நெடுஞ்சாலை



ஓடும் லாரிகளில் உயிருக்குத் துணிந்து திருடும் சீரியஸ் திருடனின் வாழ்க்கைக் கதைதான் ‘நெடுஞ்சாலை’. இருள் விரியும் பெரியகுளம் ரோட்டில், ஒரு காலத்தில் பெயர் பெற்ற கொள்ளைக்காரனாய் வாழ்ந்த தார்ப்பாய் முருகனின் உண்மைக் கதைக்கு நெருக்கமாகப் பயணிக்கிறது திரைக்கதை.

நிலவு வெளிச்சம், எங்காவது எரியும் குண்டு பல்பு ஒளி, இவை தவிர கும்மிருட்டு... இப்படி குறையொளியே பெரும் பாத்திரமாக படத்தில் இடம்பெறுவது முதலில் குறிப்பிட வேண்டிய பெரும் அழகு. ‘தில்’ ஹீரோ, ரோட்டுக்கடை முதலாளியம்மாவாக ஹீரோயின், கல் நெஞ்சு வில்லன் என காதல் கருவை ‘ஹைவே ஸ்கிரீன் பிளே’யில் ஓட விட்டிருக்கிறார்கள். 80களில் நடப்பது போன்ற கதையில், அதன் போக்கை திசை திருப்பாத மெனக்கெடல் தெரிகிறது. தமிழ் சினிமாவில் புதுசாய் கதை சொன்ன துணிவுக்காகவே கிருஷ்ணாவிற்கு வெரிகுட்!

ஃப்ளாஷ்பேக் கதை உத்தியில் ஆரம்பித்து, முதல் வரி வசனம் தொடங்கி, அடுத்தடுத்து பிரதான பாத்திரங்களை அறிமுகப்படுத்தி, ஐந்தாவது நிமிடத்திலேயே படத்திற்குள் நம்மை இழுப்பதில் இயக்குநருக்கு வெற்றி. தென்னிந்தியாவின் பரபரப்பான ‘நெடுஞ்சாலை’தான்... ஆனால், முன்பாதி யில் தீப்பிடிக்கும் திரைக்கதை, பின்பாதியில் வேகம் குறைந்து போகிறது.

தனது தோற்றத்திற்கு ஏற்ற ஆக்ஷன் கதையில் அதிகம் பேசாமல், சட் சட்டென முடிவெடுத்துக் காரியம் சாதிக்கும் (!) நேர்த்தியில் ஆரி பின்னி எடுக்கிறார். ஆனால், அதற்காக காதலி ஷிவ்தாவை கண்டு உருகும் காட்சிகளில் கூட அத்தனை ‘உர்’ரென இருக்க வேண்டுமா? வேகத்தில் பறக்கும் வண்டிக்கு ஈடாக தார்ச் சாலையில் பின்னங்கால் பிடரியில் பட ஆரி ஓடும் அழகு, கற்பனைக்கே எட்டாதது. கொஞ்சம் தவறினாலும், ப்ரேக் போட முடியாத அந்த ஓட்டங்களில் இப்போதைக்கு எந்த ஹீரோவையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. முரட்டு மீசையும், ஜிம் உடம்புமாக ‘கும்’மென இருக்கிறார் ஆரி. நிச்சயம் கொஞ்சம் பாவனைகளை வரவழைத்துக் கொண்டால் மேலே வரலாம்.

ரசிக்க ரசிக்க குறையாத வனப்பில் ததும்புகிறது ஹீரோயின் ஷிவ்தாவின் அழகு. ஓட்டலுக்கு வரும் மனிதர்களின் ‘மூவ்’களை முறியடிக்கும் மதியூகத்தையும், அவசரத்தில் மலையாளத்தோடு தமிழ் கலந்து பேசும் பதற்றத்தையும் கச்சிதமாக ப்ளே செய்கிறார். படு ஸ்மார்ட்டான அசத்தல் வில்லன், பிரசாந்த் நாராயணன். போலீஸ் லாக்கப்பில் வைத்து சலீம் குமாரை சவட்டி எடுத்து பயமுறுத்தும் காட்சியில் நிஜமாகவே பயமுறுத்துகிறார். அடுத்து வரும் படங்களில் இனி அவர்தான் படையெடுப்பு வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

அத்தனை விரட்டல், மிரட்டல், உருட்டல் பில்ட்-அப்!ரோட்டோர வேகத்தையும், உணர்வுகளையும் கொண்டு வருவதில் மாஸ் வெற்றி பெற்றிருக்கிறார் ராஜவேல் ஒளிவீரன். படத்தின் பாதி சுமையை சுமந்திருக்கிறார் இந்த வீரன். பாடல்களில் இதயம் தொடுகிறார் சத்யா. வித்தியாசமான வசனங்களில் ‘பளிச்’சென்று ஈர்க்கிறது ராமகிருஷ்ணனின் புது வரிகள்.முன்பகுதியில் இருந்த ஈர்ப்பை பின்பகுதி திரைக்கதையில் பின்னியிருந்தால், ‘நெடுஞ்சாலை’ இன்னும் வேகம் பிடித்திருக்கும்!

- குங்குமம் விமர்சனக்குழு