சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

உங்களுக்கு சேவை செய்வதற்கென்றே வந்துள்ளேன். நான் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்குச் சேவை செய்து அந்தக் கடனைத் தீர்த்துக் கொள்வேன்

- பாபா மொழி

வினோத் கெய்க்வாட் தமிழில்: பி.ஆர்.ராஜாராம்

ஷாமா கட்டைகளின் குவியல்மீது உட்கார்ந்திருந்தான். அந்தக் குவியலில் ஒரு பாம்பு ஒளிந்து கொண்டிருந்தது. ஷாமாவிற்கு இது தெரியாது. பேசிக்கொண்டே அவன் கை அதன் மேல்பட்டதும், பாம்பு அவன் சுட்டு விரலில் கணநேரத்தில் கொத்திவிட்டது. ''ஐயோ... செத்தேன்... ஏதோ கடித்து விட்டது’’ என்று அலறிக்கொண்டே அவன் கீழே குதித்தான். இதற்குள் பாம்பும் ஓடி மறைந்தது. விஷம் ஏறிக்கொண்டே வந்ததால், அவன் வலியால் துடித்தான். கை நீலமாகிக் கொண்டே வந்தது.

அவன் மசூதிப் பக்கம் ஓடி வந்தான். அங்கு பாபா ஏதோ மனக்கலக்கத்தில் அங்குமிங்கும் நிலை கொள்ளாமல் அலைந்துகொண்டிருந்தார். அவர் ஷாமாவின் வருகையை எதிர்நோக்கியிருந்தார். இதற்குள் ஷாமாவின் பின்னால் பெருங்கூட்டம் கூடியிருந்தது. ஷாமாவும் பாபாவும் நேருக்கு நேர் ஒரு கணம் பார்த்தார்கள். ஷாமா பள்ளிவாசல் படிகளில் ஏறத் தொடங்கியதும், ‘‘நில்... அயோக்கியனே! மேலே ஏறி வராதே. ஏறினால் தெரியும் என்னவாகும் என்று. கீழே போ... இறங்கு கீழே...’’ என்று பாபா ஆவேசத்துடன் கத்தினார். அவரது கண்கள் சுட்டெரிப்பது போல இருந்தன. வார்த்தைகள் நெருப்புத் துண்டுகள் போல வந்து விழுந்தன.

ஷாமாவின் நிலைமை மோசமாக இருந்தது. பாம்பின் விஷம் உடலில் ஏறிக்கொண்டிருந்ததால், வேதனை பொறுக்காமல் அவதிப்பட்டான். மரணம் நெருங்கிவிட்டதாக நினைத்தான். ‘இதை விடுவிக்க பாபாவினால்தான் முடியும். ஆனால் அவருடைய சொற்கள், விஷத்தை விடக் கடுமையாக இருந்தன. மேலே ஏறிவரத் தடை செய்து விட்டாரே! இதன் அர்த்தம் என்ன? காசிராமையும் பாபா பிழைக்க வைக்க முயலவில்லை. நம் கதையும் அப்படித்தானா?’

மீன்டும் அவன் மசூதியின் படிக்கட்டில் கால் வைத்து ஏற முயன்றான். ‘‘இறங்கு கீழே...’’ - பாபா இப்பொழுது தன் கையில் சட்காவை எடுத்துக் கொண்டு, பெருங்
குரலில் சொன்னார். ‘‘மேலே ஏறாதே... கீழே இறங்கு... இல்லாவிட்டால் இந்த பக்கீர் உன்னை ஒழித்துவிடுவான்... இறங்கு கீழே!’’எல்லோரும் மௌனமானார்கள். இதைக் கேட்டு ஷாமாவிற்கு கொஞ்ச நஞ்சமிருந்த நப்பாசையும் போயிற்று! கொஞ்ச நேரம் பாபா ஏதேதோ கத்திக் கொண்டே அலைந்தார். ‘‘இறங்கு... இல்லாவிட்டால் நானே உன்னை இறக்குவேன்’’ என்று கத்தினார். சிறிது நேரம் கழித்து அவர் அமைதியானார்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நிமாண்கரைப் பிடித்துக் கொண்டு ஷாமா மேலே ஏறி வந்தான். அவன் கண்களில் மரண பயம் குடிகொண்டிருப்பதைப் பார்த்த பாபா, ‘‘ஷாமா, பயத்தினால் துவண்டுவிடாதே. நீ தேறிவிடுவாய்... கவலையை விடு. கருணையுள்ள இந்த பக்கீர் காப்பாற்றுவார்!’’ என்றார். ‘‘ஆனால் பாபா, என்னை ஏன் மேலே ஏறி வராதே என்றீர்கள்? கீழே இறங்கு என்று ஏன் விரட்டினீர்கள்?’’

‘‘ஷாமா, படித்த ஆசிரியர் நீ. ஆனால், ஒன்றுமே புரிந்து கொள்ளவில்லையா? ‘கீழே இறங்கு’ என்று நான் உன்னையா சொன்னேன்? உன் உடம்பில் ஏறிக்கொண்டிருந்த பாம்பின் விஷத்திடம் அல்லவா நான் கட்டளையிட்டேன். மெல்ல அது இறங்கும். மேலே ஏறாது. இனி நீ கவலைப்பட வேண்டாம். என் மேல் நம்பிக்கை வை. வீட்டிற்குப் போய் நிம்மதியுடன் இரு. நாநா, இவனை அழைத்துக்கொண்டு போ.’’

நாநா அவனை அழைத்துச் சென்றார். தாத்யாவை அழைத்த பாபா, ‘‘நீ ஷாமா வீட்டிற்குப் போ. ஷாமாவிற்கு தவிர்க்க முடியாத அளவிற்கு தூக்கம் வரும். ஆனால் எக்காரணம் கொண்டும் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருக்கச் சொல். பசி எடுத்தால், என்ன விருப்பமோ அதைச் சாப்பிடச் சொல். ஆனால், எந்த நிலையிலும் அவன் தூங்கக் கூடாது. இதை மாத்திரம் கண்டிப்பாக அனுசரிக்கச் சொல். போ...’’ என்று விரட்டினார்.

மெள்ள மெள்ள இரவு வந்தது. அப்போதும் பாபா விழித்துக்கொண்டும் திரிந்து கொண்டும் இருந்தார். காகா சாகேப் தீட்சித் என்பவர், தரிசனம் முடிந்து கிளம்பத் தயாரானார். அவரையும் ஷாமா வீட்டுக்குப் போகச் சொன்னார் பாபா. ‘‘அவனுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். அது அவனை மயக்கமடையச் செய்யும். இதைத் தடுக்கணும். அவனைக் கண்விழித்தபடியே இருக்கச் செய்யுங்கள். முடிந்தால் நீங்கள் எல்லோரும் இரவு முழுதும் கண்விழித்து, அவன் அருகில் இருங்கள்!’’ என்றார் பாபா.

‘‘தங்கள் உத்தரவு. இப்பொழுதே அவன் வீட்டிற்குப் போய், இரவு முழுதும் தங்குகிறேன்’’ என்று சொல்லி, காகா வேகமாக நடையைப் போட்டார்.
மகல்சாபதி தூங்குவதற்காக வந்திருந்தார். அப்பொழுது பாபா கையை உதறிக்கொண்டும்  தன் விரலை அழுத்திக்கொண்டும் இருந்தார். மகல்சாபதி மாடத்திலிருந்த விளக்கை எடுத்து வந்து சந்தேகத்துடன் பாபாவின் சுட்டுவிரலை வெளிச்சத்தில் பார்த்தார். விரல் நீலமாகி இருந்தது. ஒன்றுமே பேசாமல், இருவரும் ஒருவரையொருவர் ஆழ்ந்து பார்த்துக்கொண்டார்கள்.
தாதா சாகேப் காபர்டே.

அவருடைய முழுப்பெயர் ஸ்ரீகணேஷ் ஸ்ரீகிருஷ்ண காபர்டே. இருந்தாலும் தாதா சாகேப் காபர்டே என்றுதான் பிரசித்தம். சுதந்திரப் போராட்ட வீரர், லோகமான்ய திலகரின் வலது கை என்றெல்லாம் இவர் நாடு முழுக்க பிரசித்தம். சிறந்த மேதை, நிறைய படித்தவர், திலகர் மேல் அளவற்ற பாசம் கொண்டவர், தேசபக்தர். ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி
மற்றும் மராட்டி மொழிகள் அறிந்தவர்.

ஆரிய சமாஜத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கல்லூரிக்கு வந்திருந்தபொழுது, காபர்டே அவருடன் ஆன்மிகம், கலாசாரம் போன்றவற்றைப் பற்றி சரளமாக சமஸ்கிருத மொழியில் சர்ச்சை செய்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். பிறகு வக்கீலாக இருந்து அரசியல் மற்றும் சமூக நலன்களுக்காக வாதாடி அங்கு தனக்கென முத்திரையைப் பதித்து நிரந்தரமாகப் பணிபுரிந்தார். திலகரின் சகவாசம் அவருக்குப் பெரிய தூண்டுதலாக இருந்தது. லோகமான்யரே அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு வந்தார். தாதா சாகேப் என்றாலே திலகருக்கு ஒரு பலமிக்க சக்தியாக இருந்தது.

1897ம் ஆண்டு அமராவதியில் அகில இந்திய காங்கிரஸின் வருடாந்திரக் கூட்டம் நடந்தது. அதில் இவர் வரவேற்புக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். லோகமான்ய திலகரை 1905 ஜூன் 24 அன்று கைது செய்தார்கள். அவர் மீது ராஜதுரோகக் குற்றம் சுமத்தி, அவரை ஜூலை 22ம் தேதி குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தி, ஆறு ஆண்டுகள் தண்டனை என்று விசாரணையில் கூறினார்கள். இதை உறுதி செய்து, ஆகஸ்டு 15 அன்று பம்பாய் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து லண்டனில் வழக்கு தொடுப்பதற்காக தாதா சாகேப் கடல் வழியாக இங்கிலாந்திற்குச் சென்றார். இரண்டு வருடங்கள் அங்கு இருந்து, முயற்சி செய்து, பிறகு ரங்கூன் வழியாக இந்தியாவிற்குத் திரும்பினார். இதில் அவர் வெற்றியடையவில்லை. ஆனால் தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தேசத்திற்காகத் தியாகம் செய்தார்.

இப்பேர்ப்பட்ட சிறந்த அறிவாளி, தேசபக்தர்தான் சாயிபாபாவின் பக்தராகவும் இருந்தார். அவருடைய குடும்பத்தினரும் சாயியின் பரம பக்தர்களாக இருந்தனர். லண்டனிலிருந்து திரும்பியதும் அவர் ரொம்ப நொந்து போயிருந்தார். காரணம், திலகரின் வழக்கில் வெற்றி கிட்டவில்லையே என்கிற ஆதங்கம். மனதால் களைத்து அமைதியில்லாமல் தவித்த தாதா சாகேப், தன் வேதனையை மறக்க ஷீரடிக்கு வந்தார். பாபாவை தரிசித்தார். அவர் காணிக்கை கேட்டதும், தாதா சாகேப்பும் மிகுந்த பக்தியுடன் கொடுத்தார்.

‘‘தாதா சாகேப், சென்ற இரு வருடங்களாக எனக்கு உடம்பு சரியில்லை. இதனால் பார்லி ரொட்டியும் சிறிதளவு தண்ணீரும்தான் என்றுடைய ஆகாரம்’’ என்றார் பாபா.
ஒன்றும் பேசாமல் வெறுமனே தலையாட்டினார் தாதா சாகேப். ஒரு காலை நீட்டி அதன் மேல் இருந்த ஒரு கட்டியைக் காண்பித்து, பாபா சொன்னார்... ‘‘இங்கே சிலந்தி நோய் இருந்தது. அதிலிருந்து ஒரு நாரை இழுக்க முயன்றேன். ஆனால் அது பாதியிலேயே அறுந்துவிட்டது.

மறுபடியும் கட்டி எழுந்தது. எனவே, நான் இப்பொழுது என் சொந்த கிராமத்திற்குப் போனாலொழிய இது குணமாகாது போலிருக்கிறது. பார்க்கலாம்... என்ன நடக்கிறதென்று!’’
‘‘பாபா, பக்தர்களின் நோயை உங்கள் உடம்பில் ஏற்றிக்கொள்கிறீர்கள். உங்கள் உடம்பைவிட, பக்தர்களைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகிறீர்கள்’’ என்றார் தாதா சாகேப்.

‘‘பக்தர்கள் எப்பொழுது பார்த் தாலும் என்னை நம்பி தொந்தரவு கொடுக்கிறார்கள். அவர்களின் பாரத்தை என் மேல் சுமத்துகிறார்கள். எனக்குக் கொஞ்சங்கூட ஓய்வு இல்லை. கடைசியில் இதுவும் மனித தேகம்தானே! அது களைப்படைகிறது. ஆனால், என்னுடைய ஆசியினால் பக்தர்களுக்குச் சிறிதளவு சுகம் கிடைக்கிறதென்றால், அதுவே இந்தப் பிறவி எடுத்ததற்கு பலனாகும். நான் எல்லோருக்கும் சேவகன்! கடவுள்தான் என்னுடைய எஜமானர்...’’

பாபா இன்னும் ஏதேதோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒருநாள் பாபா விச்ராந்தியாக மசூதியில் தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். தாத்யா துனியில் நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். ஷாமா ஏதோ யோசனையில் இருந்தார். அப்போது சுவரில் பல்லி ஒன்று, ‘சக்... சக்...சக்...’கென்று கத்தியது. எல்லோரும் அதைக் கேட்டார்கள்.
‘‘தெய்வமே’’ - ஷாமா பாபாவைப் பார்த்து சொன்னார்.

‘‘என்னப்பா ஷாமா?’’
‘‘பல்லி ஒரு அசுபம் என்கிறார்கள். அது உடலில் விழுந்தால், குளிக்கிறார்கள். அது கத்தினால் ஏதோ குறி சொல்கிறது என்கிறார்கள். இது நிஜமா?’’
‘‘ஷாமா... இந்த மனிதர்களே சரியான பைத்தியக்காரர்கள்.

பல்லியின் பாஷை உங்களுக்குத் தெரியுமா?’’‘‘தெரியாது.’’‘‘அப்படியிருக்கும்போது அது பேசுவது சுபமா, அசுபமா என்று ஏன் சொல்கிறீர்கள்? மனிதர்கள் அநேகவிதமான விஷயங்களில் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று.’’‘‘பாபா, உங்களுக்கு பல்லியின் பாஷை தெரியுமா?’’ சிரித்தவாறே பாபா பதில் சொன்னார்... ‘‘தெரியும். பல்லி மட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளின் மற்றும் வெவ்வேறு மனிதர்களின் பாஷையும் எனக்குத் தெரியும்.’’

‘‘அப்படியென்றால் அந்தப் பல்லி என்ன பேசிற்று என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்...’’ ‘‘அடேய், ஔரங்கபாத்தில் இருக்கும் அவளுடைய சகோதரி, இவளைக் காண இங்கு வந்துகொண்டிருக்கிறாள். எனவே அவள் சந்தோஷத்தில் கூப்பாடு போகிறாள்’’ என்று பாபா சொன்னதைக் கேட்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் ஷாமாவிற்கு நம்பிக்கையில்லை. பாபா ஏதோ வேடிக்கையாகச் சொல்கிறார் என நினைத்து, எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.

பாபா குளிக்கப் போனார். சிறிது நேரம் கழித்து, பாபாவை தரிசிப்பதற்காக யாரோ குதிரை வண்டியில் வந்து வாசலில் நின்றார்கள்.‘‘பாபா எங்கிருக்கிறார்?’’ என வந்தவர் ஷாமாவை விசாரித்தார்.
‘‘குளிக்கப் போயிருக்கிறார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’’
‘‘ஔரங்கபாத்திலிருந்து...’’

‘‘பாபா சொன்னதன் நேரடி அனுபவம் ஆரம்பமாகப் போகிறது போலிருக்கு’’ என தாத்யா மெதுவாகச் சொன்னான்.
‘‘இங்கே குதிரைக்குப் புல் கிடைக்குமா?’’ - குதிரை வண்டிக்காரன் கேட்டான்.
புல் எங்கே கிடைக்கும் என்பதை தாத்யா அவனுக்குச் சொன்னான்.

பாபா குளித்துவிட்டு வருவதற்குள் புல்லை வாங்கி வரலாம் என்பதற்காக கோணிப்பையை உதறினான். என்ன ஆச்சரியம்! அதிலிருந்து ஒரு பல்லி விழுந்தது. எல்லோரும் அதைப் பார்த்தார்கள். குளித்துவிட்டு வந்த பாபா, புன்னகையுடன் சொன்னார்... ‘‘அந்தப் பல்லியைக் கவனியுங்கள்.

பல்லியின் சகோதரிதான் இவள். இப்பொழுது என்ன நடக்கப்போகிறது என்பதைப் பாருங்கள்.’’
எல்லோரும் கூர்ந்து நோக்கினார்கள். சுவரிலிருந்த பல்லி வாலை ஆட்டிக்கொண்டே ‘சுக் சுக்’கென்று கத்தியது. பையிலிருந்து விழுந்த பல்லி, சரசரவென்று சுவரில் ஏறி, அதனருகில் வேகமாய்ப் போய் நின்றது. இரண்டும் ஒன்றையொன்று ஸ்பரிசித்துக் கொண்டன. சந்தோஷத்தில் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. சகோதரிகள் எத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறார்களோ! இதை முன்கூட்டியே அனுமானித்துச் சொன்ன பாபாவை அதிசயத்துடன் பார்த்தார்கள் அனைவரும்.

பாபா சிரித்தவாறு சொன்னார்... ‘‘அடேய், இவ்வுலகில் உறவு, சந்தோஷம் எல்லாம் எல்லோருக்கும் இருக்கிறது. மனித ஜாதியாகிய நீங்கள்தான் அதை சரியாகப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். உங்கள் மனக்கண்ணோட்டத்தைக் கொஞ்சம் எங்கும் பரவ விடுங்கள்!’’

(தொடரும்...)