பால் கவர்



‘‘பழைய பேப்பர் வாங்கறது... பால் கவர் வாங்கறது...’’ வேலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு படுத்துக் கிடந்த சூரி, இந்தக் கூவல் கேட்டதும் துள்ளி எழுந்தான். ‘‘இங்க வாப்பா... பால் கவர் இருக்கு...’’

சைக்கிளில் வந்த அந்த வாலிபன் சூரியைக் கண்டுகொள்ளாது கடந்து சென்றான். ‘‘இங்க வாங்கண்ணே’’ என்றழைத்த ஒரு பெண்ணின் வீட்டு முன் போய் நின்றான். சூரி மீண்டும் சத்தமாய்க் குரல் கொடுத்தான். ‘‘அங்க யாவாரத்தை முடிச்சுட்டு எங்க வீட்டுக்கு வாப்பா. பால்கவர் இருக்கு...’’ அதையும் அவன் மதிக்கவில்லை. அடுத்ததாய் இன்னொரு வளைக்கரம் அழைக்க, அங்கு போய்விட்டான்.

‘‘பொறுக்கிப்பய... நான் கூப்பிட்டா வராம, பொம்பளை கூப்பிட்டா மட்டும் போறான்’’  சூரி பொருமியபோது, உள்ளே வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த அவனுடைய பாட்டி சொன்னாள்...
‘‘அவனைத் திட்டாதடா. பொம்பளைக பழைய பால் கவர் வித்தா அந்தத் துட்டு வீட்டுச் செலவுக்குப் போகும்.

உன்னை மாதிரி பயலுககிட்ட துட்டைக் குடுத்தா அது தண்ணி அடிக்க இல்ல போகும்? அதான் நீ கூப்பிட்டும் வராம ஏழைக் குடும்பங்களுக்கு நல்லது பண்றான் அவன்!’’டாஸ்மாக் செலவுக்குப் பணம் கிடைக்காத வருத்தத்திலும் பாட்டி யின் வார்த்தை நியாயமாகப் பட்டது சூரிக்கு.   

சுபமி