டாப்ஜி!



ஓர் அறிவார்ந்த நண்பருடன் சில ஆண்டுகள் பழகியது போன்ற மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி விட்டது மனுஷ்ய புத்திரனின் ‘நிழல்களோடு பேசுவோம்’ தொடர். அந்த புத்திர னுக்கு அடுத்து, மித்திரனுக்காக (அசோகமித்திரன்) காத்திருக்கிறோம்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தான் சாதனை மனிதன் அல்ல... சாதாரண மனிதனே என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள அடம்பிடிக்கும் இசைஞானியின் வார்த்தைகள் அவரின் இசையைப் போலவே வெகு இதம்!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

‘வை ராஜா வை’ படத்தில் பயங்கரமான வில்லி வேடம் என்றதும் நோ சொல்லி ஓடிய நடிகைகள் மத்தியில் ‘நான் ரெடி’ என களமிறங்கி கலக்கியுள்ள அம்மணி டாப்ஸி, ரியல்லி டாப் ஜி!
- கே.ஸ்டீபன் சார்லஸ், வேளாங்கண்ணி.

தி.க.சியின் மறைவு இலக்கியதாசர்களுக்கு பெரும் இழப்புதான். அவருடன் ஆழமாகப் பழகி யிருக்கும் கவிஞர் விக்ரமாதித்தனின் நினைவுகள், எங்கள் கண்ணீரைப் பிழிந்தெடுத்தன!
- பி.கே.தமிழரசன், புதுச்சேரி.

மாயமான மலேசிய விமானத்தில் பயணித்த சென்னைவாசி சந்திரிகா சர்மாவின் கணவர் நரேந்திரனின் ‘நம்பிக்கையான காத்திருப்பு’ நெகிழ வைத்தது. இதுபோன்ற விபத்துக்களை இறைவா... இனி உருவாக்காதே!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.

சிவகார்த்திகேயனை ரஜினியோடு ஒப்பிட்டு நீங்கள் பிரம்மாஸ்திரக் கேள்வியைத் தொடுத்ததும், ‘அவர் நிழலில் இருக்கத்தான் ஆசை’ என்று தப்பி விட்டாரே. இப்படி எஸ்கேப் ஆவதுதான் ‘மான்
கராத்தே’வோ!
- எஸ்.வனஜாகுமார், திண்டுக்கல்.

என்னது? ஹன்சிகாவின் ஷூட்டிங் டென்ஷனை ஆர்யா ஜோக் சொல்லி ஆற்றுகிறாரா? அவர் வீட்டு மாடியில் ஒரு சம்மர் கோர்ஸ் நடத்தி, அந்த ஜோக்கை எல்லாம் சொல்லிக் கொடுத்தால் நாங்களும் லோக்கல் மினிம்மாக்களை கரெக்ட் பண்ணுவோம். கேட்டு சொல்லுங்களேன்!
- எல்.கேசவபெருமாள், திருப்பூர்.

விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றத் தவறுதல் என்பது கொலைக்குச் சமம் என்கிற மானுட தர்மத்தைச் சொல்லி, அதற்கான விழிப்புணர்வையும் தீர்வையும் முன்னிறுத்திய கட்டுரை அருமை!
- கவியகம் காஜுஸ், கோவை.

‘ஒரு நாளைக்கு ஒருவர் 24 கிராம் சர்க்கரைதான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என உலக சுகாதார நிறுவனம் மூலமாக பயமுறுத்திட்டீங்க. இனி, வீட்டில் ஒவ்வொரு ஆளுக்கும் மாதக் கணக்கு போட்டு சர்க்கரை வாங்க வேண்டியதுதான்.
- ஜி.வி.சந்தியா கோபால், கடலூர்.