மனக்குறை நீக்கும் மகான்கள்




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
அப்புறம் என்ன?
மறுநொடி மறைத்து வைத்திருக்கும் மகா ரகசியம் அது.
இதுதான் நடக்கும் என்று எதைச் சொன்னாலும் அது யூகம்தான்.
சொன்னது நடக்கலாம். அல்லது வேறுஏதேனும் நிகழலாம்.
ஆக, அடுத்து என்ன என்பதைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் இருப்பது ஒரு உன்னத நிலை. இது சாத்தியமா?

சாத்தியம். யாருக்கு?

‘எல்லாம் அவன் செயல்’ என ஒற்றை விரலால் மேலே சுட்டிவிட்டு நடப்பதை வெறுமனே பார்வையாளனாக இருந்து பார்க்கப் பக்குவப்பட்ட மனதிற்கு. அப்படியொரு மனநிலையில் இருந்தார் பாம்பன் சுவாமிகள். ‘எனக்காக என் முருகன் இருக்கிறான்’ என்கிற தீவிரத்தில் நின்றார். ‘குயவன்பேட்டை போ’ என்ற உத்தரவு வந்த வினாடியில், ‘யாரை அனுப்பி வைத்திருக்கிறாய் முருகா?’ என உள்ளே பேச ஆரம்பித்திருந்தார். முருக சுகந்தத்தில் கரைந்து கொண்டிருந்த அவரைச் சீண்டிச் சிரித்தான் சிவன்மகன். ‘‘அனுப்பிவிட்டேனே...’’ என அழகு காட்டினான்.

நீண்ட கேசம். ஏறிய நெற்றி. அதில் அழகாய் துலங்கும் நீறு. கருணை வழியும் கண்கள். அதன் தீட்சண்யமான பார்வை. சாந்தமான முகம். கூர்மையான நாசி. சீரான சுவாசம் என யோகிக்கான அத்தனை லட்சணங்களுடன் அமர்ந்திருக்கும் அவரைப் பார்த்தவுடன் ராஜா முத்துகிருஷ்ண நாயுடுவின் மனதுள் ஏதோ உடைந்து உருண்டது. இருண்ட குகைக்குள் பாதை தெரியாது தவிக்கும் ஒருவன், தட்டுத் தடுமாறி ஒரு கல்லைப் புரட்டிப் போட, சூரியனின் ஒளிக்கீற்று வெள்ளமாய் பாய்ந்தால் எப்படி ஒரு மகிழ்ச்சி இருக்குமோ அப்படி ஒரு சந்தோஷம் அவர் மனதுள் பூத்தது.

‘அடடா... இவரைப் பார்த்தவுடனே வணங்க வேண்டும் என்று தோன்றுகிறதே... நீங்கள்தான் என்னைக் கரை சேர்க்க வேண்டும் என காலைப் பிடித்துக் கொண்டு கதற வேண்டும் என மனசு துடிக்கிறதே... நிச்சயம் இவருக்கும் எனக்கும் ஏதோ இருக்கிறது. ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாரே... அருகில் சென்று பேசினால் தொந்தரவாகி விடுமோ என்று ஒருவித அச்சம் நாயுடுவைத் தடுத்தது.அச்சத்தை ஆவல் வெற்றி கொண்டது.

தோளில் கிடந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டார். ஒரு பேரரசனை எதிர்கொள்ளும் பவ்யத்துடன் அவர் முன்னே சென்று விழுந்து வணங்கினார்.தம் பாதமருகே விழுந்த பக்தனைப் பரிவோடு பார்த்தார்.

 ‘என் முருகன் உன்னைக் காக்கட்டும்’ என ஆசியாய் சொன்னார்.‘‘அடியேன் ராஜா முத்துகிருஷ்ண நாயுடு. குயவன்பேட்டை வாசி. தங்களைப் பார்க்கும்போதே மனசு அமைதியில் திளைக்கிறது. உங்கள் அருகிலேயே அமர்ந்து கிடக்க வேண்டும் என்கிற ஆவல் பொங்குகிறது. தயவுசெய்து என் இல்லத்திற்கு வந்தருள வேண்டும்’’ என்று கோரினார்.

பாம்பன் சுவாமிகள் முருகனின் கருணையை எண்ணி சிலிர்த்துக்கொண்டார். குயவன்பேட்டை எப்படிச் செல்வது என்று யோசித்தபோதே ஆள் அனுப்பிய அன்பு திகைக்க வைத்தது. அப்போது அங்கு சாரலாய் பொங்கிய அந்த ரம்மியமான வாசனை ‘‘நானிருக்கிறேன் குமரகுருதாசா...’’ என நெஞ்சு நிறைய பரவிச் சொன்னது.

ஆழ உள்ளிழுத்தார். ஒரு பேரானந்தம் உடல் முழுக்கப் பரவியது. நறுமண மூச்சை வெளியே விடவே மனமில்லாது நிறுத்தி வைத்தார். குகன் இதழ் பிரிக்காது சிரித்தான். ‘ம்ம்ம்... போ’ என்றான்.

‘‘வருகிறேனப்பா!’’ என்று ஒற்றை வார்த்தை உதிர்த்தவரை வினோதமாக பார்த்தார் முத்து கிருஷ்ண நாயுடு.வீட்டிற்கு வந்தவரை வரவேற்ற குடும்பத்தார், அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார்கள்.

அவருக்கென ஒரு அறையை ஒதுக்கித் தந்தார்கள். அவர் செய்ய வேண்டிய பணிகளை காதோடு சொன்னான் முருகன். ‘உத்தரவு’ என ஏற்றுக் கொண்டவர், மனதில் மலர்ந்ததை எழுதத் தொடங்கினார்.

‘பரிபூரணானந்த போதம்’ மலர்ந்தது. இதில் 115 பாடல்கள் பதிபசுபாச யதார்த்த விளக்கப் படலமாக அமைந்தன. 102 பாடல்கள் துறவறம் பற்றிப் பேசின. மொத்தம் இதில் 230 பாக்கள் ரத்தினங்களாய் ஜொலித்தன. குருவுக்கும் சீடனுக்கும் நடுவே நடக்கும் உரையாடலாய், கேள்விபதில் வடிவில் அமைந்துள்ளன. அந்தப் பாடல்கள் சைவ சித்தாந்தத்தின் உச்சம் சொன்னது. பாம்பன் சுவாமிகள் ‘பரிபூரணானந்த போதம்’ பாடி முடித்தது, துர்முகி ஆண்டு (1896) ஐப்பசி மாதம், விஜயதசமி பொன்னாள். 

அதே ஐப்பசி மாதத்தில் ‘கந்தர் ஒலியல் அந்தாதி’ என்கிற உபநிஷத சாரமான பெரும் படைப்பையும் தந்தார். இதை அந்த மாத கந்த சஷ்டி வைபவத்தின்போது பாடியும் காட்டினார்.
அதே ஆண்டு மார்கழி மாதத்தில் ‘தகராலய ரகசியம்’ எனும் தமிழ் மறையைத் தந்தார். 117 பாடல்களைக் கொண்ட இந்த நூல், முருகப் பெருமான் சுவாமிகளுக்கு வழங்கிய உபதேசத்தின் சாரமாய் அமைந்தது.

ஞானத்தேன் அவருள் சுரந்துகொண்டே இருக்க, கார்த்திகை மாதம் ‘குகப்பிரம்ம அருட்பத்து’ பிறந்தது. குயவன்பேட்டையில் இது எல்லாம் மலர்ந்து மணம் வீசிய தருணத்தில், 18 மாதங்கள் ஓடி இருந்தன. இந்த மாதங்களில் சுவாமிகள் வாய் விட்டுப் பேசியது மிகக் குறைவு.

எழுதியதும் யோசித்ததும் மனதோடு மனதாக குகனோடு பேசியதும் அதிகம். அடுத்து என்ன என்கிற யோசனை தோன்றியபோதே வேதம், வேதாந்தம், உபநிஷதம், ஆகமம், சித்தாந்தம், திருமுறைகள் என அனைத்திலும் கூறப்பட்டுள்ள சாரங்களை ஒன்றாக்கி, ‘திருப்பா’ என ஒரு அமுதத்தை அளிக்க அரன் மகன் ஆணை பிறப்பித்தான். ஆரம்பித்த குறுகிய நாட்களுக்குள் 58 பாடல்களை எழுதி முடித்திருந்தார். அப்போது கும்பகோணத்தில் மகாமக விழா ஆரம்பமானது. சுவாமிகள் அதில் பங்கேற்க ஆவல் கொண்டார்.

குடந்தை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பாரத தேசத்தின் நான்கு முனையிலிருந்தும் மக்கள், துறவிகளின் படையெடுப்பு அந்த மண்ணைக் காவியாக்கி இருந்தது. குடந்தை குதூகலத்தால் நிரம்பி வழிந்தது. ராஜா முத்துகிருஷ்ண நாயுடு, திருவேட்களம் முத்துக்குமார சுவாமி, வரகூர் ஆறுமுக பத்தர் மற்றும் தம் சுவாசத்தோடு கலந்து வரும் முருகனோடு கும்பகோணம் வந்தார் பாம்பன் சுவாமிகள்.

அப்போது பாம்பன் சுவாமிகள் கையில் கொண்டு வந்தது ஒரு சாக்குப் பை. அதில் அவர் எழுதிய 58 திருப்பா பாடல் பிரதிகள், ருத்திராட்ச கண்டிகை, மாற்று உடை, விபூதிப் பை ஆகியவைதான் இருந்தன. முத்துகிருஷ்ண நாயுடுவுக்குத் தெரிந்த நண்பர் வீட்டில் தங்கினார்கள். மறுநாள் அதிகாலை பாம்பன் சுவாமிகள் தன் சீடர்களோடு மகாமக குளத்திற்குச் சென்று நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் முடித்துத் திரும்பியபோது ஒரு தெருவில் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்கள்.

கூட்ட நெரிசல் சுவாமிகளை திக்குமுக்காட வைத்தது. என்னால் இனி ஏதுமாகாது எனத் தடுமாறிய சுவாமிகள், ‘‘முருகா... குகனே...’’ என அழைக்க, துளிப் பொழுதில் கூட்டம் ஈயாய்ப் பறந்தது. ‘முருகா நன்றி... குகனே நன்றி’ என மனம் நெகிழ்ந்தார். மெல்ல நடந்து அன்பரின் வீடு வந்து சேர்ந்தார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கசக்கி வீசிய காகிதம் போல ராஜா முத்து
கிருஷ்ண நாயுடுவும் திருவேட்களம் முத்துக்குமார சுவாமியும் வந்தார்கள். ‘‘ஆறுமுக பத்தர் எங்கே?’’ என சுவாமி கேட்டார்.

மார்பில் அணைத்த சாக்குப் பையோடு வந்தார் ஆறுமுக பத்தர். உள்ளே வந்தவர் அங்கிருந்த பையோடு சேர்த்து இந்தப் பையையும் வைத்தார். கூட்டத்தில் தப்பி வந்த சாகசம் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

குடந்தையிலிருந்து புறப்பட்டவர்கள், சுவாமிமலை வந்து சுவாமிநாதனை வணங்கி பின் சிதம்பரம் திரும்பினர். ஊர் திரும்பியவர் பாடலை எழுதலாம் என பையைக் கொண்டு வரச் சொன்னார். பிரித்தால் உள்ளே குங்குமச் சிமிழ், கண்ணாடி, பெண்களின் உடமைகள்... இத்யாதி, இத்யாதிகள்.

கும்பகோணம் அன்பரின் வீட்டில் யாரோ பையை மாற்றி எடுத்துச் சென்றிருந்தார்கள். சுவாமிகள் கோபத்தின் உச்சிக்கே செல்ல, ஆறுமுக பத்தர் பயந்து போய், சுவாமிகள் இருக்கும் வீட்டின் பக்கம் வருவதையே தவிர்த்தார்.

இதுவும் முருகனின் திருவிளை யாட்டு என மனதைத் தேற்றிக்கொண்டு 58 பாடல்களையும் திரும்ப எழுதினார்.இதற்கு நடுவே சுவாமிகளின் பையை எடுத்துச் சென்றவர் சுவாமிகளின் பொருட்களை எல்லாம் பார்த்துவிட்டு பதறியடித்துக் கொண்டு சுவாமிகளின் இருப்பிடம் தேடி வந்து கொடுத்து மன்னிப்பு கோரினார்.

பை தொலைந்ததற்கு ஆறுமுக பத்தர் காரணமல்ல என உணர்ந்து அவரை அழைத்து வரச் சொல்லி ஆற்றுப்படுத்தினார் பாம்பன் சுவாமிகள். பிறகு தம் நினைவில் இருந்து மீண்டும் எழுதிய திருப்பாக்களையும் முன்பு எழுதியதையும் ஒப்பிட்டுப் பார்க்கச் சொன்னார்.என்ன ஆச்சர்யம்... ஒரு வார்த்தை கூட மாறாது திரும்ப எழுதியிருந்தார்! கந்தனுக்கு நன்றி சொன்னபோது முருகன் அவர் காதில், ‘இது 1101 பாடலாக மலரும். சத்தியத்தையே இது சொல்லும்’ என்றான்.

அப்படியே மலர்ந்தது திருப்பா! அப்போது அவர் மனதுள் மாணிக்கேசவபுரம் தோன்றியது. ‘ஒரு முறை வந்து போக முடியுமா’ எனக் கேட்டது. பாம்பன் சுவாமிகள் முருகனைப் பார்த்தார். பதில் சொல்லாமல் மௌனம் காத்தான் முருகன்!

பாம்பன் சுவாமிகள் தரிசனம்

திருப்பரங்குன்றம்

மதுரைகன்னியாகுமரி சாலையில், மதுரையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். இங்குள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வேண்டும் வரம் பெற்று மகிழ்கிறார்கள். நீங்களும் தரிசித்து நலம் பெறலாம்.முகவரி: பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருக்கோயில், பாம்பன் நகர், அவனியாபுரம் சாலை, முருகன் திருக்கோயில் அருகில், திருப்பரங்குன்றம்  625 005.

குடும்பத்தைக் காத்த குருவருள்

‘‘அது 2004, டிசம்பர் மாதம். குடும்பத்தோடு கன்னியாகுமரி சென்றிருந்தோம். அதிகாலை சூரியோதயத்தை ரசித்த நாங்கள், விவேகானந்தர் பாறைக்குச் செல்ல டிக்கெட் வாங்குவதற்குக் காத்திருந்தோம். என் மகனுக்கு சின்ன வயதிலிருந்தே கடல் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் திடீரென அவன் ‘போட்டிங் வேண்டாம். நான் கடலுக்கு வரல’ என்றான். என் அண்ணனும் ‘கடல் வேண்டாம், போகலாம்’ என்றார்.

எனக்கு இருவரது பேச்சும் வினோதமாக இருந்தது. நாங்கள் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் சுனாமி வந்து பல உயிரை பலி வாங்கிய அதிர்ச்சி செய்தி எங்களுக்கு எட்டியது. இன்று நாங்கள் உயிரோடு இருப்பதற்கு பாம்பன் சுவாமிகளின் கருணைதான் காரணம். அவர்தான் எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்’’ என நெகிழ்கிறார்கள் ஸ்ரீதரன்மீனாட்சி தம்பதி. இவர்கள் நெய்வேலியில் வசிக்கிறார்கள்.

கவலை நீக்கும் மந்திரம்

அரணத் திறையோ னையனா ரதமேன்
கரணத் தெணுவார் கவனூ றிடுவான்
முரணிற் பொருசூ ரனொடே முனைவோன்
சரணச் சுகவீ ரமகே சனரோ.

பாம்பன் சுவாமிகள் அருளிய, ‘நவரத்தினக் கலிவிருத்தப் பாடலில்’ உள்ள இந்த ‘வீரமகேசதேவர் துதி’யை தினமும் பாட, மனக்கவலை மறைந்து ஆனந்தம் பெருகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

(ஒளி பரவும்)

படம்: பாலமுத்துகிருஷ்ணன்

எஸ்.ஆர்.செந்தில்குமார்