குட்டிச்சுவர் சிந்தனைகள்



சொந்தமா பேசுனாதான் பரவாயில்லயே..! நீங்க ஒண்ணு பேப்பர்ல பிரின்ட் அவுட் எடுத்துட்டுப் போயி படிக்கிறீங்க... இல்ல, ஸ்கூல் குழந்தையாட்டம் மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கிறீங்க. அப்புறம் கும்பல் கூடல, சைக்கிள் ஓடலன்னு எங்களை வந்து குடையுறீங்க. அய்யா பெரிய மனுஷங்களா!

ஒவ்வொரு இடத்துக்கும் கூட்டத்தக் கூட்டுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. மம்மி மணப்பாறைல பேசுறப்ப, ‘அண்ணி’ மதுரைல பேசுறாங்க. கேப்டன் சேலத்துல ஸ்டாண்ட் அப் காமெடி பண்றப்போ, மைக்கோ விழுப்புரத்துல மைக்கப் புடிச்சு அழுவுறாரு. எல்லா இடத்துக்கும் எப்படிய்யா கூட்டத்தக் கூட்டிப் போறது?

முன்னாள் அமைச்சர்கள்ல இருந்து இந்நாள் அமைச்சர்கள் வரை எல்லோருமே ‘கும்பல காட்டு... கும்பல காட்டு...’ன்னு ஒரே நாளுல கேட்டா, இல்லாத கும்பல எப்படி காட்டுறது? முன்ன மாதிரியா தொழில் இருக்கு? ஒரு குவாட்டரும் கோழி பிரியாணியும் கைல நூறு ரூபா பணமும் மட்டும் கேட்டவங்க, இன்னைக்கு வெயிலுக்கு விதையில்லாத தர்பூசணி ஜூசு, 300 ரூபா கேஷு, மத்தியான லஞ்சுக்கு உயர்தர சைவ ஹோட்டல்ல பாஸ்னு எல்லாமே கேக்குறாங்க. நைட்டு ‘நாதஸ்வரம்’ பார்க்கணும், அதனால நாலு மணிக்கு மேல டியூட்டி பார்க்க மாட்டேன்னு லேடீஸ்ங்க கான்ட்ராக்ட் போடுறாங்க. போதாக்குறைக்கு மூணு மீட்டிங் அட்டண்ட் பண்ணி மூளை குழம்புனவங்களை, புத்துணர்வு முகாமுக்கு கூட்டிப் போக வேண்டியதா இருக்கு. நாலு தடவைக்கு மேல கை தட்டுறதுக்கு பத்து ரூபா கேட்கிறாங்க. அட, விசில் அடிக்க ரெண்டு ரூபாயாம் சார். எப்படி நாங்க தொழில் பண்றது?

அதனால முன்னாள் / இந்நாள் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் நாங்க என்ன சொல்றோம்னா, ‘மீட்டிங்குக்கு கும்பல் கூட்டுவோர்’ சங்க உறுப்பினர்கள் எல்லாம் ஒரே இடத்துல கூடி, கோடிக்கணக்குல மாஸ் காட்டி நிற்கிறோம். நீங்க உங்க கட்சி தலைவர்களை, தினம் ஒருத்தரா வந்து எங்க இடத்துல பிரசாரம் பண்ணிட்டுப் போகச் சொல்லுங்க.
கேப்டன் மீட்டிங்குன்னா, 30% தள்ளுபடி. ஏன்னா, அவரு நல்லா காமெடியா பேசி எங்களை என்டர்டெயின் பண்றாரு. அதே போல காவி / கதர் கட்சி மீட்டிங் அன்னைக்கு 30% எக்ஸ்ட்ரா. ஏன்னா, அன்னைக்கு மேடையில கூட நாங்கதான் கும்பல் காட்டணும். ஓகேவா?
இவண், செயலாளர்,
மீட்டிங்குக்கு கும்பல் கூட்டுவோர் சங்கம்.

அப்பப்ப சொன்னாத்தான் கை தட்டல் சத்தம் வரும், அடிக்கடி சொன்னா காதுல ரத்தம்தான் வரும். மக்களுக்கு ஒண்ணும் செய்யாட்டியும், மம்மி மக்களைப் பார்த்து எல்லா மீட்டிங்குலயும் ‘செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ன்னு ஒரு டயலாக்க ஃபேமஸ் பண்ணி விட்டுட்டாங்க.

தமிழ்நாட்டுல அவனவன் இம்புட்டு நாள் பேமஸா இருந்த ‘ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆயிட்டாரு’ டயலாக்க விட்டுட்டு இப்போ இந்த டயலாக்க புடிச்சுக்கிட்டாங்க. காலைல எந்திரிச்சா ஒரு குடும்பத்தலைவி குழந்தைங்கள பார்த்து ‘மிஸ் கொடுத்த ஹோம் வொர்க்கை செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ன்னு மிரட்டிக்கிட்டு இருக்கு. பதிலுக்கு குழந்தை, ‘அந்த வீணாப் போன உப்புமாவை காலை டிபனாய் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ன்னு லந்து கொடுக்குது.

நைட்டு டாஸ்மாக் போனா, ஒரு சின்சியர் சிட்டிசன் ‘டாஸ்மாக்கை 24 மணி நேரமும் திறக்கணும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ன்னு வேட்டி அவுந்தது தெரியாம வெட்டி வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்காரு. ஆபீஸ் போக பஸ்ல ஏறுனா கண்டக்டர், ‘டிக்கெட்டுக்கு சரியான சில்லறை தரணும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ன்னு மக்களை வச்சு காமெடி பண்ணிட்டிருக்காரு.
ஞாயிற்றுக்கிழமை முடி வெட்டலாம்னு சலூனுக்குப் போனா, அங்க ஒருத்தரு ‘வெண்ணெயா வழுக்குற மாதிரி ஷேவிங் செய்யணும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ன்னு பயாஸ்கோப் ஓட்டுறாரு. ஏதாவது மிலிட்டரி ஹோட்டலுக்கு ரெண்டு புரோட்டாவ போட போனா, ‘சாப்பிட்ட பின் இலையை எடுக்கணும், செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ன்னு எகத்தாளம் பண்றாங்க.

அய்யா, பத்து நாளா பித்துப் பிடிச்சுப் போயிருக்கேன். அம்மா கவனத்தை ஈர்க்க சொன்ன விஷயத்த, இப்படி காமெடி ஆக்கி விட்டுட்டீங்களே? இனிமேல் பெரிய மனுஷங்க சொல்ற சீரியஸான விஷயத்தை காமெடியாக்காம இருக்கணும்.
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

கருத்துக் கணிப்பு குருட்டுக் கணிப்புன்னு இவனுங்க பண்ணுற உப்பசம் தாங்க முடில. தேர்தல் தேதிய அறிவிச்சா போதும்... கட்டம் போட்டு கருத்துக்கணிப்பு விட்டுடுறீங்க. அதான் உங்கள செக் பண்ண குட்டிச்சுவர் வழியா நாங்களே கருத்துக்
கணிப்பை பற்றி கருத்துக்கணிப்பு எடுத்தோம்...

மார்ச் 2014, முதல் வாரம்...
தேர்தல் கருத்து கணிப்பு எந்தளவு உண்மை?
42% பூரா ஃபிராடு சார்
40% எல்லாம் இங்கி பிங்கி பாங்கிங்க
10% எந்தளவு பொய்னு வேணா சொல்றோம்
8% காசு கொடுக்குற அளவு
மார்ச் 2014, இரண்டாவது வாரம்...
* மக்களிடம் தேர்தல் கருத்துக்
கணிப்பு கேட்க உண்மையா
வர்றாங்களா?
38% கடன் கேட்கத்தான் வர்றாங்க
29% தமாசு பண்ணாதீங்க சார்
22% அப்படியா?
11% கருத்து இல்லை
மார்ச் 2014, மூன்றாவது வாரம்...
* பேப்பர்ல கருத்துக் கணிப்பு படிக்கும்போது என்ன தோணும்?
36% செவுத்துல முட்டிக்க தோணும்
27% அவங்கள நேர்ல பார்த்து ‘சூப்பர் ஜி சூப்பர் ஜி’ன்னு சொல்லத் தோணும்
24% வாயிலையே கத்திய விட்டு ஆட்டத் தோணும்
13% அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு சொல்லத் தோணும்
மார்ச் 2014, கடைசி வாரம்...
* உங்களிடம் கருத்துக் கணிப்பு கேட்க வந்தால் என்ன செய்வீர்கள்?
63% நாய் புடிக்கிற
வண்டிக்கு சொல்லி விடுவேன்
20% உன் கம்பெனியா எனக்கு சோறு போடுதுன்னு கேட்பேன்
15% சேலத்துல முக்கிய பிரமுகர் கைதுன்னு சொல்லுவேன்
5% டிபன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்னு கூப்பிடுவேன்
ஏப்ரல் 2014, முதல் வாரம்...
* பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் யார்?
51% என் சம்சாரம்
35% எங்கப்பா
13% எங்கம்மா
1% என் மாமியார்


ஆல்தோட்ட பூபதி