e கடை



செகண்ட் சேல்ஸில் எல்லாமே செம சீப்!

பக்கத்து வீட்டில் பார்க்கும் காஸ்ட்லி ஃபிரிட்ஜ், அதிநவீன வாஷிங் மெஷின், அட்ட காச டி.வி எல்லாமே அதில் முக்கால்வாசி விலைக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி விற்கும் இணையதளத்தை நடத்துகிறார் ஹிதேந்தர். 88 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் எல்.ஜி. ரெப்ரிஜிரேட்டர், 58 ஆயிரத்து 525 ரூபாய்க்குக் கிடைத்தால்..? ரூ.31 ஆயிரத்து 990 மதிப்புள்ள ஃபுல்லி ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் ரூ.21 ஆயிரத்து 745 ரூபாய்க்குக் கிடைத்தால்..? ரூ.5 ஆயிரத்து 990 மதிப்புள்ள பிலிப்ஸ் ஐபாட் டாக்கிங் ஸ்டேஷன் ரூ.2 ஆயிரத்து 115 ரூபாய்க்குக் கிடைத்தால்..? எவ்வளவு நன்றாக இருக்கும்?

கிடைக்கிறது,  www.greendust.com இணையதளத்தில். எல்.ஜி, வேர்ல்பூல், சாம்ஸங், பிலிப்ஸ், ஹையர், எலக்ட்ரோலெக்ஸ், ஏஸர், லெனோவா, பஜாஜ், கெல்வினேட்டர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்த இணையதளத்தில் 20 முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்கலாம். இவை, ‘ஃபேக்டரி செகண்ட் சேல்ஸ்!’
அதென்ன, ஃபேக்டரி செகண்ட் சேல்ஸ்?

‘‘ஒரு நிறுவனம் தயாரிக்கிற பொருள் எந்த சேதாரமும் இல்லாம நுகர்வோருக்குப் போய்ச் சேரணும். இதுதான் வியாபாரம். பொருளைத் தயாரிக்கிற நிறுவனம் எங்கோ ஒரு மூலையில இருக்கு. விற்பனை செய்யிற இடம் நம்ம ஊர்ல இருக்கு. அங்கிருந்து தயார் செய்யப்பட்டு நம்ம ஊருக்கு வர்ற வழியில பொருள் மேல லேசா கீறல் விழலாம். பொருளோட நிறம் சேதமாகலாம். வாகனத்துல உரசி மேல்பகுதி லேசா நெளிஞ்சு கூட போகலாம். இந்த மாதிரியான பொருட்களை விற்பனைக்கு அனுமதிக்கறதில்லை.

அதேபோல, தயாராகும்போது சின்னச்சின்ன பழுதுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அந்த மாதிரி பொருட்களை தூக்கித் தூர போட்டுடுவாங்க. அடுத்து, விற்பனை நிறுவனங்கள் டிஸ்பிளேயில வைக்கிற பொருட்கள் நிறம் மங்கிப் போயிடும். இந்தமாதிரி ஒதுக்கப்படுற பொருட்களை எல்லாம் வாங்கி, திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமா அதை சரி செஞ்சு, விக்கிறதுதான் ஃபேக்டரி செகண்ட் சேல்ஸ்...’’ - விளக்கம் சொல்கிறார்   www.greendust.com நிறுவனத்தின் துணை மேலாளர் வெங்கட்ராமன்.

இதன் நிறுவனர் ஹிதேந்தர் சதுர்வேதி, ரூர்க்கி ஐ.ஐ.டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 17 வருடங்கள் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். இ-வேஸ்ட் தொழில்நுட்பத்தில் நிபுணர். சேவையாக தொடங்கிய செயலே இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஃபேக்டரி செகண்ட் சேல்ஸ் நிறுவனமாக greendust.com நிறுவனத்தை உயர்த்தியிருக்கிறது.
‘‘எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தோட வளர்ச்சிதான் இன்னைக்கு ஒரு நாட்டோட வளர்ச்சியா பார்க்கப்படுது.

ஆனா, எலக்ட்ரானிக் கழிவுகளை என்ன செய்யப் போறோம்ங்கிற தெளிவு யார்கிட்டயும் இல்லை. ஒரு எலெக்ட்ரானிக் வேஸ்ட்ல விஷத்தன்மையுள்ள ஆயிரம் பொருட்கள் இருக்கிறதா சொல்றாங்க. ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குற ஒரு மொபைல் செயல்படாமப் போயிட்டா சாதாரணமா தூக்கி வீசிடுறோம். அப்படி வீசப்படுற மொபைல் என்னாகுது... எப்படி அழியுதுன்னு யாருக்கும் தெரியாது. மைக்ரோசாஃப்ட்ல நல்ல சம்பளத்துல வேலை செஞ்சவன் நான். இருந்தாலும் இ-வேஸ்ட் பத்தின கவலை எனக்குள்ள உறுத்தலா இருந்துச்சு.

இந்தியாவில 2007ல இருந்ததை விட 2020ல 500 சதவீதம் இ-வேஸ்ட் அதிகமாகும்னு ஐ.நாவோட ஆய்வறிக்கை சொல்லுது. உலக அளவில ஆண்டுக்கு 4 கோடி டன் இ-வேஸ்ட் சேருது. இதை எப்படி கையாள்றது..? ஒரு தொழிலாவே இதை முன்னெடுத்துக்கிட்டுப் போகலாம்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு இந்தியா வந்துட்டேன். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள்ல பேசி, ஃபேக்டரி வேஸ்ட் பொருட்களைத் தர முடியுமான்னு கேட்டேன். பல நிறுவனங்கள் ஒப்பந்தத்துக்கு வந்தாங்க.

இன்னும் சில வருடங்கள்ல இந்தியாவில யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இ-காமர்ஸ் வளரப் போகுது. அதனால தைரியமா ஆன்லைன் பிசினஸ்ல இறங்குனேன். சில வருடங்கள்லயே நான் எதிர்பார்க்காத அளவுக்கு பிசினஸ் டெவலப் ஆகியிருக்கு...’’ என பெருமிதப்படுகிறார் ஹிதேந்தர்.greendust.com இணையதளத்தைத் திறந்ததும் பொருட்கள் அணி வகுக்கின்றன. பொருட்களின் மேலே, அப்பொருளின் மார்க்கெட் விலை, தள்ளுபடி, கிரீன் டஸ்ட் விலை இடம் பெற்றுள்ளன.

பல பிராண்ட் மொபைல் போன், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், டி.வி, மியூசிக் பிளேயர், ஹோம் தியேட்டர், அயர்ன் பாக்ஸ், ஏ.சி, லேப்டாப், ஐ-பாட், கேமரா, கிச்சன் அப்ளையன்சஸ் என எதையும் வாங்கலாம். பொருளில் என்ன பழுது இருந்தது என்ற தகவலும் இடம் பெற்றிருக்கிறது. விரும்பும் பொருளை க்ளிக் செய்தால் 10 முதல் 12 நாட்களுக்குள் பொருள் வீட்டுக்கு வந்துவிடும். ஆன்லைனிலும் பணம் கட்டலாம். பொருள் வீட்டுக்கு வந்தபிறகும் பணம் செலுத்தலாம். டோர் டெலிவரி இலவசம். சென்னையில் செங்குன்றம் அருகேயுள்ள சோத்துப்பாக்கத்தில் இருக்கிறது greendust.com அலுவலகம்.

‘‘நிறுவனங்கள்ல இருந்து வாங்குற பொருட்களை தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமா 50க்கும் மேற்பட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் தயாரிப்புத்தன்மை பாதிக்கப்படாம பழுது பாக்குறோம். பொருளுக்கு 1 வருட உத்தரவாதமும் உண்டு’’ என்கிறார் வெங்கட்ராமன். ஹிதேந்தரின் மாறுபட்ட சிந்தனை ஆகப்பெரிய பசுமைச் சிக்கலுக்கான தீர்வை மட்டுமின்றி, எவரும் யோசிக்காத ஒரு புதிய இண்டஸ்ட்ரியையும் கட்டியெழுப்பி இருக்கிறது. 

‘‘சிறிய கோளாறுகளோடு ஒதுக்கப்படுற பொருட்களை வாங்கி, திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமா அதை சரி செஞ்சு, விக்கிறதுதான் ஃபேக்டரி செகண்ட் சேல்ஸ்!’’

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

வெ.நீலகண்டன்