நடைவெளிப் பயணம்



மருத்துவர்கள்

மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்பட்டாலும், அதில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் ‘மருத்துவர்கள்’ என்று அறியப்படுவதைக் காட்டிலும் ‘டாக்டர்கள்’ என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறார்கள் என்பது என் அனுமானம். ஆனால் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து ஒருவருடைய விரை வீக்கம் சுவரொட்டி விளம்பர மருத்துவரால் அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாயிற்று. ‘‘இது ஒரு விதிவிலக்கு, விதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்று அவரே சொன்னார். என்ன டாக்டர்கள், எத்தனை டாக்டர்கள் இருந்தாலும் வாழ்க்கைப் பயணத்தில் மருத்துவர்களைத் தவிர்க்க முடியாது. மூன்று ஆண்டுகள் நாங்கள் ஐதராபாத் இரட்டை நகரத்தின் போயிகுடா என்னும் இடத்தில் இருந்தோம்.

செகந்தராபாத்தில் அன்று அது தென்மேற்குப் பகுதியாக இருந்தது. எனக்குத் தெரிந்து அது நான்கைந்து தெருக்களிலேயே அடங்கி விடுவது. உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது போல அதில் இரு தெருக்கள், புது போயிகுடா என்று அன்று அழைக்கப்பட்டன. போயி என்பது ஒரு ஜாதி. ஆனால் புதிய போயிகுடா, பழைய போயிகுடா இரண்டிலும் நிறைய கிறிஸ்தவர்கள்தான் இருந்தார்கள். எனக்குத் தெரிந்த முதல் வைத்தியரும் ஒரு கிறிஸ்தவர். எங்கள் தெருவிலேயே நான்கைந்து வீடுகள் தள்ளி இருந்தார்.

அந்த நாளில் வீட்டில் குழந்தைகள் நிறைய இருந்தால் மாதம் ஒரு முறை விளக்கெண்ணெய் குடிக்கக் கொடுப்பார்கள். இன்றைய டாக்டர்கள் ‘விளக்கெண்ணெயை குடிக்கவே கூடாது’ என்கிறார்கள். புதிய தலைமுறையினருக்கு விளக்கெண்ணெய் என்பதே தெரியாது. ஆதலால் ‘அவன் முகம் விளக்கெண்ணெய் குடித்தவன் மாதிரி இருந்தது’ என்று ஒரு தகவல் வந்தால், அது அவர்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த விளக்கெண்ணெய் தரும் ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டில் கூச்சல், கெஞ்சல், மிரட்டல் நிறையவே இருக்கும். ஒவ்வொரு சமயம் அடி கூட விழும். ஒரு நாள் என் அப்பா இதை எங்கள் தெரு வைத்தியரிடம் சொன்னார். இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் அக்கறை கொண்ட நண்பர்கள். வைத்தியர் சிரித்துக்கொண்டே, ‘‘விளக்கெண்ணெய்க்கு மிஞ்சி ஏதும் கிடையாதுப்பா. அதைத் தாய் என்பார்கள். சரி, அதற்கு பதிலாக மருந்து தருகிறேன்.

ஆனால் என்றைக்கோ ஒரு நாள் தருவதற்குத்தான் இந்த மருந்து. ஜாக்கிரதை. ஒரே ஒரு மாத்திரை தந்தாலே போதுமானது’’ என்று சொல்லி மிளகு போல ஐந்தாறு மாத்திரைகள் தந்தார். பெரியவர்களுக்கு ஒரு மாத்திரை; சிறுவர்களுக்கு அரை மாத்திரை. நான் ஒரு முறை சாப்பிட்டேன். அடுத்த முறை ‘‘விளக்கெண்ணெயே சாப்பிடுகிறேன்’’ என்றேன். உடல் அவ்வளவு களைத்து விட்டது.

நாட்டு வைத்தியர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததில் ஒரு பாரம்பரியம் உண்டோ என்று சந்தேகம். அன்றைய தஞ்சையில் ‘குரு மருந்து’ என்பது பிரசித்தம். இந்த மருந்துகளைத் தயாரித்தவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். திருநெல்வேலியில் மருத்துவப் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்து, சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்து, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு மருத்துவம் பார்த்தவர். தஞ்சையில் அவர் பெயரில் ஒரு தெரு இருக்கிறது.

போயிகுடா வைத்தியரை என் அப்பா முடிந்தபோதெல்லாம் பார்த்து வருவார். கால் வலி, கை வலி போன்ற உபாதைகளுக்கு அவரிடமிருந்து தைலம் வாங்கி வருவார். அந்த வைத்தியர், ‘மருந்தினால் அல்லாமல், உடல் தானாகவே சரியாக வேண்டும்’ என்று நினைப்பவர். அபூர்வமாகத்தான் உள்மருந்து தருவார். எனக்குத் தெரிந்து அவர் பணமே வாங்கியதில்லை. எப்படி வாழ்க்கை நடத்தினார்?

என் தொண்டையில் டான்ஸில் எனச் சொல்லப்படும் தேவையற்ற சதை இருந்தது. வைத்தியர், ‘‘சும்மா அப்படியே விட்டு விடுங்க’’ என்றுதான் சொன்னார். ஆனால் ரயில்வே டாக்டர், ‘‘டான்ஸிலை எடுக்காவிட்டால் என்ன ஆகும் என்று தெரியாது. நான் பொறுப்பல்ல’’ என்றார். ஏற்கனவே மூன்று குழந்தைகளை இழந்திருந்த என் பெற்றோர் இருவருக்கும் பயம் வந்து விட்டது. வெள்ளைக்காரரான பெரிய டாக்டர்தான் டான்ஸிலை வெட்டி எடுத்தார். ஆனால் சரியாக வெட்டவில்லை. ஒரு துளி விட்டு விட்டார்.

இரண்டே மாதங்களில் அது வளர்ந்து விட்டது! எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நான் பாதித் தொண்டையோடுதான் இருக்கிறேன். நான் இறந்தால் என் உள்ளுறுப்புகளில் சில யாருக்காவது பயன்படும்.. ஆனால் என் டான்ஸிலை யார் வாங்கிக் கொள்வார்கள்? என் அடுத்த மருத்துவ அனுபவம் என் தகப்பனார் இறந்த பிறகு சென்னையில்.

என் கண் ரொம்ப நாட்கள் சிவந்தே இருந்தன. இதைக் கண்வலி என்று நினைத்து, சென்னை கண் ஆஸ்பத்திரிக்குப் போனேன். நான் போன தினம் ஒரு பிரபல கட்சித் தலைவரும் வந்திருந்தார். வருடம் 1955 ஆக இருக்கலாம். அவர் கண் சரியாயிற்றோ என்னவோ, என் கண் தொடர்ந்து வலித்தது.

என்னை ஓர் உறவினர் மயிலாப்பூர் வெங்கடரமணா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். பாரதியாரின் முதல் கவிதைத் தொகுப்புக்குக் காரணமாயிருந்த கிருஷ்ணசுவாமி ஐயர், மருத்துவ சாலையுடன் ஒரு பாரம்பரிய மருத்துவக் கல்லூரியும் நிறுவினார். அங்கிருந்த வைத்தியர் மை போன்ற ஒரு பசையை என் கண்ணில் தடவி விட்டார்.

அவர் கவனக் குறைவாக நைட்ரிக் அமிலத்தை என் கண்ணில் போட்டு விட்டாரோ என்று கவலைப்படும்படி தாங்க முடியாதபடி கண்ணில் எரிச்சல். நான் வலி தாங்காமல் அழுது விட்டேன். ஐந்து நிமிடங்கள் கழித்து கண்ணைத் திறக்க முடிந்தது. கண்ணிலிருந்து ஏதேதோ தசை, நீர் எல்லாம் வந்தன.

அவர் ஒரு சிறு பாட்டிலில் அந்த மையைப் போட்டு, தினம் ஒரு முறை போடச் சொன்னார். தைரியம் உள்ளவர்கள் அந்த மருந்தை வாங்கிக் கண்ணில் விட்டுக் கொள்ளலாம். மருந்தின் பெயர் இளநீர்க் குழம்பு. எண் கண் சரியாகி விட்டது. சொல்லப் போனால் எப்போதும் கலங்கியே இருக்கும் என் கண்கள், அந்த மருந்தை இட்டுக்கொண்ட பிறகு தான் தெளிவடைந்தன. இன்று இம்மருந்து கிடைக்கிறதா என்று தெரியாது. ஆனால் நானாக யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை.

அந்த இளநீரைக் கண்ணில் விட்டுக் கொண்டவுடன் சில விநாடிகளுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.வேறு ஒருவருக்காக நான் ஒரு நாள் மயிலாப்பூர் ராயப்பேட்டை ஹைரோடில் இருக்கும் ஜம்மி வெங்கடரமணய்யா வைத்திய சாலைக்குப் போனேன். அங்கும் சரி, அதற்கு அரை மைல் முன்னால் உள்ள ஆயுர்வேதாசிரமத்திலும் சரி, கர்ப்பிணிப் பெண்களுக்கு விசேஷ டானிக் தருவார்கள். அது இனிப்பாக இருக்கும்.

எங்கள் பெற்றோர் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நலமில்லை என்றால் செகந்தராபாத்திலிருந்து சென்னைக்கு ஜம்மியிடம்தான் ஓடி வருவார்கள். எங்கள் குடும்பத்தில் ஈரல் குலைக்கட்டி வராத குழந்தையே கிடையாது. மூன்று குழந்தைகள் அணு அணுவாக உடல் கெட்டு இறந்திருக்கின்றன.

எல்லோரிடமும் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வயிறு உப்பி, உடல் முழுதும் மஞ்சள் பூத்து யாராவது நெருங்கினாலே சிணுங்கி உயிரை விடும். வெங்கடரமணய்யா சில சமயங்களில் முதலிலேயே கூறிவிடுவார், ‘‘குழந்தை பிழைக்காது’’ என்று. ஒரு வைத்தியர் இப்படிக் கூறலாமா என்று கேட்கலாம். ஆனால் வெங்கடரமணய்யா இந்த வேதனைத் தகவலை மிகுந்த வருத்தத்துடன்தான் கூறுவார். ஒரு வேளை இப்படிக் கூற அந்த மருத்துவரால்தான் முடியுமோ?

அந்த வைத்தியர், ‘மருந்தினால் அல்லாமல், உடல் தானாகவே சரியாக வேண்டும்’ என்று நினைப்பவர். அபூர்வமாகத்தான் உள்மருந்து தருவார். எனக்குத் தெரிந்து அவர் பணமே வாங்கியதில்லை.

படிக்க

என் சொந்த வாழ்க்கையில் 2001 தொடங்கி எலும்பு முறிவு வைத்தியர்களிடம் தொடர்ந்து போக வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் மீண்டும் ஓரளவு இயல்பாக இயங்க அடுத்த கட்ட சிகிச்சைக்குப் போக வேண்டியிருந்தது. அப்போதுதான் டாக்டர் எஸ்.லட்சுமணனை சந்தித்தேன். சிகிச்சை பெற்றேன். அவர் அந்த ஆண்டு ‘சிறந்த பிசியோதெரபிஸ்ட்’ விருது பெற்றிருந்தார். அவரே ஒரு நூலாசிரியர் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

‘பிசியோதெரபி  வலி தீரும் வழிகள்’ என்பது தான் அவரது நூல். பல விளக்கப் படங்களுடன், நகைச்சுவை உணர்வோடு வலியைப் புரிய வைக்கும் இந்த நூல், சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைவருக்கும் பயன் தரக்கூடி யது. வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் மாளிகை, லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை600014. தொ.பேசி: 04442009601.

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்