சோதனை



சோ

பிரபல தொழிலதிபரான ரகு, தன் மகளின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். பிரபல சமையல் மாஸ்டரான காசியிடமிருந்து அவருக்கு அடிக்கடி போன் வந்தது.
‘‘மாஸ்டர், நான் பிஸியா இருக்கேன்... இன்னைக்கு வேணாம். நாளைக்கு போன் பண்ணிட்டு வாங்க’’ என்று அழைப்பைத் துண்டித்தார் ரகு.

அருகில் இருந்த ரகுவின் நண்பர் கேட்டார், ‘‘ஏம்பா நாலு நாளா தினமும் சமையல் மாஸ்டர்கிட்ட இதையே சொல்றியே... அவரு பிஸியான நல்ல மாஸ்டருப்பா!’’
‘‘அவர் அருமையான சமையல்காரர்தான்... ஆனா, பொறுமையானவரான்னு தெரியாது. நான் தரப்போறது பெரிய ஆர்டர். நாலாயிரம் பேரை எதிர்பார்க்கறேன்... ஐயாயிரம் பேர்கூட வரலாம். அந்த சமயத்துல கோபப்படாம பொறுமையா நிலைமையை சமாளிப்பாரான்னு தெரிஞ்சிக்கத்தான் இந்த டெஸ்ட்’’ என்றார் ரகு.

உடனடியாக காசி மாஸ்டரிடமிருந்து மீண்டும் போன்கால்.
‘‘மாஸ்டர் இப்பதானே சொன்னேன்... நாளைக்கு பார்க்கலாம்!’’
என்றார் ரகு அவசரமாக.

‘‘சார், எனக்கு உங்க ஆர்டர் வேணாம். ஆர்டர் தரவே இப்படி இழுத்தடிக்கிறீங்க... நாளைக்கு வேலை முடிஞ்சதும் பேமென்ட் தர இழுத்தடிக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? சமையல்ல ரிஸ்க் எடுப்பேன். சம்பளத்துல எடுக்கறதில்லை சார்!’’ எனப் பொறுமையாக சொல்லிவிட்டு கட் ஆனார் காசி.

வீ.விஷ்ணுகுமார்