நரை



‘‘அப்பா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வர்றாங்க. இன்னிக்காவது தலைக்கு டை அடிச்சிக்குங்கப்பா! உங்களுக்கு வயசு அதிகமா தெரிஞ்சா எனக்கு வெக்கமாத்தானே இருக்கும்!’’  அப்பாவை வற்புறுத்தினான் கார்த்திக்.‘‘வயசாகுறதை மறைக்கக் கூடாதுப்பா. வாலிபப் பருவத்திற்கு மீசை எப்படி கம்பீர அடையாளமோ, அப்படித்தான் வயோதிகத்திற்கு நரை முடியும்.

இந்த நரை முடிக்கு ஏகப்பட்ட ப்ளஸ் பாயின்ட் இருக்கு. எனக்கு வயசாகுறதுக்கு இதுதான் வெளிப்படையான சான்று. வயசானவன்கிற மரியாதையில, எங்க ஆபீஸ் மேனேஜர் கூட மத்தவங்க முன்னாடி என்னை கடிஞ்சுக்கறதில்லை. நரைமுடிக்கு மரியாதை கொடுத்து, சில சமயம் யோசனை கூட கேக்கறாங்க.

பஸ், ரயில்ல போகும்போது கூட வயசானவன்னு சிலர் உட்கார இடம் கொடுக்கிறாங்க. நம்ம வீட்டு அக்கம்பக்கத்தில் இருக்கிற குழந்தைகளும், என்னை ‘தாத்தா... தாத்தா...’ன்னு
வாய் நிறைய கூப்பிட இந்த நரைமுடிதான் காரணம். நீ கல்யாணத்தை தள்ளிப் போடறதால, அந்தப் பிள்ளைங்க ‘தாத்தா’ன்னு கூப்பிடுறது எனக்கு மனநிறைவா இருக்கு!’’ உருக்கமாய் பேசினார் அப்பா.‘‘நான் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறேன்பா...’’ அப்பாவின் ஆதங்கத்தையும், தன் தவறையும் உணர்ந்து பதில் சொன்னான் கார்த்திக்.
        
எஸ்.ராமன்