கலப்படம்



‘‘உனக்கு ஒரு வாரம் டைம். ஒழுங்கா வாங்கின கடனைத் திருப்பிக் கொடுத்துடு. இல்ல... மானம் மரியாதை எல்லாம் கெட்டுடும்!’’  கடன் கொடுத்தவன் மிரட்டிவிட்டுப் போனான். கதவைத் தாழிட்டுக் கொண்ட கதிரேசன், தயாராக வாங்கி வைத்த பூச்சிமருந்தை எடுத்தான். மடமடவெனக் குடித்தான்.கண் விழித்துப் பார்த்த கதிரேசனுக்கு, தான் மருத்துவமனையில் இருப்பது புரிந்தது. டாக்டர் ஒருவர் அவன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார். ‘‘நல்லவேளை...


அவர் குடிச்ச பூச்சி மருந்தில் கலப்படம் இருந்ததால உங்க கணவர் உயிரைக் காப்பாத்திட்டோம். கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்ங்கிறது இதுதான் போல. நீங்க எங்களுக்கு நன்றி சொல்றதை விட, பூச்சி மருந்துல கலப்படம் செய்த அந்த வியாபாரிக்குத்தான் நன்றி சொல்லணும். பேச நேரமில்லை... இந்த இன்ஜெக்ஷனை உடனே வாங்கிட்டு வாங்க!’’டாக்டரிடமிருந்து மருந்துச் சீட்டை வாங்கிச் சென்ற கதிரேசனின் மனைவி சிறிது நேரத்தில் மருந்துடன் வந்தாள்.

மருந்தை கதிரேசனுக்கு செலுத்திய டாக்டர், அவன் உடல் நிறம் மாறுவதைக் கண்டு திடுக்கிட்டார். அந்த இன்ஜெக்ஷன் பாட்டிலை கையில் எடுத்துப் பார்த்தவர், தலையில் கை வைத்துக் கொண்டு பதற்றமாகச் சொன்னார்... ‘‘அடப்பாவிங்களா... இந்த மருந்துல யாரோ கலப்படம் பண்ணிட்டாங்க!’’       
 
ஜெ.கண்ணன்