அரண்மனை



அரண்மனைக்குள் அழகு பெண் ஹன்சிகாவை அடித்துத் துவைத்து உயிரோடு புதைத்து விட... பல வருஷம் கழித்து அரண்மனைக்கு வருகிறவர்களை ஆவி மொத்தமாகப் பழிவாங்குவதுதான் ‘அரண்மனை!’ஒரு கோயிலில் அம்மனுக்கு சொந்தமான நகைகளை, ஊர்ப் பெரியவர்கள் கூட்டாகச் சேர்ந்து திருடி விட...

 ‘இப்படியே எத்தனை படம் பார்த்தாச்சு சாமி’ என பெருமூச்சு விட வைக்கிற கதைதான். ஆனாலும், கவர்ச்சி + காமெடி + பேய் என எடுத்துக் கொண்ட விதத்தில் பார்க்க வைக்கிறார் சுந்தர்.சி. சிரிப்புப் படமா, பேய் படமா என நடுநடுவில் சந்தேகம் வந்து விடுவது நிஜம்.

இடைவேளை வரை வந்திருக்கிற காமெடி, பின்பகுதியிலும் நீடித்திருந்தால், நிச்சயமாக சுந்தர்.சிக்கு இது இன்னுமொரு ‘உள்ளத்தை அள்ளித்தா’. சந்தானம், சுவாமிநாதன், மனோபாலா கூட்டணியில் சிரிப்பு வெடி சிந்தி சிதறடிக்கிறது. பேயிடமிருந்து தங்கை ஆண்ட்ரியாவைக் காப்பாற்றுகிற பொறுப்பை சுந்தர்.சி ஏற்றுக்கொண்டு பதற்றப்படாமல் காப்பாற்றுவதுதான் முன்கூட்டியே தெரிகிற மீதிக் கதை.

கொஞ்சம் ‘சந்திரமுகி’யின் சாயல் வந்தாலும் ஆரம்பத்திலேயே அதை நிறுத்திவிடுகிறார் சுந்தர்.சி. மொத்த ‘அரண்மனை’யே ஆவி பயத்தில் நடுங்கும்போது, சுந்தர்.சி முகத்தில் ஒரு சின்ன பயக் கீற்றைப் பார்க்கணுமே. இருந்தாலும் நீங்க ரொம்ப யதார்த்தம் பாஸ்! எந்த இடத்தில் எப்போது வந்து முகம் காட்டுமோ என ஆவி அலற வைத்தாலும், ஆவியின் பாய்ச்சலில் ஆண்ட்ரியா மிரண்டு பயமுறுத்துவதுதான் கதி கலக்குகிறது. அவரின் முரட்டுப் பார்வையும் கூர்மையும், படத்தில் இரண்டு ‘பேயோ’ என்ற மிரட்சியை ஏற்படுத்துகிறது.

பாவமாய் வந்து பாஸ் மார்க் வாங்குவதற்கு முயன்றிருக்கிறார் ஹன்சிகா. கிராமத்துப் பெண்ணாக நம்ப முடியாவிட்டாலும், அதை சிரத்தை எடுத்துச் செய்து நம்பகத்தன்மை கொடுக்க பார்த்திருக்கிறார்கள்.

 ஹன்சிகா, சரளா, சந்தானம், ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, மனோபாலா, வினய் என நட்சத்திரப் பட்டியலைக் காட்டுவதில் தொடங்கிய உற்சாகத்தை முடிந்தவரை காப்பாற்ற முயல்கிறார் சுந்தர்.சி ஆகப் பழைய கதையென்றாலும் உட்கார்த்தி வைத்ததுதான் சுந்தர்.சியின் சீனியர்தனம்.

கொஞ்ச நாளாக ஒதுங்கியிருந்த சந்தானம், இதில் வீறு கொண்டு எழுந்திருக்கிறார். கண நேரமும் யூகிக்க முடியாமல், எதிரே இருக்கிறவரை கிண்டலில் எடுத்தெறிகிறார். தப்பாக இருந்தாலும் இரட்டை அர்த்தம் தொனித்தாலும்... நாம் சந்தானத்தின் காமெடிக்கு பழகிவிட்டதால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும், பட்டையைக் கிளப்புகிறது சந்தானம் பார்ட். ‘சாப்பிட ஏதாவது இருக்கா?’ என சுந்தர்.சி கேட்க, ‘குஷ்பு இட்லி வேணுமா?’ என சந்தானம் கேட்பது, தியேட்டர் வெடிக்கிற அக்மார்க் குறும்பு.

சுந்தர்.சிக்கு முன்னால் கூட வினய் எடுபட முடியவில்லை. ஜீவாவின் அறிமுகம் இப்படி வீணாகிப் போனது ஆச்சரியம். அவரை சொந்தக் குரலில் கொஞ்ச கொஞ்ச பேசவிட்டது எப்படிப் பார்த்தாலும் குற்றமே. அந்த நெடிய உயரத்திற்கு ராய் லட்சுமி காட்டுகிற கவர்ச்சி பயமூட்டுகிறது.

 சீக்கிரம் அத்தை ரோலுக்கு வந்துவிடுவார் போல, உஷார்!பரத்வாஜ் இசையில் எந்தப் பாடலும் தேறவில்லை. ஆனால், கார்த்திக் ராஜாவின் பின்னணியும் யு.கே.செந்தில்குமாரின் கேமராவும், பயத்தை நமக்குக் கடத்துவதில் வெற்றி பெறுகின்றன.பயம் குறைந்த காமெடி!

 குங்குமம் விமர்சனக் குழு