இ-சிகரெட் எனும் நவீன எமன்!



பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘இசிகரெட்’ எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் அறிமுகமானபோது, உலகமே அதை மாபெரும் வரமாகப் பார்த்தது. ‘‘புகை பிடிக்கும் பழக்கத்தை இது அடியோடு ஒழித்துவிடும்’’ என டாக்டர்கள்கூட பரிந்துரை செய்தார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனம் இப்போது கவலையோடு இந்தியாவை எச்சரிக்கை செய்திருக்கிறது.

‘‘தவறான நம்பிக்கை கொடுத்து பல நிறுவனங்களும் செய்யும் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் இதை வாங்கி, பலரும் புதிதாக புகைப் பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். சிகரெட்டுக்கு இது எந்தவிதத்திலும் ஆபத்துக்கு குறைந்ததில்லை. உஷார்!’’

இசிகரெட் என்பது சாதாரண சிகரெட் போலவே இருக்கும் ஒரு நீளமான குழாய். இதற்குள் பொருத்திக் கொள்ள திரவம் அடங்கிய கேட்ரிட்ஜ் தனியாக விற்கிறார்கள். அதை உள்ளே போட்டு, ஒரு பட்டனை அழுத்தினால் போதும்...

ஒரு காயில் சூடாகி இந்த திரவத்தை ஆவியாக்கி விடும். சிகரெட் போலவே வாய்க்குள் இதை இழுத்து புகை விடலாம். சிகரெட்டைவிட ஏராளமாக புகை வரும். எல்லாம் சாதாரண நீராவிதான். சிகரெட் பிடித்தது போன்ற உணர்வு கிடைக்கும். சிகரெட் நுனியில் பற்ற வைத்ததும் நெருப்பு சிவந்து எரிவது போல, இதில் நீல நிறத்தில் ஒரு எல்.இ.டி விளக்கு எரிந்து ‘ரியல் ஃபீல்’ தரும்.

பல காரணங்களுக்காக உலகே இதை நேசித்தது. சிகரெட்டில் இருப்பது போன்ற நாற்றம் இல்லை; சாம்பல் விழுவதில்லை. எரிச்சலூட்டும் வாசமுள்ள புகை இல்லை. சிகரெட்டில் இருப்பது போல நான்காயிரத்துக்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் இல்லை. கடந்த 2003ம் ஆண்டு சீனாவில் அறிமுகமான இந்த இசிகரெட் குறுகிய காலத்தில் உலகெங்கும் பிரபலமாக இதுவே பிரதான காரணம்.

கடந்த ஆண்டில் உலகெங்கும் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இது விற்கப்பட்டிருப்பதாக ஒரு கணக்கீடு சொல்கிறது. இப்போது வெவ்வேறு மாடல்களில் உலகெங்கும் 466 பிராண்ட் இசிகரெட் கிடைக்கிறது. 300 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை எந்த விலையிலும் கிடைக்கும். இப்போது பிரச்னையே இதனால்தான்!

சிகரெட் என்பது ஒரு ஸ்டைலையும் சாகச உணர்வையும் தருவதாக நினைத்து இளைய தலைமுறை விட்டில் பூச்சியாக வந்து விழுகிறது. ‘புகை பிடிப்பது ஆபத்தான விஷயம்’ என்பதை உணர்த்த பல கோடி ரூபாய் செலவழித்து உலகெங்கும் பிரசார இயக்கங்கள் நடக்கின்றன. பொது இடங்களில் புகை பிடிக்க தடை போடுகிறார்கள். கடுமையான அபராதம் விதிக்கிறார்கள். இதனால் புகை பிடிக்கத் தயங்குபவர்களை எளிதில் வசப்படுத்தும் கருவியாக இசிகரெட் மாறியுள்ளது என்பது தான் பலரின் கவலை.

இசிகரெட்டில் புகையிலை கிடையாது; ஆனால் நிகோட்டின் உண்டு. உள்ளே இருக்கும் திரவம் முழுக்க நிறைய நிகோட்டின் கலந்ததுதான். அதுதான் புகை பிடித்த மாதிரி உணர்வைத் தந்து உடலை பரபரக்க வைக்கிறது. சாதாரண சிகரெட்டுக்கு இருக்கும் விற்பனைக் கட்டுப்பாடுகள், விதிகள் எதுவும் இசிகரெட்டுக்கு இல்லை. அதனால் பல நிறுவனங்கள் ‘இது பாதுகாப்பானது, நவீனமானது’ எனச் சொல்லி பலரையும் வசீகரிக்கின்றன.

‘பொது இடத்தில் புகை பிடித்தால் பிரச்னையாகும், வாசனையால் வீட்டில் மாட்டிக் கொள்வோம்’ எனக் கவலைப்படுபவர்கள்கூட இந்த வாக்குறுதிகளை நம்பி இசிகரெட்டை வாங்க ஆரம்பிக்க, புதிய புகை அடிமைகளை இது உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்; நகரங்களில் பெட்டிக்கடைகளில் வைத்து விற்கிறார்கள். சுமார் 300 ரூபாய்க்கு வாங்கப்படும் ஒரு கேட்ரிட்ஜ் மூன்று பாக்கெட் சிகரெட்டுக்கு சமம்.

இசிகரெட்டுக்கு இளைய தலைமுறை கொடுத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து, இந்தியாவில் ஏற்கனவே சிகரெட் விற்றுக் கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்களே இப்போது இசிகரெட்டும் விற்க ஆரம்பித்திருப்பதுதான் செய்தியே! அது மட்டுமில்லை... ‘ஆரோக்கிய சிகரெட்’ என சொல்லியும் இதை விற்கிறார்கள்.

சாக்லெட், பிஸ்கெட் போல விதவிதமான ஃபிளேவர்களில் கிடைக்கிறது. புகையே வராத மாடலும் உண்டு. பள்ளிக்கூடம் போகும் பையன் இதை வாங்கி வந்து அறையில் வைத்துக் கொண்டு பயன்படுத்தினால், வீட்டில் இருப்பவர்களுக்கே அவன் புகை பிடிப்பது தெரியாது. சாக்லெட் சாப்பிட்டதாக நம்புவார்கள். இதைவிட விபரீதம் என்ன இருக்கிறது?

‘‘கடந்த 10 ஆண்டுகளாக இது ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி உலகெங்கும் நடக்கிறது. சிகரெட் போல இதனால் மிக மோசமான உடல்நலப் பிரச்னைகள் இல்லை. ஆனால் இதிலும் நிகோட்டின் இருக்கிறது. இதனாலும் புற்றுநோய் வரும். அது மட்டுமில்லை... சிகரெட்டால் வராத சில புது பிரச்னைகளை இது உருவாக்கியுள்ளது’’ என்கிறார் டாக்டர் விநாயக் மோகன் பிரசாத்.

உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் இவர். ‘‘புகைக்கு அடிமையானவர்கள் எவரும் இந்த இசிகரெட்டைப் பயன்படுத்தி திருந்தியதாக தகவல் இல்லை; ஆனால் ‘புகை பிடிப்பது கெட்ட பழக்கம்’ என நினைத்திருந்த பல டீன் ஏஜ் பையன்களுக்கு, ஏதோ சாக்லெட் போல நிகோட்டினை கொடுத்து புகைக்கு அடிமை ஆக்கியிருக்கிறது இது; குறிப்பாக பெண்கள் பலரை’’ என வருந்துகிறார் பிரசாத்.

‘‘பொது அரங்குகளில் இசிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என உலக சுகாதார நிறுவனம், எல்லா நாடுகளுக்கும் அறைகூவல் விடுத்திருக்கிறது. பிரேசில், சிங்கப்பூர், நார்வே போன்ற நாடுகளில் இதற்கு தடை வந்தாயிற்று. ‘இசிகரெட்டில் ஆபத்தான நச்சுகள் இருப்பதால், 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கு விற்கக் கூடாது’ என அமெரிக்காவில் விதி வந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இசிகரெட் பற்றி ஆராய்வதற்காக ஒரு நிபுணர்கள் குழு அமைத்துள்ளது. அது தனது முதல் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது. குழுவில் பலருமே இதற்குத் தடை விதிக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவு வரும். ‘புகை பிடிப்பது கெட்ட பழக்கம்’ என நினைத்திருந்த பல டீன் ஏஜ் பையன்களுக்கு, ஏதோ சாக்லெட் போல நிகோட்டினை கொடுத்து புகைக்கு அடிமை ஆக்கியிருக்கிறது இது!

 அகஸ்டஸ்