கவிதைக்காரர்கள் வீதி



அகவெட்டு


நம்மாழ்வார் இறந்தபிறகு
புறாக்களை வளர்ப்பது
எனக்குத் துயரமாக இருக்கிறது.

ரசாயன உரமற்ற தானியங்களை
அவர்தான்
கொண்டு வந்து ஊட்டுவார்.

அவர் மரணத்தை
முன்பே அறிந்தது போல
முன்னிரவில்
புறாக்கள் அழுததைப் பார்த்தேன்.

அய்யோ... அந்தக் கண்களின் தனிமை
அப்படிக் கலங்கடித்தது

அன்பின் கண்களும்
அமைதியின் சிறகுகளும்
மறுபடியும்
சகஜ வாழ்க்கைக்குத் திரும்பியது
இந்தியப் பிரதமரும்
ஆஸ்திரேலியப் பிரதமரும்
சந்தித்துக்கொண்ட சமீபத்தில்தான்

அமைதிக்காகப் பயன்படுத்த
இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா
யுரேனியம் விற்பதை
அறிந்தபோது புறாக்கள்
இரண்டு நாடுகளுக்கிடையில்
தூதுவர்களாக பறந்து பறந்து
ஒத்திகை பார்த்துக் கொண்டன.

இனி புறாக்கள் குறித்து
பயமில்லை எனக்கு.
அவை யுரேனியம் கொறித்து
பழகிக் கொண்டு விடும்.

ஒரே ஓர் இறகை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
அவளுக்காக.

அமைதியை உண்டு
அமைதியைப் பருகி
அமைதியை சுவாசித்து வாழும்
புறாக்கள் என்னிடமிருந்து விடைபெறுமுன்
அவற்றை கடைசியாகப் பார்த்துக்கொள்கிறேன்
அவ்வளவு ஏக்கத்தோடு.

(சமீபத்திய இந்திய  ஆஸ்திரேலிய யுரேனிய வர்த்தகத்திற்கான கூட்டு ஒப்பந்தத்தை ‘அமைதிக்கான முன் செயல்’ என்று வர்ணித்திருந்தார் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்.)