என் ஹீரோ எம்.ஜி.ஆர் மாதிரி!



ரவி கே.சந்திரன் பெருமிதம்


இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளர், ரவி கே.சந்திரன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கஜினி’, ‘பிளாக்’, ‘அக்னிபாத்’ என விஸ்வரூபம் எடுத்த ரவி கே.சந்திரனின் அடுத்த அவதாரம், இயக்குநர். முடிவடையும் நிலையில் இருக்கிறது இவரின் ‘யான்’. ரசனையின் உச்சத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டின் கதவைத் திறந்தால், மிக அமைதியாக ‘நல்லாயிருக்கீங்களா?’ என புன்னகை விசாரிப்பு. கேள்வியை முடிக்கும் முன்பே, அனுபவச் செறிவில் பதில் வந்து விழுகிறது...

‘‘ரொம்ப தீர்மானமா எழுதி, பக்கா ஸ்கிரிப்ட்டா என்கிட்ட இருந்த கதை ‘யான்’. காதலில் ஆரம்பிச்சு, அதன் திருப்பங்களில் திரும்பி ஆக்ஷனில் முடியும். ஆலாப் பறக்கிற ஆக்ஷன் இருக்கும். ஆனாலும், மணிரத்னம், கௌதம் மேனன் படங்களில் ஒரு வித அமைதி இருக்கும்ல... அது இருக்கும். ஜீவாவின் வாழ்க்கையில் நடக்கிற சில விஷயங்கள் எங்கோ அவரைக் கொண்டு போய் சேர்க்கும்.

நமக்கெல்லாம் சேர்த்து சொல்லக்கூடிய மெசேஜ் இதில் இருக்கு. ஜீவா நடிச்சதிலேயே இதுதான் பெரும் பட்ஜெட். இப்ப வர்ற ஹீரோவை எல்லாம் அழுக்கா, போக்கிரியா, பொறுக்கியா பார்த்திட்டு, இதில் ஜீவாவை அழகா, அம்சமா குதூகலமான இளைஞனா பார்க்க பிடிக்கும். எம்.ஜி.ஆரைப் பாருங்க, ரிக்ஷாக்காரரா நடிச்சா கூட அழகா நேர்த்தியா இருப்பார். பெண்களுக்கு எதிரா ஒரு வார்த்தை பேசினது கிடையாது. அப்பாவை ‘பெரிசு’ன்னு கூப்பிட்டது கிடையாது. அது மாதிரிதான் என் ஹீரோ. அவனையும் எல்லோருக்கும் பிடிக்கும்!’’

‘‘எப்படி ஜீவா இந்தக் கதையில் நுழைந்தார்..?’’
‘‘அது ஒரு கதைங்க. ஸ்கிரிப்ட் ரெடியானதும், முதலில் அபிஷேக் பச்சனிடம் கொடுத்தேன். ஐஸ்வர்யாவோடு ஹனிமூன் போயிருந்த அந்த நேரத்திலும் அபிஷேக்கிடமிருந்து, ‘படிச்சேன்... அருமையா இருந்தது’னு ஒரு எஸ்.எம்.எஸ். பத்து மாசமாச்சு. சத்தத்தையே காணோம். அடுத்து நான் கொடுத்தது ரன்பீர் கபூரிடம். அவரும் படிச்சிட்டு போன் பண்ணினார். அடுத்து சூர்யாகிட்ட கொடுத்தேன். அவரும் அருமையா இருக்குன்னார். ஆனா, நான் யார் பின்னாடியும் போகலை. ஒரு முயற்சியும் செய்யலை. ஒரு விதையை விதைத்தால் தண்ணி ஊத்தணும். அதை செய்ய முடியாத அளவுக்கு நான் படு பிஸி. கே.வி.ஆனந்த் ஒரு நாள், ‘முதலில் படம் பண்ற முயற்சியில் சீரியஸா இறங்குங்க... இரட்டைக் குதிரை சவாரி வேண்டாம்’னு சொன்னார். ‘அக்னிபாத்’தோடு தற்காலிகமா ஒளிப்பதிவை நிறுத்தினேன். வீட்டில் உட்கார்ந்தேன். அப்புறம்தான் ஜீவாவைப் பார்த்தேன். இதோ, படம் முடிஞ்சு இறுதி நிலைக்கு வந்தாச்சு.’’

‘‘இதில ஜீவா - துளசி ஜோடி நல்லாயிருக்கு...’’
‘‘துளசி வயசில் ரொம்பக் கொஞ்சம்தான். ஆனா, வளர்ந்த விதத்தில் தெளிவு. எனக்கு துளசியை சிபாரிசு செய்ததே மணிரத்னம்தான். ஹீரோ கேலி பண்ணின உடனே, அவனைக் காதலிக்கத் தொடங்குகிற வழக்கமான பொண்ணு இல்லை என் ஹீரோயின். பிரமாதமா செய்தாங்க. ஜீவாகிட்ட கூட கொஞ்சம் கரெக்ஷன் சொல்லியிருக்கேன். துளசிகிட்ட சொன்னதில்லை. அவ்வளவு இயல்பா அம்மாகிட்டேயிருந்து ஃபைன் டியூன் ஆகி வந்தாங்க.’’
‘‘மொராக்கோ வரைக்கும் போயிருக்கீங்க..?’’

‘‘உலக நாகரிகத்தோட உச்சம்தான் மொராக்கோ. வாழ்நாளில் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டிய அழகு. ‘கிளாடியேட்டர்’, ‘கிங்டம் ஆஃப் ஹெவன்’, ‘மம்மி’ன்னு மிக முக்கியமான படங்கள் அங்கேதான் ரெடியாகி இருக்கு. கேமராவைக் கொண்டு போய் அங்கே வச்சா, எதை எடுக்கலாம், விடலாம்னு தீர்மானம் பண்றது அவ்வளவு கஷ்டம்.’’
‘‘ஒளிப்பதிவாளர் டைரக்டரா இருப்பதில் என்ன வசதி?’’

‘‘சொல்லில் வருவது பாதின்னு சொல்வாங்க. அதுமாதிரி டைரக்டர் சொல்றதை ஒரு மாதிரி புரிஞ்சுக்கிட்டு நாங்க ஒரு மாதிரி எடுப்போம். நாம் பண்றதை அப்படியே வேணாம்னும் சொல்லாம சேஃப் ஷாட்டா இன்னொண்ணு எடுத்துக்குவோம்னு சொல்லி, அவங்க நினைச்சதை எடுப்பாங்க. இப்படியெல்லாம் டயம் கொஞ்சம் எடுத்துக்கும். நானே டைரக்டரா இருப்பதால் எனக்கு என்ன வேணும்னு நிச்சயமா தெரியும். அதை மட்டும்தான் நான் எடுப்பேன். அவ்வளவுதான்... பெருசா வேற வித்தியாசம் இல்லை.’’
‘‘இந்தியில் நிறைய ஹீரோக்கள்கிட்ட பழகியிருக்கீங்க... அனுபவம் எப்படி?’’

‘‘ஒரு தடவை இந்தி ‘கஜினி’ படத்தின்போது அமீர்கானைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் வீட்டுப் பக்கம் காபி ஷாப்க்கு வரச்சொன்னார். முன்னாடியே அங்கே போய் உட்கார்ந்து, அமீர் வருகிற காரை எதிர்பார்த்தால், அப்படி எதுவும் வரலை. ஒரு தொப்பியைப் போட்டுக்கிட்டு ஓரமா, பொடிநடையா நடந்தே வர்றார். ஆச்சரியமாகிடுச்சு. பேசிட்டு, அப்படியே ‘பான்’ வாங்கிப் போட்டுக்கிட்டு, திரும்பிப் போறார். அவ்வளவு இயல்பு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அமிதாப்பின் மேனேஜர்கிட்ட இருந்து போன்.

‘சார், உங்களை அமிதாப் பார்க்க விரும்புறார். மும்பை வந்ததும் சொல்லுங்க’ன்னார். அங்கே போயிட்டு சொன்னா, ‘ராம்லீலா பார்த்தேன். உங்க ஒளிப்பதிவு அபாரம். என்னை மறந்திட்டேன். வெரிகுட்’னு பொக்கே, கடிதம் எல்லாம் அனுப்புறார். நான்தான் அவருக்கு போன் பண்ணி, ‘சார், அது நம்ம பையன் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்தது’ன்னு சொன்னேன். பிறகு அவரும், ரவிவர்மனும் சந்திச்சு வாழ்த்துக்களைச் சொல்லிக்கிட்டாங்க.

அமிதாப்புக்கு இது தேவையே இல்லை. யாருடைய சிபாரிசும் தேவைப்படாத உயரத்தில் அவர். ஆனால், நல்லதா ஒண்ணு இருக்கும்போது பாராட்டுகிற மனசுதாங்க பெரிசு. இங்கே விஜய், சூர்யா மாதிரியானவர்கள் அப்படித்தான். சூர்யா ஒரு விளம்பரத்துக்காக மும்பை வந்திருந்தார். அவருடைய அடக்கத்தையும், அழகையும் பார்த்திட்டு எங்க யூனிட்டே அவர்கிட்ட மறுபடி ஒர்க் பண்ணத் துடிக்குது!’’

‘‘தமிழில் ஒளிப்பதிவு எப்படியிருக்கு?’’
‘‘எனக்கு ‘ராஜாராணி’ செய்த வில்லியம்ஸ், பாலசுப்பிரமணியெம், மதி... இவங்களோட வொர்க் பிடிக்குது. கணிசமான உழைப்பைப் போடுறாங்க. ஆனால், சில படத்தில் சில ஏரியாக்களில் தெரிகிற அழகு, மொத்தப் படத்திலும் இருக்கணும். அப்பதான் பெயர் போடாமலேயே பெயர் தெரியும். அதற்கு டைரக்டர்கள்கிட்ட சில செல்லச் சண்டைகள் போடணும். அவ்வளவுதான்!’’

- நா.கதிர்வேலன்