடு குடும்பமா பார்க்க வர்றவங்க தான். வித்தியாசமான கதை, நிறைவான காமெடி, அருள்நிதி யின் அமரிக்கையான நடிப்பு, யதார்த்தம்... இதில் இந்தப் படம் நிக்கும். அதுதான் எங்க எல்லோருடைய விருப்பமும்!’’
- நா.கதிர்வேலன்