சகுனியின் தாயம்



‘‘என்ன திடுதிடுப்புன்னு வந்துட்டீங்க?’’
தங்கப்பனின் குரல் கேட்டு திரும்பாமல்
 புன்னகைத்தார் வால்டர் ஏகாம்பரம்.
‘‘ஏன் வரக்கூடாதா?’’
‘‘அப்படீன்னு நான் எங்க சொன்னேன்?
திட்டப்படி நாளைக்குத்தானே நீங்க வரணும்...’’

அருகில் அமர்ந்தான்.
‘‘கொஞ்சம் அவசரம்...’’
‘‘அதானே? இல்லைனா ஏன் காட்டுக்கு
வரப்போறீங்க?’’
‘‘நீ இங்க வந்தது..?’’

‘‘இளவரசனுக்கோ திவ்யாவுக்கோ தெரியாது. ரெண்டு பேர்
நடமாட்டத்தையும் ஆளுங்க கண்காணிச்சுட்டு இருக்காங்க...’’
‘‘ஸ்காட் வில்லியம்ஸ் எப்படியிருக்கான்?’’
‘‘அந்த வெள்ளைக்காரன்தானே? முதல்ல பயந்தான்.
 ஜாடை காட்டினேன். புரிஞ்சுட்டு அமைதியாகிட்டான்...’’
‘‘சரி. உடனடியா நீ களத்துல இறங்கணும்...’’

‘‘வாய்ப்பில்லை...’’
‘‘தங்கப்பா...’’
‘‘பின்ன என்ன சார். இன்னும் பணம் கைக்கு வரலையே...’’
‘‘என் மேல நம்பிக்கை இல்லையா?’’
‘‘இல்லை...’’

பட்டென்று பதில் சொன்னவனை பார்வையால் எரித்தார். ‘‘என் நிலைல இருந்தா நீங்களும் இப்படித்தான் பதில் சொல்லியிருப்பீங்க...’’ தங்கப்பன் முணுமுணுத்தான். ‘‘நிறைய பேருக்கு நான் பதில் சொல்லணும். பங்கு பிரிக்கணும்...’’‘‘புரியுது...’’ பற்களை கடித்த வால்டர் ஏகாம்பரம் தொண்டையைக் கனைத்தார்.அடுத்த விநாடி புதர் மறைவிலிருந்து ஓர் ஆள் வெளிப்பட்டான். அவன் கையில் லெதர் பை ஒன்று இருந்தது. ஒட்ட வெட்டிய கேசமும், கை பனியனுக்குள் திரண்டிருந்த புஜங்களும் அவன் யார் என்பதை நிரூபித்தன. எடுத்து வந்த பையை அவரிடம் கொடுத்துவிட்டு பழையபடி மறைந்தான்.

‘‘தனியாதானே வரச் சொன்னேன். ஸ்கெட்ச் போடறீங்களா?’’

‘‘ஆமா. எனக்கு நீ போட்டிருக்கா மாதிரி. என்ன முழிக்கறே? உன் ஆட்கள் எப்படி புதர்ல மறைஞ்சிருக்காங்களோ அப்படி அதிரடிப்படையும் துப்பாக்கியோட நிக்கறாங்க...’’
தங்கப்பன் அவரை உற்றுப் பார்த்தான்.‘‘உன்னை நான் தப்பு சொல்லலை. அதே மாதிரி என்னையும் தவறா நினைக்காத. சூழல் அப்படி. இந்தா. எண்ணிப் பார்த்துக்க...’’ பையை கொடுத்தார்.

‘‘அவசியமில்ல. இந்த விஷயத்துல நீங்க ஏமாற்ற மாட்டீங்கன்னு தெரியும்...’’ வாங்கினவன் புருவத்தை உயர்த்தினான். ‘‘எடை கூடியிருக்கு?’’
‘‘ம். கேட்டதுக்கு மேல அஞ்சு அதிகம்...’’

‘‘காரணம்..?’’
‘‘ப்ளான் மாறிடுச்சு...’’ அவனருகில் குனிந்தவர் மடமடவென்று எதையோ முணு
முணுத்தார்.
‘‘இதுக்கு அஞ்சு கம்மியாச்சே...’’
‘‘இன்னும் நீ திருந்தவேயில்லை...’’
‘‘நீங்களும்தான்...’’

முறைத்தார்.‘‘அட என்ன சார். ஜோக் சொன்னா சிரிக்கணும்...’’
‘‘சரி. சிரிச்சுட்டேன். காரியத்துல எப்ப இறங்கற?’’
‘‘இப்ப...’’

‘‘ரைட். ரெண்டு மணி நேரம் பொறுத்து நான் அட்டாக் பண்ணறேன்...’’விடைபெற்றுக் கொண்டு இருவரும் பிரிந்தார்கள்.வந்த வழியே தங்கப்பன் திரும்பினான். சரசரவென ஏதோ புதருக்குள் மறையும் சத்தம் கேட்டது. உஷாரானவன் பையை தோளில் மாட்டியபடி கைத்துப்பாக்கியை எடுத்தான். புதர் பக்கம் சென்றான். ‘பட் பட் பட்’ மூன்று முறை சுட்டான். சலனமில்லை.

உதட்டை சுழித்துவிட்டு மலை மேல் ஏறி தன் இடத்தை அடைந்தவன் சுற்றிலும் பார்த்தான்.
‘‘எங்கே இளவரசனையும் திவ்யாவையும் காணும்?’’‘‘நீ வரச்சொன்னதா சொல்லிட்டுத்தானே கீழ இறங்கினாங்க...’’ இன்னொரு மீசைக்காரன் சொன்னான்.
‘‘எப்ப?’’

‘‘பத்து நிமிஷத்துக்கு முன்னாடி. பணத்தை நீ வாங்கிட்டதாவும் அந்த வெள்ளைக்காரனை கூட்டிட்டு வரச் சொன்னதாவும் அந்தப் பொண்ணு சொல்லிச்சு...’’
‘‘யாரு திவ்யாவா?’’ ‘‘ஆமா. உன் கூட அதுவும்தானே கீழ இறங்கிச்சு...’’

சட்டென்று தங்கப்பன் நிமிர்ந்தான். அவன் கண்கள் தீப்பிழம்பானது. ‘‘உடனே அவங்க மூணு பேரையும் பிடிங்க. குறிப்பா அந்த வெள்ளைக்காரன். அவன் உயிரோட வேணும்...’’ கத்தினான்.
அதே நேரம் வியர்வை வடியும் முகத்துடன் கதிரின் வீட்டுக்குள் தமிழரசன் நுழைந்தார்.அவரைப் பார்த்ததுமே சொம்பு நிறைய தண்ணீருடன் தேன்மொழி வந்தாள்.
‘‘நன்றி தோழர்...’’ வாங்கி குடித்தவர், தன் கையால் வாயை துடைத்துக் கொண்டார்.

ரங்கராஜனும் கதிரும் நிமிர்ந்தார்கள். தங்கள் கையிலிருந்த சிவப்பு அட்டை போட்ட புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அருகில் வந்தார்கள். ‘‘தோழர்... என்னனு தெரிஞ்சுடுச்சா?’’
‘‘ம். வால்டர் ஏகாம்பரத்தோட திட்டம் இதுதான்...’’ என்றபடி தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து தரையில் விரித்தார் தமிழரசன்.முழங்கை அளவுக்கு கொம்புகளை கொண்ட ஆட்டின் உருவம் அதில் வரையப்பட்டிருந்தது. அதுவும் பென்சிலால்.

‘‘இது எந்த நாட்டின் கொடி கிருஷ்ணா? இதற்கு முன் நான் பார்த்ததில்லையே?’’ ஆச்சர்யத்துடன் கேட்டபடி அர்ஜுனன் அருகில் வந்தான். தங்க முலாம் பூசப்பட்ட இரும்புக் கம்பு. அதன் நுனியில் முடிச்சிடப்பட்டிருந்த வெண் பட்டு காற்றின் தன்மைக்கு ஏற்ப படபடத்துக் கொண்டிருந்தது. வியப்பை அளித்தது அதில் அரக்கினால் தீட்டப்பட்டிருந்த உருவம்தான். முழங்கை அளவுக்கு கொம்புகளை கொண்ட ஆடு.

‘‘ஐம்பத்தியாறு தேசங்களில் எந்த தேசத்தை சேர்ந்தது?’’ வெண்பட்டை தன் கரங்களில் பிடித்தபடி மீண்டும் அதே வினாவை தொடுத்தான்.
‘‘இது எந்த தேசத்தின் கொடியும் அல்ல அர்ஜுனா...’’ சொன்ன கிருஷ்ணர் மீண்டும் அந்த உருவத்தையே உற்றுப் பார்த்தார்.
‘‘அப்படியானால்?’’

‘‘உருவாகவிருக்கும் தேசத்தின் கொடி...’’
‘‘புரியவில்லையே?’’

அர்ஜுனனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை பார்த்து பகவான் புன்னகைத்தார்.
‘‘உன்னுடன் நான் இருக்கும்போது ஏன் அஞ்சுகிறாய்?’’
‘‘அச்சப்பட நான் ஒன்றும் கோழையல்ல...’’

‘‘அப்படி மறைமுகமாகவும் நான் குறிப்பிடவில்லை. விவரம் கேட்டாய். விடையளித்தேன். அவ்வளவுதான்...’’

‘‘அது புரியவில்லை என்று நான் சொன்னால்..?’’‘‘தெளிவுபடுத்தும் கடமை எனக்கிருக்கிறது...’’ வாய்விட்டு நகைத்த பகவான் சட்டென்று அமைதியாகி மீண்டும் அந்தக் கொடியையே ஆராய்ந்தார்.கணங்கள் உருண்டோட கிருஷ்ணரையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுனன்.

அஸ்வினி நட்சத்திரங்கள் தலைக்கு மேல் வந்த பிறகு பகவான் நிமிர்ந்தார். ‘‘அர்ஜுனா, குரு வம்சத்தின் பிரதான எதிரி யார் தெரியுமா? இந்தக் கொடியை வடிவமைத்தவன். அவன் உருவாக்கியிருக்கும் ரகசிய குழுவின் இலச்சினை இந்த ஆட்டு உருவம்தான். சங்கேத மொழியில் தங்களுக்குள் உரையாடவும், தகவல்களை பரிமாறவும் இந்த உருவத்தைத்தான் அடையாளமாக பயன்படுத்துகிறார்கள்...’’ ‘‘அவர்களது நோக்கம் என்ன?’’

‘‘வேறென்ன? பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் பகையை வளர்ப்பதுதான்...’’‘‘இதன் மூலம் அவர்கள் எதை அடைய நினைக்கிறார்கள்?’’
‘‘குரு வம்சத்தின் அழிவை...’’‘‘கிருஷ்ணா...’’

‘‘குரலை உயர்த்தாதே அர்ஜுனா! முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட இந்த ஆடும், இந்த ஆட்டுக்குப் பின்னால் இருக்கும் குழுவும் சர்வ இடங்களிலும் வியாபித்திருக்கிறது...’’
‘‘உன்னைப் போலவா?’’

‘‘இல்லை என்று மறுத்தால் அது அவர்களை குறைத்து எடை போட்டது போல் ஆகும். ஒன்றை மட்டும் நினைவில் கொள். சிதறியிருக்கும் ஐம்பத்தியாறு தேசங்களையும் பாண்டவர்களின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வருவது எப்படி என் கனவோ, அப்படி அந்த ரகசிய குழுவுக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது...’’‘‘அது என்ன?’’

‘‘புதியதோர் உலகம்...’’
அர்ஜுனன் சட்டென்று நிமிர்ந்தான். தோளில் கைபோட்டபடி அவனை அமைதிப்படுத்திய பகவான், ‘‘அமைதியாக இரு. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்...’’ என்றார்.
‘‘இந்த ரகசியக் குழுவுக்கு அஸ்திரப் பயிற்சி அளிக்கப்படுகிறதா?’’

‘‘சகல யுத்த நுணுக்கங்களும் கற்றுத் தரப்படுகின்றன...’’‘‘இந்தக் குழுவின் தலைவன் யார்?’’‘‘அதாவது இந்தக் கொடியை வடிவமைத்தவன் யாரென்று கேட்கிறாய். அப்படித்தானே?’’
‘‘ஆம்...’’

‘‘சரியான சந்தர்ப்பத்தில் நானே அவன் யாரென்று சொல்கிறேன். அதுவரை அமைதியாக இரு. உன் சகோதரர்களிடமும் கூட இது குறித்து மூச்சு விடாதே. வா. ஆதூரச் சாலையில் நமக்கு வேலையிருக்கிறது...’’அர்ஜுனனுடன் உள்ளே நுழைந்த பகவான், நேராக வலப்பக்க மூலைக்கு சென்றார். அங்கு வைக்கோலால் மூடப்பட்டிருந்த மூங்கில் படுக்கையில் ஒரு மனிதன் படுத்திருந்தான். ‘‘கிருஷ்ணா... யார் இவன்?’’

எந்த பதிலையும் சொல்லாமல் அந்த மனிதனின் கால்களை கிருஷ்ணர் ஆராய்ந்தார். குருதி பெருகிக் கொண்டிருந்தது.‘‘எவ்வளவோ முயற்சித்தும் ரத்தம் வடிவதை நிறுத்த முடியவில்லை...’’ மூலிகைச் சாற்றை கையில் ஏந்தியபடி அங்கிருந்த மருத்துவர் முணுமுணுத்தார்.‘‘அதை நான் பார்த்துக் கொள்கிறேன். மயக்க மருந்தை புகட்டி விட்டீர்களா?’’

‘‘ஒரு நாழிகைக்கு முன்பே அவன் நாசியில் மூன்று துளி சாற்றை விட்டுவிட்டேன்...’’
‘‘நல்லது. அந்த குறுவாளை இப்படி கொடுங்கள்...’’

தீயில் காய்ச்சிய குறுவாளை கிருஷ்ணரிடம் கொடுத்தார் மருத்துவர்.
அதை வாங்கிய பகவான், கணமும் யோசிக்காமல் அவன் தொடைப் பகுதியை அறுத்தார். இடது கால் கையோடு வந்தது.அதை அர்ஜுனனின் முகத்துக்கு நேராக உயர்த்திப் பிடித்தார்.

‘‘இது என்னவென்று தெரிகிறதா?’’
‘இதென்ன கேள்வி’ என்பது போல் அவரைப் பார்த்தவன், கண்களை விரித்தான். காரணமில்லாமல் பகவான் இந்த வினாவை எழுப்ப மாட்டாரே...
‘‘இந்த மனிதனின் இடது கால் போல் தெரிகிறது...’’
‘‘நீ சொன்னதில் பாதிதான் உண்மை...’’

‘‘மறுபாதி எது?’’
‘‘இந்த இடது கால் இந்த மனிதனுடையது இல்லை என்பது...’’
அர்ஜுனனும் மருத்துவரும் ஒரு சேர அதிர்ந்தார்கள்.
‘‘என்ன சொல்கிறாய் கிருஷ்ணா...’’

‘‘உண்மையை. இந்த மனிதன் ஒரு காலை இழந்தவன். செயற்கை கால் இவனுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. வாசலில் ஒரு கொடியை பார்த்தாயே... அதை ஏந்தி வந்தவன் இவன்தான். அதை கைப்பற்றும்போதுதான் இவனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது...’’
‘‘இப்படிக் கூட செயற்கை உறுப்பை உடலில் பொருத்த முடியுமா?’’

‘‘முடியும் அர்ஜுனா. உறுப்பு மாற்று சிகிச்சையும் அதற்கான சந்தையும்தான் எல்லா யுகங்களிலும் லோகங்களின் போக்கையே மாற்றுகிறது... தீர்மானிக்கிறது. அசுரர்களின் சக்தி அனைத்தும் அவர்களது உடலுறுப்புகளில் மையம் கொண்டிருப்பதாகவும், ஈசனும் விஷ்ணுவும் போட்டி போட்டுக் கொண்டு அவதாரம் எடுத்து அந்த உறுப்புகளை வெட்டி எறிவதாகவும் உன் அம்மாவும் பாட்டியும் குருவும் கதைகள் சொல்லியிருக்கிறார்கள் இல்லையா? அதில் தொடங்குகிறது இந்த உறுப்பு சந்தைக்கான புள்ளி...’’
‘‘மகேஷ்...’’

சிம்மம் போல் கர்ஜித்த குரலை கேட்டு அலட்சியத்துடன் தன் தலையை திருப்பினான்.
ஜுராசிக்கின் மேல் அமர்ந்தபடி மந்திரவாதி தாத்தா அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்.‘‘அப்படிப்போடு அருவாள...’’ முணுமுணுத்த மகேஷ், ஓநாயின் காதருகில் குனிந்தான்.
‘‘ஏஞ்சல்...’’

‘‘சொல்லு...’’ ஓடிய
படியே ஓநாய் பேசியது.
‘‘மந்திரவாதி தாத்தா நம்மை துரத்திட்டு வர்றார்...’’
‘‘தெரியும். மாயக்கண்ணாடி நாம போகிற திசையை அவர்கிட்ட சொல்லியிருக்கு...’’
‘‘இப்ப நாம என்ன செய்ய?’’

‘‘எதுவும் பண்ண வேண்டாம். நம்மை வந்து அவரே தடுப்பார். அப்ப பார்த்துக்கலாம்...’’
‘‘சமாளிக்க முடியுமா?’’‘‘எதுக்கு சந்தேகப்படற? நான் எதுக்கு ஓநாய் உருவத்தை எடுத்திருக்கேன்? தைரியமா இரு...’’
‘‘ஓகே...’’

‘‘ஸ்பைடர் மேனும் ஹாரி பார்ட்டரும் பாதுகாப்பா இருக்காங்களா?’’
தன் இடுப்பை தடவிப் பார்த்தான். கட்டை விரல் சைசுக்கு இரண்டு பொம்மைகள் தட்டுப்பட்டன.
‘‘பத்திரமா இருக்காங்க...’’

‘‘குட்...’’ஓநாய் தன் வேகத்தை குறைக்கவும், ஜுராசிக் அதை ஓவர் டேக் செய்து வழிமறிக்கவும் சரியாக இருந்தது.‘‘எங்க போற? அலாவுதீனுக்கு சாப விமோசனம் கொடுக்கவா? விட்டுடுவேன்னு நினைச்சியா?’’ இடிஇடியென்று சிரித்தவர் தன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்தார். ஓநாயின் கண்களைப் பார்த்தார்.

‘‘ஆறு விரல் தேவதையே... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த உருவத்தை எடுத்ததுக்கு. ஓநாயோட குணம் என்னிக்கி கருணையுள்ளமா மாறியிருக்கு? வா... வா... ரத்தத்தை குடிக்க வா...’’ வெறியுடன் பேசிய மந்திரவாதி தாத்தா தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்தார்.

சட்டென்று தன் இடது காலை அறுத்தார். துண்டான உறுப்பை ஓநாயின் முன்பு போட்டார். தன்னையும் அறியாமல் ஓநாய் வாயைத் திறந்தது. நாக்கிலிருந்து உமிழ் நீரும் வடியத் தொடங்கியது...

பாதை மாறி ரதம் செல்வதை அப்போதுதான் சோழ மன்னர் பெருநற்கிள்ளி கவனித்தார். ஒருவேளை ரத சாரதி புதியவனோ?அறிய திரையை விலக்கினார். அதுதான் அவர் செய்த தவறு.

காத்திருந்த அதங்கோட்டாசான், தன் கையிலிருந்த துணியால் மன்னரின் வாயை மூடினார். மூலிகை சாற்றில் குளித்திருந்த அந்தத் துணியை வேறு வழியின்றி பெருநற்கிள்ளி சுவாசித்தார்.

அடுத்த கணம் தேரினுள் மயங்கி விழுந்தார். கண்விழித்தபோது அவர் முன்னால் ஒரு மனிதர் ராஜ உடையில் நின்றிருந்தார்.‘இவர்... இவர்...’ திடுக்கிட்ட மன்னர் தன் கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார். அதிர்ந்தார். காரணம், யார் புகார் தளபதியின் மாளிகையில் கத்தி குத்துப் பட்டு இறந்துக் கிடப்பதாக செய்தி வந்ததோ அந்த யவன மன்னர் அங்கே நின்றிருந்தார்.

(தொடரும்)

‘‘டாக்டர்! நான் சாகும்போது என்னோட சொந்த பந்தம் எல்லாம் பக்கத்துலயே இருக்கணும்னு எனக்கு ஆசை...’’‘‘அதெல்லாம் ஆபரேஷன் தியேட்டருக்குள்ள யாரையும் விட முடியாது...’’

‘‘ஏன் இப்படி பரட்டைத் தலையோட வந்திருக்கீங்க..?’’
‘‘நீங்கதானே டாக்டர் ‘சுத்தமா எண்ணெய் சேர்க்கக் கூடாது’ன்னு சொன்னீங்க..!’’

‘‘புலவரை மன்னர் ஏன் கோபமாகத் திட்டினார்..?’’‘‘நாலு வரியை வைத்துக்கொண்டு நாலு வருஷமாக திருப்பித் திருப்பி பாடினாராம்..!’’
பி.பாலாஜி கணேஷ்,  கோவிலாம்பூண்டி.

கே.என்.சிவராமன்