ஸ்டாலினுடன் ஒரு நாள்



இது ஆட்சியல்ல... வெறும் காட்சி!

மதியம் 3 மணி. பரபரப்புக்கு பஞ்சமில்லாத திருப்பூரின் இயல்பு மேலும் மாறியிருக்கிறது. உள்ளடங்கியிருக்கும் பப்பீஸ் ஹோட்டலில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். அத்தனை கண்களும் அந்த அறைக்கதவில் நிலைத்திருக்கின்றன.

பளீரென திறக்கிறது கதவு. தொண்டர்களின் பிரவாகத்தில் அந்த இடமே உணர்ச்சிமயமாகிறது. புன்னகை முகத்தோடு, சாந்தமும் கனிவுமாக வெளிப்படுகிறார் ஸ்டாலின். இடைவிடாத பயணங்கள், பொறுப்புகள், முடிவுகள், பதில்கள், ஒருங்கிணைப்புகள், வியூகங்கள் அனைத்தையும் கடந்து துளியும் சோர்வற்ற உற்சாகம். ஆர்வமும் உணர்ச்சியும் உந்தித் தள்ள, அத்தனை பேரும் அவரை நோக்கி முன்னேற, தவித்துப் போகிறார்கள் பாதுகாவலர்கள். 

இந்தத் தேர்தலின் அத்தனை பொறுப்புகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு, நொடி நேரத்தையும் வீணாக்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் வாகனமேறியது மார்ச் 14ம் தேதி. 15 நாட்களுக்குள் 15 நாடாளுமன்றத் தொகுதிகள்; 89 சட்டமன்றத் தொகுதிகள்; சுமார் 4000 கி.மீ. சாலை வழிப்பயணம்; மக்கள் வெள்ளத்தில் மிதந்து 200க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம்; ஸ்டாலினின் உத்வேகம் தொண்டர்களையும் கூட்டணிக் கட்சியினரையும் வெகுவாக உசுப்பி விட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலை வெகு தீவிரமாகக் கையாள்கிறார் ஸ்டாலின். அவரின் செயலும், பேச்சுமே அதற்குச் சான்று. அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து விடுகிறார். முக்கால் மணி நேர நடைப்பயிற்சி. அரை மணி நேர யோகா. உடற்பயிற்சி நிறைந்து, குளித்து முடித்ததும் அன்றைக்கான பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அத்தனை செய்தித்தாள்களையும் வாசித்து விடுகிறார்.

காலை உணவுக்குப் பிறகு, மாவட்டச் செயலாளர், கட்சி முன்னணியினர் சந்திப்பு. முதல் நாள் பிரசாரத்தின் விளைவுகள் பற்றி விசாரிக்கிறார். பிற மாவட்டங்களின் பிரசாரங்கள், சூழல்கள் பற்றிப் பேசுகிறார். அன்றைய பிரசாரத் திட்டங்களைக் கேட்கிறார். பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளின் பிரச்னைகள், நிறைவேற்றியுள்ள திட்டங்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கிறார். வெற்றி வியூகங்கள் வகுத்துக் கொடுக்கிறார்.

சரியாக 3 மணிக்குத் தயாராகி விடுகிறார். நாளொன்றுக்கு குறைந்தது 12 இடங்களிலாவது பிரசாரம் நடக்கிறது. இறுதியில் ஒரு பொதுக்கூட்டம். திருப்பூரில் பிற கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க-வில் இணைந்ததிலிருந்து தொடங்கியது பிரசார அனல். ஸ்டாலின் அணிவித்த துண்டோடு பெருமிதம் பொங்க மேடையிலிருந்து இறங்கிய மலர்விழி, வளர்மதி சகோதரிகளை இடைமறித்தோம். ‘‘டெல்லி பக்கமெல்லாம் பைத்தியம், தீவிரவாதி, மோசடிக்காரர்னு மாத்தி மாத்தி திட்டிக்கிறாங்க. அந்தம்மா கூட தலைவர் கலைஞரை என்னெல்லாமோ சொல்லுது. ஆனா தளபதி, அம்மையார்ங்கிற வார்த்தையைத் தவிர வேறெதுவும் சொல்றதில்லை. அந்த கண்ணியம் இன்னைக்கு எந்த தலைவர்கிட்டயும் இல்லை. அதனாலதான் இந்தக் கட்சிக்கு வந்தோம்’’ என்றபடி துண்டை ஸ்டாலின் போலவே மடித்துப் போட்டுக் கொள்கிறார் மலர்விழி.

மேடையை விட்டு கீழிறங்கிய ஸ்டாலினிடம், ‘‘தளபதி, எங்க குழந்தைக்கு நீங்கதான் பேரு வைக்கணும்...’’ என்று இரண்டு பேர் குழந்தைகளை நீட்டுகிறார்கள். முகம் மலர அந்தக் குழந்தைகளை வாங்கிக் கொஞ்சிய ஸ்டாலின், ‘தமிழ்ச்செல்வி’, ‘கலைச்செல்வி’ என்று பெயர் சூட்டுகிறார். ‘‘குழந்தை பிறந்து ஏழு மாசமாச்சுங்க... தலைவர் அல்லது தளபதி தான் பேரு வைக்கணும்னு உறுதியா இருந்துட்டோம். இன்னைக்கு எங்க கனவு நிறைவேறிடுச்சு...’’ என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் இடுவாய் பாரதிராஜா.

பயணம் தொடங்குகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தின் முன்னிருக்கையில் ஸ்டாலின். பின்னிருக்கையில் துர்கா ஸ்டாலின். வேட்பாளர் டாக்டர் செந்தில்நாதன் உடன் ஏறிக்கொள்ள, அளவான வாகனங்கள் பின்தொடர்கின்றன. இருபுறமும் நின்று கையசைத்து வரவேற்கும் மக்களை கைகூப்பி வணங்கிய படியும், கையசைத்து மகிழ்ந்தபடியும் வரும் ஸ்டாலினை அனுப்பர்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்துகிறார்கள் மக்கள். மக்களுக்கு மிகவும் நெருக்கமான தொனியில் பேசுகிறார். இயல்பான நகைச்சுவை பேச்சை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. 

‘‘நான் ஹெலிகாப்டரில் வரவில்லை. உங்களது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள, உங்களில் ஒருவனாக சாலையில் ஊர்ந்து வந்திருக்கிறேன்’’ என்று அவர் சொல்லும்போது, விசிலடித்து கை தட்டுகிறார்கள். மின்வெட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒன்று திருப்பூர். சாயப்பட்டறை விவகாரம் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதித்திருக்கிறது. ஸ்டாலின் தன் பிரசாரத்தில் இந்த இரண்டு விவகாரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தந்தார். அதேநேரம், திமுக செய்த நலத்திட்டங்களைப் பட்டியலிடவும் தவறவில்லை.
 
லட்சுமி நகர் நால் ரோடு சந்திப்பில் தொண்டர்களின் உற்சாகத்தைக் கட்டுப்படுத்தத் திணறுகிறது தொண்டரணி. வரிசையாகத் தொடரும் வாகனங்களில் எதில் ஸ்டாலின் இருக்கிறார் என்பது தெரியாமல் எல்லா வாகனத்தையும் கும்பிடுகிறார்கள் தொண்டர்கள். ‘‘30 வருஷத்துக்கு முன்னாடி தலைவரைப் பாக்க இப்படித்தான் தொண்டர்கள் ஆலாப் பறப்பாங்க. தளபதியைப் பாக்கும்போது கலைஞரைப் பாத்த மாதிரியே இருக்கு.  தலைவர்கிட்ட இருக்கிற அதே நாகரிகம். இதெல்லாம் ரத்தத்துல வரணும். தமிழ்நாட்டுல இந்த அளவுக்கு விபரமாவும், தெளிவாவும் பேச யாருமே இல்லை’’ என்று சிலிர்த்துக் கொள்கிறார் 60 வயது ஜகநாதன்.

திருப்பூர் சி.டி.சி நிறுத்தம். காங்கேயம் சாலை அப்படியொரு கூட்டத்தை இதற்கு முன் கண்டிருக்காது. இஸ்லாமியர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் மாடிகளில் கூட மக்கள் வெள்ளம். மிகுந்த உற்சாகமாக மைக் பிடித்த ஸ்டாலின், ‘‘நாங்கள் 40 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு இஸ்லாமியர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். அ.தி.மு.க-வில் ஒரு தொகுதியில் மட்டுமே இஸ்லாமிய சகோதரரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள்’’ என்று ஒப்பிட்டதோடு விடாமல், திமுக இஸ்லாமியர்களுக்கு செய்த நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.

 ‘‘எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு. நம்ம போலீஸ் எல்லாம் வானத்தையே பாத்து சல்யூட் போட்டுக்கிட்டு நிக்கிறாங்க. ‘அம்மா கிளம்பிட்டாங்க... ஓவர்... ஓவர்.. ஓவர்... ஹெலிகாப்டர் கிளம்பிடுச்சு... ஓவர்.. ஓவர்.. ஓவர்... அம்மா மேல போயிட்டாங்க... ஓவர்... ஓவர்.. ஓவர்...’’ என்று ‘பஞ்ச்’ வைத்து நிறுத்த, மக்களோடு சேர்ந்து, பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் சிரிக்கிறார்கள். ‘‘சும்மாவே அந்த அம்மையார் மான நஷ்ட வழக்கு போட்டுக்கிட்டிருக்காங்க. நீங்க சிரிச்சு என்னை மாட்டி விட்டுடாதீங்க...’’ என்று சொல்லி ஸ்டாலினும் சிரிக்கிறார்.

‘‘டி.சி சுந்தரவடிவேலு வீட்டிலேயே திருட்டு நடந்திருக்கு. அமைச்சர் ஆனந்தன் வீட்டுக்கு அருகிலேயே கொலை நடந்திருக்கு. நான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது’’ என்று எஃப்.ஐ.ஆர். எண் வரைக்கும் விரிவாகச் சொல்ல, மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ‘‘ஜெயலலிதா அரசு நிகழ்ச்சிகளுக்குக் கூட வெளியில் வருவதில்லை. காணொலி காட்சி மூலம் கோட்டையில் இருந்தே பங்கேற்கிறார். அதனால்தான் சொல்கிறேன். இது ஆட்சி அல்ல. வெறும் காட்சி...’’ என்று சூடு போடுகிறார்.

வழியில் கட்சிக்காரர்கள் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளிலும் பங்கெடுக்கத் தவறுவதில்லை. புகைப்படக்காரர்களை நாசூக்காக தவிர்க்கிறார். அண்மையில் நல்லூர் நகரச்செயலாளர் நல்லி சண்முகத்தின் தந்தை இறந்துவிட்டார். நல்லூரில் பிரசாரம் முடிந்ததும், ஸ்டாலினின் வாகனம் மட்டும் நல்லி சண்முகத்தின் வீட்டுக்குச் சென்றது. குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லித் திரும்பினார் அவர்.    

கோபியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில் அவர் ஏறும்போது இரவு ஒன்பதேகால். விறுவிறுவென்று மைக் முன் சென்ற ஸ்டாலின் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். மின்வெட்டு பிரச்னையில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை தேதி வாரியாக பட்டியலிட்ட ஸ்டாலின், ‘‘2 மணி நேர மின்வெட்டுக்காக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு நீங்கள் தண்டனை தந்தீர்கள். இப்போது 20 மணி நேர மின்வெட்டு. அதற்கு அ.தி.மு.க ஆட்சிக்கு என்ன தண்டனை தரப் போகிறீர்கள்?’’ என்று கேட்க, ‘ஆட்சியை விட்டுத் தூக்குவோம்’ என்ற குரல் மக்களிடமிருந்து ஒலிக்கிறது.

இளைஞரணி துணைச்செயலாளர் ஹசன் முகமது ஜின்னா, ‘10 மணி’ என்று ஒரு துண்டுச்சீட்டுகொடுத்து நினைவூட்டவும், ஸ்டாலின் பேச்சை முடிக்கவும் சரியாகவே இருக்கிறது. மீண்டும் வாகனத்தில் ஏறுகிற ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் தரும் டீயைப் பருகியபடி கட்சிக்காரர்கள் கொடுத்த மனுக்களைப் பிரித்துப் படிக்கிறார். தன் பேச்சு பற்றி எல்லோரிடமும் கருத்துக் கேட்கிறார். அவசியம் இருந்தால் தலைவரிடம் பேசுகிறார். இரவு உணவு அருந்த 11 மணிக்கு மேலாகிறது. நாளைக்கான ஆயத்தங்கள் முடித்து படுக்கைக்குச் செல்லும்போது இரவு 12 மணி.
மீண்டும் காலை 5.30. விடியல்... உடற்பயிற்சி... செய்தித்தாள்...

சந்திப்புகள்... பிரசாரம்..!
பிரமிப்பாக இருக்கிறது.

இளைய தலைமுறை எங்கள் பக்கம்!

உணவு இடைவேளையின்போது ஸ்டாலினுடன் ஒரு ரிலாக்ஸ் மீட்...நெடுந்தூரம் பயணித்திருக்கிறீர்கள். மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது?போகின்ற இடமெல்லாம் எழுச்சியைக் காண முடிகிறது. ‘மாற்றம்’ வேண்டும் என்று நம்பி வாக்களித்ததற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. வேதனையின் விளிம்பில் மக்கள் நிற்கிறார்கள். வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, எட்டிப் பார்க்காத அரசு நிர்வாகம், வரலாறு காணாத மின்வெட்டு, எங்கும் சீரழியும் சட்டம் - ஒழுங்கு, தலைவிரித்தாடும் அ.தி.மு.க.வினரின் அராஜகப் போக்கு எல்லாவற்றையும் பார்த்த  மக்கள், ஜெயலலிதாவிற்கு பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள். 

உங்களின் பிரசாரம், பயணம் இரண்டிலும் இதுவரை இல்லாத வேகம்... ஏன்?

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல், நிர்வாகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்ற முனைப்புக் காட்டாமல், குடிநீரையே விலைக்கு விற்கின்ற ஜெயலலிதா தலைமையிலான இந்த மோசமான ஆட்சி போக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது என் பயணத்திற்கு மட்டுமல்ல, தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பயணத்திற்கும் உற்சாகத்தையும், வேகத்தையும் கொடுக்கிறது.

தி.முக.வை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்கூட உங்களை தனித்து விமர்சிப்பதில்லை. எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கிறது. எப்படி?

‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ - இந்த மூன்றும் தி.மு.க.வின் கோட்பாடு. மாற்றுக் கட்சித் தலைவர்களிடமும், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் அரசியல் நாகரிகம் போற்றுவது எப்படி என்பதை நான் கலைஞரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். மேயராகவும், அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பொறுப்புகளை வகித்த காலகட்டத்தில்கூட, எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவரிடமும் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டிருக்கிறேன்.  ஏன்? இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, கலைஞர் சார்பில் சுனாமி நிதியைக் கொடுத்திருக்கிறேன். நான் அரசியலுக்காக என்றைக்குமே அரசியல் நாகரிகத்தை பலி கொடுத்தது இல்லை. அதனால் நீங்கள் சொல்வது போல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் என்னிடம் அன்பு செலுத்தலாம்.

மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?

2009 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் களம் என் கண் முன்னே வந்து நிற்கிறது. தி.மு.க ஆட்சியின் சாதனைகளை மனதில் வைத்து, கருத்துக் கணிப்புகளை எல்லாம் முறியடித்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அமோக ஆதரவை மக்கள் அளித்த தேர்தல் அது. அதே போன்றதொரு உற்சாகத்தையும், ஆர்வத்தையும் நான் இந்தத் தேர்தல் களத்தில் காண்கிறேன். மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அவர்கள் காத்திருப்பது வாக்களிக்கும் தினத்திற்காக மட்டுமே! அதன் முன்னோட்டம்தான் இப்போது பார்க்கும் மக்கள் வெள்ளம்!

தமிழகத்தின் 14 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளைஞர்களுக்கு நாட்டின் வளர்ச்சி மீதுதான் அதிக அக்கறை. தி.மு.க ஆட்சியிலிருந்த காலங்களில்தான் மிகப்பெரும் வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இளைஞர்கள் உணர்வார்கள்.

இந்தியாவிலேயே முதன் முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் துவங்கி, திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் வரை பத்து பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமையக் காரணமாக இருந்தது தி.மு.க ஆட்சி. டைடல் பூங்காவில் தொடங்கி, இன்று சென்னை புறநகர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக மாறியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் கலைஞர்தான்.

சென்ற முறை ஆட்சியிலிருந்தபோது மட்டும் 62 ஆயிரத்து 340 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 51 தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 664 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்த பெருமைக்குரிய ஆட்சிதான் தி.மு.க. கழகம். ஜெயலலிதா அரசு போட்ட வேலை நியமனத் தடையை விலக்கி, 4 லட்சத்து 65 ஆயிரத்து 658 இளைஞர்களுக்கு வேலை கொடுத்தது கழக அரசு. இப்படி வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வரும் எங்களுக்கு இளைஞர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற
நம்பிக்கை எனக்கு உண்டு.

வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்