இனியா ஃபீலிங்



என்னைப் பற்றி தப்புத் தப்பா தகவல் பரப்பிட்டாங்க!

இனியா... தேன் தடவிய பெயர். நடிப்பில் நல்ல பெயர் எடுத்துவிட்டாலும், திறமைக்கு தீனி போடும் கேரக்டர்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசைகள் அவர் மனசில். சின்ன இடைவெளிக்குப் பிறகு, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் தன் ஆசையைப் பூர்த்தி செய்துள்ள ஆவலோடு காத்திருக்கிறார். ‘‘அப்படியென்ன கேரக்டர்?’’ - இனிக்க இனிக்கப் பேசினார் இனியா.

‘‘கதையில் திருப்பம் ஏற்படுத்தக்கூடிய கவிதாங்கற கேரக்டர் பண்ணியிருக்கேன். என்னை கிராமத்துப் பொண்ணா, காலேஜ் ஸ்டூடன்ட்டா பார்த்தவங்களுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’, புதிய இனியாவை அடையாளம் காட்டும். செகண்ட் ஆஃப்லதான் வர்றேன். ஆனா, சஸ்பென்ஸ் கதவைத் திறந்து வைக்கிற ஓபனிங். அதுக்கு ஆடியன்ஸ்கிட்ட அப்ளாஸ் நிச்சயம். இது பத்தி ரொம்பப் பேசக்கூடாது. படம் பார்த்துட்டு நீங்க பாராட்டப் போறது மட்டும் உறுதி!’’

‘‘விஷாலுக்கு இன்னொரு ஜோடியா நீங்க?’’
‘‘இல்லை. லட்சுமி மேனன்தான் ஜோடி. நான், விஷால், சுந்தர்ராம், ஜெகன் எல்லாம் ஒரு கேங்கா இருப்போம். விஷாலோட டூயட் பாடும் வேலையெல்லாம் லட்சுமி மேனனுக்கு மட்டும்தான். கானா பாலா பாடிய ‘லவ்லி லேடி...’ பாட்டுக்கு நான் ஆடியிருக்கேன். லட்சுமிக்கும் எனக்கும் காம்பினேஷன் சீன்கூட இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கல. போன வாரம்தான் பிரஸ்மீட்ல பார்த்துக்கிட்டோம். அவரோட முகபாவனைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வெரிகுட் ஆர்ட்டிஸ்ட். ரெண்டு பேருமே மலையாளி என்பதால், சீக்கிரமே ஃபிரண்ட்ஸ் ஆகிடுவோம்னு நினைக்கிறேன்.’’

‘‘விஷால்-லட்சுமி மேனன் முத்தக் காட்சி பரபரப்பானதும், நமக்கு அமைஞ்சிருக்கலாமேன்னு ஃபீல் பண்ணுனீங்கதானே..?’’
‘‘நான் ஏன் ஃபீல் பண்ணப் போறேன்? கதைப்படி நான் விஷால் ஃபிரண்டா வரும்போது எனக்கும் அவருக்கும் முத்தக்காட்சி எப்படி இருக்க முடியும்? இன்னொரு படத்தில் அப்படி நடிப்பீங்களான்னு கேளுங்க... ‘கதைக்கு அது அவசியமா இருந்தால், எனக்கும் பிடித்திருந்தால் நடிப்பேன்’னு பதில் சொல்றேன்!’’

‘‘ ‘வாகை சூட வா’வில் உங்களை நிரூபித்தும் இன்னும் பெரிய இடத்துக்கு வர முடியலையே..?’’
‘‘எனக்கும் அந்த வருத்தம் இருக்கத்தான் செய்யுது. ஆனா, ‘இந்தப் பொண்ணு நல்லா நடிக்கும்பா’ன்னு சினிமா வட்டாரத்தில் பெயர் இருக்கு. இடையில் மலையாளத்தில் கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதனால் இங்க கேப் விழுந்தது போல ஒரு ஃபீல் வந்துடுச்சு. தவிர, என்னோட மேனேஜர்னு சொல்லிக்கிட்டு சில பேர் சினிமா கம்பெனிகள்ல பேசி என்னைப் பத்தி தவறான செய்திகளையெல்லாம் பரப்பிட்டாங்க. இப்ப சொல்றேன்... எனக்கு மேனேஜர்னு யாரும் இல்லை. நானும் அம்மாவும்தான் படத்தை முடிவு பண்றோம். எதுவா இருந்தாலும் நேரடியா நான்தான் பேசறேன்!’’

‘‘சில படங்களில் சின்ன ரோல்ல வந்தீங்க... இரண்டு ஹீரோயின் கதையில் நடிக்கிறீங்க... ஏன்?’’ ‘‘இதுல ‘புலி வால்’, நட்புக்காக ஒப்புக்கிட்ட படம். மலையாளத்தில் அந்தப் படம் எனக்குப் பிடிச்சிருந்ததால் தமிழில் நடிக்க சம்மதிச்சேன். ‘சென்னையில் ஒரு நாள்’ சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை என்பதால் நடிச்சேன். என்னை விட சீனியர்கள் நடித்த அந்தப் படத்தில் நானும் பங்கெடுத்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம்தான். ஒரு பாட்டுக்கு ஆடுவதாக இருந்தாலும் என் மனசுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். எனக்கும் நல்ல நேரம் அமையும்!’’

‘‘ப்ரியாமணியோட ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறீங்களாமே...’’
‘‘இல்லை... அந்த நியூஸ் தப்பு. ‘யெஸ் ஐ ஆம்’ படத்தில், ப்ரியாமணியோடு இன்னொரு ஹீரோயினா நடிக்க கேட்டாங்க. ஆனா, நான் மறுத்துட்டேன். அப்புறம் அது பத்தி நான் விசாரிக்கக் கூட இல்லை. ஆனா, அந்தப் படத்தில் நடிக்கிறதா தவறான தகவல் இருக்கு. விக்கிபீடியாவிலும் என் படங்களோட லிஸ்ட்டில் அது இருக்கு. என் பிறந்த தேதி, குடும்ப விபரம், படங்களோட லிஸ்ட்னு எல்லாத்திலும் தவறான தகவல்கள் விக்கியில் பதிவாகியிருக்கு. அதையெல்லாம் சரி பண்ணணும். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துக்குப் பிறகு என்னோட சினிமா பயணம் வேகமெடுக்கும்னு நம்புறேன்!’’

- அமலன்