ஆசிட்



‘என்னைக் காதலிக்க மாட்டாளாமே! என்ன திமிர். இந்த அழகு இருப்பதால்தானே என்னை மறுக்கிறாள்? அவளைக் குரூபியாக்கி விடுகிறேன். அதற்குப் பிறகு அவளை யார் மணக்கிறான் என்று பார்க்கிறேன்.

தினம் தினம் அவள் என்னை மறுத்ததை நினைத்து வேதனையில் சாக வேண்டும்’  மனதுக்குள் வன்மம் வெடிக்கக் கருவினான் அவன்.அதற்கு அவன் கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலும் ஆதரவு தெரிவித்தது.

மக்கள் நடமாட்டம் சுத்தமாக இல்லாத அந்த குறுக்குத் தெருவில் அவள் வழக்கமாக வரும் திசைக்கு எதிர்த்திசையில் அவன் நுழைந்தான். தூரத்திலிருந்தே தன்னைப் பார்த்துவிட்டு அவள் கேலியாக சிரித்ததைக் கண்டான். ‘இருடி. இன்னும் ரெண்டு நிமிஷம்தான்... அப்புறம் நீ வாழ்நாள்ல சிரிக்கவே முடியாது!’

அவளை நெருங்கியதும் ஆசிட் பாட்டிலை மேலே தூக்கி, மூடியைத் திறந்து அவள் முகம் நோக்கி வீச முற்பட்டான். எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று, அந்த பாட்டிலை ஏதோ தின்பண்டம் என்று நினைத்தது போலிருக்கிறது, பளிச்சென்று அவனுடைய கையைக் கொத்தி பறிக்க முயன்றது. பதற்றத்தில் அவன் கையிலிருந்து பாட்டில் நழுவ, உள்ளிருந்த ஆசிட் அவனுடைய தலை, முகம், மார்பு, வயிறு இன்னும் கீழே என ஆவி பறக்கக் கொட்டி வழிந்தோடியது.         

பிரபுசங்கர்