நடைவெளிப்பயணம்



புதிய பகுதி

குஷ்வந்த் சிங்கும் நானும்


சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு என் கதைகளை வெளியிட முன் வரும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்காகத் தேடிக் கொண்டிருக்கையில் ‘யோஜனா’ என்றொரு புதுப் பத்திரிகை கண்ணில் பட்டது. அந்த நாளில் ஆங்கிலப் பத்திரிகைகளைப் பார்க்க மவுன்ட் ரோடு ஹிக்கின்பாதம்ஸுக்குப் போகவேண்டும்.

 அல்லது சென்டிரல் ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸுக்குப் போக வேண்டும். என்ன காரணமோ, மவுன்ட் ரோடு கடை அதிக வெளிச்சமில்லாது இருக்கும். எப்போதும் ஒரு கடைச் சிப்பந்தி உங்கள் நாணயத்தில் நம்பிக்கை இல்லாததை வெளிக்காட்டிக் கொண்டிருப்பார். கடையில் நிறையப் புத்தகங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்க வேண்டும்.

‘யோஜனா’வை வாங்கிப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இதழ் வெளியாகும். அதில்தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத், தனது சிறை அனுபவதைப் பற்றி எழுதிய அபூர்வமான ஒரு கட்டுரையைப் படித்தேன். கடையில் ‘யோஜனா’ ஒவ்வொரு சமயம் விற்றுப் போயிருக்கும். சென்னைக்கு ஐந்து அல்லது பத்துப் பிரதிகள் வரும் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு கதை அனுப்பினேன். பிரசுரமாயிற்று. அப்புறம் இரண்டாவது. அப்போது ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘இவ்வளவு நீண்ட கதைகள் அனுப்பினால் நாங்கள் அவற்றை வருத்தத்துடன் திருப்பி அனுப்ப வேண்டி வரும்.’அடுத்த கதை சற்றுச் சிறியது தான். அது ‘யோஜனா’விடம் ஒரு வருடம் இருந்தது. பிறகு திரும்பி வந்து விட்டது. ஆசிரியர் மாறி விட்டார்! என் கதை பிரசுரத்துக்காகத் தயார் செய்யப்பட்டிருந்தது. எவ்வளவு திருத்தங்கள்! என்னுடைய முந்தைய கதைகளும் இவ்வளவு கூர்மையாக ‘எடிட்’ செய்யப்பட்டிருக்க வேண்டும். திரும்ப வந்த கதை எனக்குப் பெரிய படிப்பினையாக இருந்தது. இவ்வளவு பாடுபட்டு என் கதைகளை வெளியிட்ட ஆசிரியர் பெயர், குஷ்வந்த் சிங்.

‘யோஜனா’ அரசுப் பத்திரிகை. குஷ்வந்த் சிங் போனவுடன் அதன் தன்மையே மாறி விட்டது. அரசுத் திட்டங்களைப் பற்றி அரசு அதிகாரிகளே கட்டுரைகள் எழுதுவார்கள். தமிழ்ப் பதிப்பிற்கு சு.சமுத்திரம் கூட சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். குஷ்வந்த் சிங் அரசு வேலையை விட்டுவிட்டு ‘இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு ஆசிரியரானார். நான் அதற்குள் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். அப்போது ‘வீக்லி’ பத்திரிகை ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்தது. மொழிபெயர்ப்பாகவும் இருக்கலாம். ஆனால் நீளம் 1500 சொற்கள். ‘யோஜனா’விலிருந்து திரும்பி வந்த கதை கைவசம் இருந்தது. ஆனால் 2500 வார்த்தைகள்! அதை சுமார் 2000 சொற்களுக்குச் சுருக்கினேன். மீண்டும் தட்டச்சு செய்து அனுப்பினேன். வீண் போகவில்லை.

‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பு ஓர் ஆண்டு விழாவுக்கு குஷ்வந்த் சிங்கை முக்கிய விருந்தாளியாக அழைத்திருந்தது. அப்போது அவர் ‘வீக்லி’யில் இருந்தார். கூட்டத்தில் அவர், ‘‘ ‘வீக்லி’யில் ஒரு கதை வெளியாவது நோபல் பரிசுக்கு ஒப்பாகும்’’ என்றார். நான் அவர் ஆசிரியர் ஆவதற்கு முன்பே இரண்டு, மூன்று முறை நோபல் பரிசு பெற்றிருந்தேன். அவர் பல பத்திரிகைகளுக்குப் பத்தி எழுதிக்கொண்டிருந்தார். பணம் வந்திருக்கலாம். ஆனால் அவருடைய அகட விகடம் எல்லாரும் ரசிக்கத்தக்கதாக இல்லை.

இந்தியப் பிரிவினை பற்றிய அவரின் ‘பாகிஸ்தானுக்குக் கடைசி ரயில் வண்டி’ என்ற நாவலை விசேஷமாகச் சொன்னார்கள். ஆனால் அதிலும் ஆசிரியருடைய கவனம் சற்றுச் சிதறுண்டுதான் இருந்ததுநான் அவரைக் கடைசியாகப் பார்த்தது 2002ல். வி.எஸ்.நைப்பாலைக் கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தானில் ஓர் இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதே நைப்பால் பற்றி, ‘மதவாதி’, ‘இந்துத்துவக்காரர்’ என்றெல்லாம் வசவுகள் வந்து விட்டன.

ஆனால் இஸ்லாமிய மனத்தின் பல பரிமாணங்களை அவர் எழுதியது போல நானறிந்து வேறு யாரும் எழுதவில்லை. இந்தியர்கள் அனைவரும் ‘அமாங்க் தி பிலீவர்ஸ்’, ‘பியாண்ட் பிலீஃப்’ ஆகிய அவருடைய நூல்களைப் பற்றி அறிந்து கொள்வது மனத் தெளிவுக்கு உதவும். இன்னொரு தகவல்... அவருடைய மனைவி ஒரு பாகிஸ்தானி. எல்லாரிடமும் உண்மையான அக்கறை கொள்ளும் சுபாவம்.

இந்தச் சந்திப்புக்குக் குஷ்வந்த் சிங்கை டோலியில் தூக்கி வந்தார்கள். நைப்பால் அவரை அதிகம் கண்டு கொள்ளவில்லை. நான் ஒன்று கண்டு கொள்ள முடிந்தது. குஷ்வந்த் சிங்குக்கு ‘வீக்லி’யை விட்டு விலக்கிய ரணம் ஆறவில்லை. குஷ்வந்த் சிங் தன்னைப் பற்றி ஒரு பொதுப்பாவனை தோன்றும்படி தொடர்ந்து எழுதினாலும் அது உண்மையல்ல. அவருக்கு வீடு, மனைவி, குழந்தைகள்தான் முக்கியம். அதாவது, அவர் ஒரு சரியான சம்பிரதாயவாதி. கடைசி வரை ஒரு தோற்றத்தை உண்மை போலத் தோன்றும்படி எழுதிவிட்டு 99வது வயதில் கடைசி மூச்சை விட்டார். இந்தியப் பத்திரிகைகளை மலினப் போக்குக்கு அழைத்துச் சென்றார் என்று அந்த நாளில் குறை கூறுவார்கள். அதுவும் உண்மையல்ல. அவர் விற்பனையில் கவனம் செலுத்திய பத்திரிகையாசிரியர்.

நான் பங்கு பெற்ற ஓர் சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் மதிப்புரை எழுதியிருந்தார். அதில் பல பிழைகள் இருந்தன. அவரே ஒரு தொகுப்பை சாகித்ய அகாதமிக்காக வெளியிட்டார். அவருடைய ஒரு கதையும் இருந்தது. அந்த ஒரு கதையினால் ஒரு மொழிபெயர்ப்புப் பட்டறை இரண்டு பட்டது. கடைசியில் நூல் ம.நா.ராமசாமியிடம் ஒப்புவிக்கப்பட்டது. ராமசாமி, குஷ்வந்த் சிங் கதைக்குக் கொடுத்த தலைப்பு ‘புட்டக்கிள்ளன்’. பிரச்னையைச் சாமர்த்தியமாகச் சமாளித்து விட்டார்.

எனக்குச் சற்று வருத்தம்... ‘யோஜனா’ பத்திரிகையை மிக உயர்ந்த தரத்தில் வெளியிட்டவருக்கு ‘வீக்லி’க்கு வந்தவுடன் அந்தத் தரம் போய்விட்டது. இன்று ‘வீக்லி’யே போய்விட்டது. குஷ்வந்த் சிங் விலகிவிட்டாலும் ‘வீக்லி’ என்னை விடவில்லை. என் கதைகளை நினைவில் வைத்திருப்பவர்கள் இல்லையென்றே கூறிவிடலாம். ஆனால் என் கட்டுரைகளைப் பலர் குறிப்பிட்டு என்னைச் சங்கடப்படுத்துகிறார்கள்.

குஷ்வந்த் சிங் சில வினோதமான பொறுப்புகளை மேற்கொண்டார். இந்திரா காந்தியின் ஆட்சியில் பிரகடனப்பட்ட நெருக்கடி நிலையை அவர் தீவிரமாக ஆதரித்தார். அதற்கு அவருக்குக் கிடைத்த வெகுமானம், சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா வெளியிட்ட ‘சூர்யா’ பத்திரிகை அவர் பொறுப்பில் விடப்பட்டது. இன்று ‘சூர்யா’ இல்லை. சஞ்சய் காந்தியும் இல்லை. மேனகா காந்தியும் அவர் மகனும் பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய அங்கத்தினர்கள்! அமிர்தசரஸ் பொற்கோவில் தாக்கப்பட்டவுடன் குஷ்வந்த் சிங் தன் சீக்கிய வேர்களைக் கண்டுகொண்டார். அவர் நூல்களில் நிலைத்து நிற்கக்கூடியது, அவர் எழுதிய சீக்கியர் வரலாறு. குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை எல்லாப் பத்திரிகைக்காரர்களுக்கும் ஏதாவது ஒரு படிப்பினை கொண்டிருக்கும்.

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்