பேசும் சித்திரங்கள்



மௌனத்தில் உடையும் புனிதம்!

‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதையில் அம்மா ஊரில் இல்லாதபோது பூப்பெய்திய ஒரு பெண்ணின் மனநிலையை அம்பை அருமையாக விளக்கியிருப்பார். ‘‘உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகுதான், என்பாளா அம்மா?’’ என பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி, எல்லோரையும் புன்னகையின் ஒரு தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள் நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும்.

அவளுக்கு எல்லாமே அழகுதான் என்பது அவள் நினைப்பு. ஆனால் அம்மா ஊரிலிருந்து வந்ததும், ‘‘உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இது வேற இனிமே ஒரு பாரம்’’ என்று அவளை நொந்து கொள்வாள். அந்தப் பெண் உடைந்து நொறுங்கிப் போகும் இந்த இடத்தை சிறுகதையில் அநாயாசமாகக் கடந்து செல்வார் அம்பை. இந்தச் சிறுகதைக்கு கொஞ்சமும் குறை யாத நேர்த்தியோடு எடுக்கப்பட்ட குறும்படம், ‘சின்ன மனுஷி’.

இஸ்லாமியர்களை ஒட்டுமொத்தமாகவே தீவிரவாதிகளாக சித்தரித்து, அதனால் அவர்களை கொஞ்சம் பயத்தோடு அணுகும் மாயையை விதைத்ததில் தமிழ் சினிமாவின் பங்கு அதிகம். ஆனால், இந்தக் குறும்படம்... கணவனை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அன்றாட வாழ்க்கைப் பாட்டுக்காக சிரமப்படும் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது. வயதிற்கு வந்த பாத்திமா, வீட்டில் இருந்தபடி ஆப்பம், வடையெல்லாம் செய்து கொடுக்க, அதை விற்று வரவேண்டிய பொறுப்பு சிறுமி சீமாவிற்குக் கொடுக்கப்படுகிறது. அந்த வயதுக்கே உரித்தான துடுக்கு, விளையாட்டு, படிப்பு என எல்லாவற்றையும் இழந்து அவள் தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

ஒரு நாள் இரவு சீமாவிற்கு லேசாக வயிறு வலிக்க, துடித்து எழும் அவள், தான் பூப்பெய்தியதை உணர்கிறாள். ஆனால். ‘‘இவளும் வயசுக்கு வந்துட்டா, எங்க நிலைமை மோசமாகிடும்’’ என்று அவளது அம்மா என்றோ ஒருநாள், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வர, தான் பூப்பெய்தியதை மறைத்து, கிணற்றடிக்கு சென்று குளித்துவிட்டு, மீண்டும் படுக்கையில் வந்து படுத்துக்கொள்கிறாள், காலையில் வழக்கம் போல, மீண்டும் ஆப்பம் விற்கக் கிளம்புகிறாள்.

இந்தக் குறும்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் சிறுமி, சீமா. மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவள், ஆப்பம் விற்க வீடு வீடாக ஏறி இறங்குகிறாள். சிறுவர்கள் பள்ளிக்
கூடத்தில் இருக்கும்போது, ஜவ்வு மிட்டாய் விற்க அவளும் பள்ளிக்கூடம் சென்றுவிடுகிறாள். பொருளாதாரம் அவளை மற்ற சிறுவர்களிடம் இருந்து பிரித்தாலும், தொடர்ச்சியாக அவள் அந்த சிறுவர்களுடனான தன்னுடைய நட்பை விடாப்பிடியாக புதுப்பித்துக் கொண்டே இருக்கிறாள். தன்னுடைய வாழ்க்கைத் தரம் பற்றிய புகார்கள் அவளிடம் இல்லை.

நாடா இல்லாத பாவாடையை முடிச்சுப் போட்டபடி வடை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு நாளில், ஒரு ஆண் அந்த முடிச்சை அவிழ்த்து அவளை அவமானப்படுத்துகிறான். பிறகு ‘‘ஒரு வடை கொடு’’ என்று கேட்கிறான். ஆனால் சீமா, ‘‘நீங்க வடை ஒண்ணும் வாங்க வேணாம் சார்’’ என்று சொல்வதன் மூலமாக, இந்த வலிய சமூகத்திடம் தன்னால் இயன்ற எதிர்ப்பைக் காட்டுகிறாள்.
அம்மா எத்தனைக் கூப்பாடு போட்டு எழுப்பினாலும் அதிகாலையில் சட்டென எழுந்திருக்காத இயல்புடைய அவள், பூப்பெய்திய அன்று மட்டும் ‘சீமா’ என்று குரல் கொடுத்ததும் திடுக்கிட்டு எழுந்து, ஆப்பத்தை எடுத்துக்கொண்டு, அம்மாவை ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறாள். சீமாவின் மௌனமான அந்தப் பார்வையோடு, படம் உறைந்து போகிறது. ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு முன்னர், புனிதம் என்பதும், சடங்குகள் என்பதும் ஒன்றுமற்ற வெற்றுப் பார்வைகள் என்பதை சீமா தன்னுடைய மௌனத்தின் மூலம் உடைத்துச் செல்கிறாள்.

சிறுமியாக நடித்திருக்கும் பெண்ணின் இறுக்கமான முகம், அவளது இந்தக் கதாபாத்திரத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. குறிப்பாக, பள்ளியில் படிக்கும் மற்ற பெண்களோடு விளையாடும்போது தோன்றவேண்டிய சந்தோஷமான மனநிலை கூட இல்லாமல், அவள் தேமேவென விளையாடிச் செல்கிறாள். குழந்தைகளின் மனநிலையை பெரிதும் குடும்பப் பின்னணியே
தீர்மானிக்கிறது.

அம்பையின் கதையில் வரும் சிறுமியைப் போல, இவள் அம்மாவின் ஆதரவுக் கரத்தையோ, அனுசரணையான பேச்சையோ எதிர்பார்க்கவில்லை. சமூகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு நிர்க்கதியாக இருக்கும் தன் குடும்பநலன் கருதி, தன்னை ஒன்றுக்கும் உதவாத சடங்குகளில் இருந்து விடுவித்துக்கொள்கிறாள். ஒருவேளை அந்தச் சடங்குகள் செய்யப்பட்டிருந்தால், அவளுக்கு அதிகபட்சம் ஒரு நாடா வைத்த பாவாடை கிடைக்கலாம். ஆனால், ‘அடுத்த வேளை சோற்றுக்கு தன் குடும்பம் என்ன செய்யும்’ என்கிற ஒற்றை சிந்தனையே இந்தப் படத்தின் மைய சரடு.

கணவனை இழந்த அடித்தட்டுக் குடும்பங்களை இன்றளவும் வாழ வைப்பது உணவு வியாபாரம்தானே! கிராமத்து தெருக்களில் இப்படி சிறுவர், சிறுமியர் அலைந்து இட்லி, தோசை விற்பதைக் காணலாம். அந்தக் காட்சியைக் கொஞ்சமும் செறிவு குறையாமல் இயக்குனர் இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். படைப்பாளிக்கு உற்றுநோக்கும் திறன் மிக முக்கியம். கதாபாத்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை, யதார்த்தத்துக்கு மிக அருகில் கொண்டு வந்து சேர்க்க அதுதான் உதவும்.

எந்தத் திரைப்படப் பின்னணியும் இல்லாமல், சில நண்பர்கள் ஒன்றிணைந்து திரைப்பட சங்கங்கள் ஆரம்பித்து, நிறைய படங்கள் பார்த்தே, அருமையான குறும்படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர்தான், செல்வாதரன். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் மெக்கானிக்காக பணிபுரிந்துகொண்டே, ஓய்வு நேரத்தில் இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார். வாசுதேவநல்லூரில் பணிபுரியும்போது, தன்னுடைய அலுவலகத்திற்கு தினசரி வடை கொண்டு வந்து விற்கும் ஒரு சிறுமியோடு தொடர்ச்சியாக உரையாடியிருக்கிறார். அவள் வாழ்க்கையின் வலியை தான் உணர்ந்தது போல், மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

முதலில் இதை சிறுகதையாக எழுதி... அதில் நிறைவடையாமல், பிறகு கவிதையாக எழுதி... அதிலும் தன்னிறைவு ஏற்படாமல் இறுதியில் குறும் படமாக எடுத்துள்ளார். தவிர, இவர் நேரில் கண்ட சிறுமி சுற்றித் திரிந்த வீதிகளில், அவளை மாதிரியே சாயல் கொண்ட இன்னொரு பெண்ணை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார். இசைதான், இது குறும்படம் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அந்த இசையும் கூட, குறும்படத்தின் தன்மை கெடாமல், அதற்கேற்றவாறு ஒலிக்கிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பெரும்பாலும் ஆண்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய ஆசைப்பட்டு, முகவர்களிடம் ஏமாந்து, இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். அப்படி தன் வாழ்க்கையைத் தொலைத்த ஒரு ஆணின் குடும்பப் பின்னணியிலிருந்து தான், இந்தக் கதை உருவாகி யிருக்கிறது. மனித வாழ்வின் ஏமாற்றங்களில் இருந்துதான் படைப்புகள் பிறக்கிறது. ஆனால் படைப்புதான், மனித வாழ்க்கையின் ஏமாற்றங்களை மறந்து, அவன் வாழ்க்கையை சக வலிகளோடும் எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கிறது.

‘சின்ன மனுஷி’ குறும்படத்திற்கான செலவு, ஒன்றரை லட்சம் ரூபாய். நண்பர்களிடமும் வங்கியிலும் கடன் பெற்று, மனைவியின் நகைகளை அடகு வைத்து குறும்படத்தை முடித்திருக்கிறார் செல்வாதரன். ‘‘செலவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. என் மனதில் இருந்த வலியை, காட்சி வடிவில் இறக்கி வைத்துவிட்டேன். ஒரு ஆத்ம திருப்தி கிடைத்திருக்கிறது. இது தவிர,  Childrens Fund of Canada அமைப்பு நடத்திய போட்டியில், விருது வென்றுள்ளது. குறும்படங்கள் ஆத்ம திருப்திக்காக எடுக்கப்பட்டாலும், இப்போது வணிகச் சந்தையும் நிறையவே உள்ளது’’ என்கிறார் அவர்.

‘தமிழ் ஸ்டுடியோ’ அருண், 29 வயது மென்பொறியாளர். கும்பகோணத்தில் பிறந்தவர். சினிமா மீதான ஆர்வத்தால் இந்த அமைப்பை நிறுவி பெரும் வீச்சுடன் இயங்கி வருகிறார். குறும்படப் படைப்பாளிகளுக்கு பாலமாக இருக்கிறார். நல்ல குறும்படங்களை ரசிகர்களுக்கும் சர்வதேச நிகழ்வுகளுக்கும் கொண்டு சேர்க்கிறார். குறும்படங்களுக்கு வணிக வாய்ப்புகளை சாத்தியமாக்குகிறார். தமிழில் வெளியாகி இருக்கும் சிறந்த குறும் படங்களை இந்தத் தொடர் வழியாக அறிமுகம் செய்கிறார். தொடர்புக்கு: thamizhstudio@gmail.com

(சித்திரங்கள் பேசும்...)

தமிழ் ஸ்டுடியோ  அருண் புதிய பகுதி