அவன் அவள் unlimited



ஓர் ஆணின் முகம்,
அவனது சுய சரிதை.
ஒரு பெண்ணின் முகம்,
அவளது கற்பனை நாவல்!
- ஆஸ்கர் வைல்ட்

காதல்...
சொன்னதுமே மனதுக்குள் மத்தாப்பு பூக்க வைக்கும் சொல். ஆனால், பெரும்பாலானவர்கள் கையை சுட்டுக்கொள்வதும் இதே மத்தாப்பில்தான். ‘‘அவளைப் புரிஞ்சிக்கவே முடியலை மச்சான்’’ என்பதும் ‘அவனை நல்லவன்னு நினைச்சேன்... ஏமாத்திட்டான்’ என்பதும் ஆதிகாலம் தொட்டே ஆணையும் பெண்ணையும் அலைக்கழிக்கும் அல்டிமேட் புலம்பல்கள். எல்லாம் அந்த மத்தாப்பு காயங்கள் படுத்தும் பாடு.

ஆணைப் பெண் புரிந்துகொள்வதும், பெண்ணை ஆண் புரிந்துகொள்வதும்தான் உயிர்கள் அனைத்துக்கும் இயற்கை கொடுத்திருக்கும் ஒரே அசைன்மென்ட். அதைக்கூட ஒழுங்காய் செய்ய முடியாத மக்கு மனிதர்களா நாம்? - இந்த தன்மானக் கேள்வியோடு தொடங்குகிறது இந்தத் தொடர்.ஆண்-பெண் ஆழ்மனதை அறிவியலால் அலசி, ‘இவ்வளவுதான்’ எனக் காட்டும் நெடும்பயணம் இது. உயிரியலாளர்கள், மனநல மருத்துவர்கள், மனிதவியலாளர்கள், உளவியல் ஆலோசகர்கள் என நிபுணர்கள் பலரும் இந்தப் பயணத்தில் நம்மோடு கை கோர்க்க இருக்கிறார்கள். பெண் என்றால் தெய்வம், தேவதை எனும் அலங்கார பிம்பங்கள் பலவும் இதில் உடைபடலாம். ஆண்தான் அறிவாளி, குடும்பத் தலைவன் என்பது போன்ற ஆதிக்க பிம்பங்களும் தகரலாம். எதற்கும் தயாராக இருங்கள்!

காதல்... காமம்... என்ற பெரிய தலைப்புக்கெல்லாம் போக வேண்டாம். இரண்டும் இல்லாமல் ஒரு மெல்லிய அரசியல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இடையறாது ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுகமே இல்லாத பெண்ணொருத்தி வந்து அட்ரஸ் கேட்கும்போது, போட்டி போட்டுக் கொண்டு ஓடி வருகிறது ஆண் கூட்டம். பத்து நிமிடம் அவளுக்கு மாய்ந்து மாய்ந்து வழி சொல்லி பத்து மார்க் வாங்கத் துடிக்கிறார்கள் பலரும். அவர்களில் யாரும் அந்தப் பெண்ணைக் காதலிக்கவில்லை. மீண்டும் அவளைப் பார்க்க முடியுமா என்பது கூட சந்தேகம்தான். ஆனாலும் காரணமே தெரியாமல் உதவுகிறார்கள். எந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் சக ஆண் ஒருவனுக்கு தான் ‘உதவி’ செய்யப் போவதில்லை என்பது அவர்களுக்கே தெரியும்.

இதே மாதிரி பெண்களின் இயல்பு வாழ்க்கையையும் ஆண்கள் பாதிப்பதுண்டு. இதற்காகக் காட்டப்படும் மிகப் பிரபலமான உதாரணம், ‘வகுப்பறை திட்டு’! ஒரு பெண்கள் கல்லூரி... அங்கே ஒரு மாணவியை சக மாணவிகள் மத்தியில் ஆசிரியை கடுமையாகத் திட்டுகிறார். இதில் அவளுக்கு ஏற்படும் அவமானத்தின் அளவு நூற்றுக்கு 20 என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சம்பவத்தின்போது 40 - 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஆசிரியர் ஒருவர் உடனிருந்தால், அதே மாணவியின் அவமானம் 40/100 ஆக இருக்கும்.

ஓகே... இதுவே அதுவொரு கோ-எட் கல்லூரி என்று வைத்துக் கொள்வோம். பையன்கள் முன்பாக ஆசிரியை பரேட் வாங்கும்போது, அவளின் அவமான விகிதம் 80/100 ஆக மாறிவிடும். இப்படித்தான் ஆண்கள் பெண்களை பாதிக்கிறார்கள். அந்த வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களையும் அந்தப் பெண் காதலிக்கிறாளா? அல்லது, அவர்கள் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று விரும்புகிறாளா? இரண்டும் இல்லை. ஆனாலும் அவர்களிடம் தன் ஹீரோயின் அந்தஸ்தை அவள் தக்க வைக்க விரும்புகிறாள்.

இதெல்லாம் என்ன லாஜிக்? அன்றாட வாழ்வில் ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் இப்படி பாதித்து பாதித்து விளையாடிக் கொள்வது ஏன்? இந்தத் தீராத விளையாட்டின் நோக்கம் என்ன? ‘சாலையோரப் புதரில் இளம்பெண் சடலம் மீட்பு’, ‘ஆசிரியை கண்டிப்பு மாணவி தற்கொலை’... நாம் மேலே பார்த்த உதாரணச் சம்பவங்களே இப்படியெல்லாம் தலைப்புச் செய்திகளாக மாறக்கூடுமா? மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியத்திடம் இதற்கு விளக்கமான பதில் இருக்கிறது.

‘‘சிம்பிளாக, இதை ‘இனக்கவர்ச்சி’ என்று கடந்து போகலாம். உயிரியல் ரீதியாக இதற்கு ‘இனப்பெருக்க உள்ளுணர்வு’ என்று பெயரிடலாம். மனித மூளையின் நட்ட நடுவே ஒரு கோடு தெரிவதைப் பார்த்திருப்பீர்கள். லிம்பிக் செக்ஷன் என்பது அதன் பெயர். வலது மூளையையும் இடது மூளையையும் இணைக்கும் இந்தப் பகுதிதான் ஆணையும் பெண்ணையும் கூட இணைக்கிறது. அதாவது, எதிர்பாலினரை கவரச் சொல்லிக் கட்டளை இடுகிறது.

ஆக, தவறு அந்தந்த ஆணிடமோ பெண்ணிடமோ இல்லை. அவர்களின் கட்டுப்பாட்டை மீறி இது நடக்கிறது. பொதுவாக ஒரு பாலூட்டி விலங்கு, தன் வாரிசைப் பெற்றெடுக்க நல்ல ஆரோக்கியமான தாயைத்தான் தேடுகிறது. பெண் விலங்கும் தன் சந்ததியை மேலும் சிறந்ததாக்க வலிமையுள்ள மரபணுவையே எதிர்பார்க்கிறது. அந்தந்த விலங்குகளுக்கே தெரியாமல் ஆழ்
மனதில் இந்த எதிர்பார்ப்புகள் தைக்கப்பட்டிருக்கின்றன. மனிதனும் ஒரு பாலூட்டி விலங்குதானே! ஆக, ‘என்னிடம் இருப்பது வலிமையுள்ள மரபணு’ என்றும் ‘நான் ஒரு கனிவான தாய்’ என்றும் ஆணும் பெண்ணும் தன்னையறியாமல் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.

உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான இந்த பலவீனத்தை நம்மில் பலரும் அறிந்திருக்கிறார்கள்... அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். இத்தனை காலமாய் நம் ஊரில்
‘கடன் வேண்டுமா’, ‘கிரெடிட் கார்டு வேண்டுமா’ என நேரங்கெட்ட நேரத்தில் வரும் போன் கால்களில் மட்டும் ஆண் குரல் பேசியிருந்தால், இந்நேரம் இதனால் கொலையே விழுந்திருக்கும். பெண் குரல், ஆணின் கோபத்தைத் தணிக்கிறது. ஆண் குரல், பெண்ணின் கோபத்தைத் தணிக்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொனால்டு ஜி டட்டன் என்பவரும் ஆர்தர் பி ஆரோன் என்பவரும் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். அதன்படி, நிலையில்லாமல் ஆடிக் கொண்டிருக்கிற ஒரு தொங்கு பாலத்தின் மேல் பயத்தோடு நடந்து வரும் ஆண் பாதசாரிகளிடம் ஒரு அழகான பெண் நிருபரை கேள்விகள் கேட்கச் சொன்னார்கள். பயமே இல்லாத சாதாரண சாலை ஓரத்திலும் அதே கேள்விகளை ஆண்களிடம் கேட்டாள் அந்தப் பெண்.

ஆபத்தான பாலத்திலிருந்து பதிலளித்த ஆண்கள், தாங்கள் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அதிகம் செக்ஸியாக பதில் தந்திருந்தார்கள். கேள்விகள் முடிந்த பின் அந்த பெண் நிருபரின் தொலைபேசி எண்ணைப் பெறவும் அவர்கள்தான் ஆர்வம் காட்டினார்கள். ஆபத்தான காலகட்டங்களில் ஒரு ஆணின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகரித்து, பெண்களின் மீதான இச்சையைத் தூண்டுகிறது. ஆபத்திலிருந்து பெண்களைக் காப்பாற்றும் ஹீரோயிச வேலையிலும் ஒரு ஆணை அதுதான் ஈடுபடுத்துகிறது என்பது இதில் தெளிவானது. ஆக, பெரும்பாலும் இயற்கை, ஆண் - பெண் ஈர்ப்பை இப்படி நல்ல விஷயங்களுக்காகத்தான் விதைத்திருக்கிறது!’’ என்றார் அவர்.

ஆண் பெண் ஈர்ப்பில் யாரும் கணக்குப் போட்டு காரியத்தில் இறங்குவதில்லை... இயற்கையாய் நடக்கிறது என்கிறார்கள். அப்படியெனில், நவீன கால ஆண்-பெண் ஈர்ப்பில் பணம் எந்த அளவு பங்கு வகிக்கிறது. அதிக டௌரியோடு வரும் மணப்பெண், ஆண்களின் பாலியல் இச்சையை மாற்றுவாளா? விலை உயர்ந்த காரில் வரும் ஒரு ஆண், வேடிக்கை பார்க்கும் பெண்களிடையே போட்டியை ஏற்படுத்துவானா? இது பக்கா கால்குலேஷன்தானே?
-தேடுவோம்...

மச்சி,
இன்னிக்கு அந்த மூணாவது செக்ஷன்
பச்ச சுடிதாருக்கு முகம் வாடியிருக்கு, வீட்ல ஏதும் பிரச்னையோ?

படுபாவி!
இந்த நிலைமையில வந்திருக்கேன்.
காலையில இருந்து என்னைத் திரும்பியாச்சும்
பார்த்தியாடா நீ?

நீங்கள் யார்?

நீங்கள் எதையும் உங்களுக்காக மட்டும் சிந்திப்பவரா? அல்லது அடுத்தவருக்காக சிந்திக்கும் பொதுநல வாதியா? தெரிந்துகொள்ள உதவும் டெஸ்ட் இது. ஒன்றுமில்லை... எந்தக் கையில் நீங்கள் எழுதுவீர்களோ அந்தக் கையின் ஆள்காட்டி விரலால் உங்கள் நெற்றி மீது னி என்ற எழுத்தை எழுதுங்கள். இயல்பாக அதை எந்தக் கோணத்தில் எப்படி எழுதுகிறீர்கள் எனக் குறித்துக் கொண்டு, உங்களை அறிய திருப்பிப் படியுங்கள்!

னி என்ற எழுத்தை இரண்டு விதமாக எழுதலாம்... நீங்கள் எழுதியது எப்படி?

இப்படி எழுதியிருந்தால், நீங்கள் அதிகம் பொதுநல குணம் இல்லாதவர். எதையும் உங்கள் கோணத்தில் இருந்து மட்டுமே பார்த்துப் பழகியவர். அத்தனை சீக்கிரம் யாரிடமும் ஏமாற மாட்டீர்கள்.

இப்படி எழுதியிருந்தால், நீங்கள் பொதுநலவாதி. கொஞ்சம் ஏமாளி என்றும் பெயர் வாங்கியிருப்பீர்கள். அடுத்தவரின் நிலையையும் குணத்தையும் அவரது கோணத்திலேயே பார்த்துப் புரிந்துகொள்வீர்கள். அதிகம் பரிதாபப்படுவீர்கள்.

கோகுலவாச நவநீதன்