அழியாத கோலங்கள்!1952ல் வக்கீல் தொழிலை சிரமேற்கொண்டு, ‘குற்றம் செய்யும் தொழிலாளரே தெய்வம்’ என்று ஏற்றுக் கொண்ட பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் சினிமாவையும் முற்றும் துறந்தவன் நான்.

அதில் சினிமாவை மட்டும், 1960ல் தம்பி கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நுழைந்ததும் திரும்பப் பார்க்க ஆரம்பித்தேன். மறுபடி பத்து முதல் 17 வரை தம்பி நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்தபோது சிறிது சினிமாவை வெறுத்தவன், தம்பி ஹீரோவாகத் தேர்ந்ததும் சினிமா சாதியினரிடம் மீண்டும் தொடர்பு வைத்துக்கொண்டேன்.

நான் நடிகனானதும், உலக நாயகனின் அண்ணன், சுஹாசினியின் அப்பா, மணிரத்னம் மாமனார் என்றெல்லாம் புகழ்பெற்று... ‘‘இந்தாளுதாண்டா நம்ம தலைவருக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்ன துரோகி!’’ என்று ‘தளபதி’ ரஜினி ரசிகர்களிடம் வசை மொழி வாங்கியதும், ‘‘இந்த மூஞ்சிக்கா தேசிய விருது கொடுத்தாங்க?’’ என்று யாரோ 17 பெரியவர்கள் செய்த தவறுக்கு ‘என் முகம்’ திட்டு வாங்கியதும் பின்னால் வந்த கதைகள்.

பழைய படங்களில் கைத்துப்பாக்கியில் குண்டு தீர்ந்ததும் கதாநாயகனும் வில்லன்களும் ஒன்றுபோல் சொல்லி வைத்த மாதிரி துப்பாக்கியை கடும் கோபத்துடன் தூக்கி எறிந்துவிட்டு மோதுவார்கள்; ஹீரோ மூன்று முறை குட்டிக்கரணம் அடித்து முகத்தில் அடித்தவுடன், வில்லன் பக்கவாட்டில் மூன்று முறை சுழன்று விழுவார். ‘இதெல்லாம் பதினெண்கீழ்கணக் கில் கூறப்பட்டிருக்கிறதா? அல்லது பதினெண் மேல் கணக்கிலுள்ளதா?’ என்று தமிழறிஞர்கள் எனக்கு அறிவுறுத்தலாம்.

‘‘உங்கள் இந்திய சினிமாவில் காதலிக்கும் ஆணும் பெண்ணும் ஏன் மரத்தைச் சுற்றியும், பாலைவன மண்ணிலும், பார்க்கிலும், பீச்சிலும், ரயில் நிலையத்திலும், பஸ் ஸ்டாண்டிலும் ஒருவரை ஒருவர் பாடிக்கொண்டே துரத்துகிறார்கள்?’’ என்று பிரான்சில் ஒருவர் என்னிடம் கேட்டார்.நான் ஒரு உருப்படியான - எனக்குத் தெரிந்த - பதிலைக் கூறினேன்.

 ‘‘நீங்கள் பாரீஸ் நகரத்தில் ஒரு படுக்கை அறையில் காதல் என்பதை கீழ்ப் பாகத்தை மட்டில் ஏனோ மறைத்துவிட்டு, மேல் பக்கத்தில் சில எச்சில் துப்பல்களையும், சில உடலசைவுகளையும் காட்டி பெயரைத் தட்டிக்கொண்டு போய் விடுகிறீர்கள். எங்கள் இயக்குனர்கள் தங்கள் தாய், தந்தையர் காட்டியும் காட்டாமலும் சுட்டிக் காட்டும் பெண்ணை படுக்கையறையில்தான் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு சுற்று வட்டார நடப்புகளைப் பார்த்து காட்சிகள் அமைக்கிறார்கள்.

அன்றைய நாட்களில் சிங்கம், புலி, கரடிகள் போல் மிருகங்கள் செய்யும் காதலை நகர் வாழ் இயக்குனர்கள் பார்க்க வாய்ப்பில்லை. அவர்கள் பார்க்கும் மிருகங்கள், நாய்கள் மட்டுமே. நாங்கள் கோழிகள் காமுறுவதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். கேரளத்தில் அவை போன்று கணத்தில் உறவு கொண்டு ஓடிவிடுபவர்களை ‘கோழி’ என்று அழைப்பதுண்டு.

கார்த்திகை மாத வீதிகளில் நாய்த் துரத்தல் பலருக்கும் கண்கூடாகத் தெரிந்தது. நாய்களின் ஜனத்தொகை பெருகியதும், மெரினாக் கரையில் ஒரு ஜோடியை பல நாய்கள் துரத்துவது போல், ஆடும் இளம் கதாபாத்திரங்களின் பின்னால் மற்றொரு கூட்டத்தை குரூப் டான்ஸ் என்ற பெயரில் சேர்க்கிறோம். அதைத்தான் காதல் என்ற பெயரில் எடுத்தோம்!’’

சினிமா பார்த்து மக்கள் கெட்டு விட்டார்கள் என்று சொல்வது ‘டெல்லியில் உள்ள திஹார் சிறையும் சென்னையின் புழல் சிறையும் குற்றவாளிகளை உற்பத்தி செய்கிறது’ என்று சொல்வது போல் இருக்கிறது. சினிமா உலகில் பலருக்குத் தெரியாத விஷயம் இது... இயக்குனர் மகேந்திரனின் தந்தை பரமக்குடியில் செல்லய்யா வாத்தியார் என்று தன் தொழில் பெயராலும் அவர் கையில் எடுத்துச் செல்லும் இரட்டைக்குழல் துப்பாக்கியாலும் புகழ் பெற்றவர்.

என்னுடைய தாய் மாமன் தம்பாசாமி, பரமக்குடியில் இன்னொரு வீரர். நான்கு தாய் மாமன்களில் இவர் பள்ளிக்கூடம் போனதில்லை. அவர் பிறந்தபோது மருத்துவச்சி ஆயுதம் போட்டு வெளிக்கொண்டு வந்ததாக சொல்வார்கள். சிஸேரியன் அறுவை சிகிச்சைக்கு யாரும் அந்த நாட்களில் ஒப்புக் கொள்வதில்லையாம்.

இரண்டு வயதில் வலிப்பு நோய் வந்ததால், சென்னைக்கு அனுப்பி வெள்ளைக்கார மருத்துவமனையில் நான்கு வருடம் சிகிச்சை செய்திருக்கிறார்கள். அப்போது வெள்ளைக்கார நர்ஸ்களிடம் பேசியே அவர் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்று விட்டார். ஆனால் கடைசிவரை அவர் பள்ளிக்கூடம் செல்லவே இல்லை. ஒரு பிரபல வக்கீல் மகன், வலிப்பு வந்து பள்ளியில் விழுந்தால் கேவலம் என்று நினைத்திருக்கலாம். 

16 வயதில் அவர், நென்மேனி கிராமத்திலுள்ள தாத்தாவின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நேரடி விவசாயம் செய்ய அனுப்பப் பட்டார். என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்... ‘‘பி.ஏ. படிச்சு மதுராந்தகத்திலே சப் இன்ஸ்பெக்டரா இருக்கிறவன் மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டு அல்லாடு றான். இந்த தம்பா 16 வயசுலே பாரு... நெல்லும் பருப்பும் உளுந்தும் கடலையுமா கொண்டுவந்து கொட்டறான். நம்ம வீட்டு களஞ்சிய மெல்லாம் ரொம்பி வழியறது’’ என்பார்.

தாத்தா வீட்டில் மெயின் ஹால் தவிர, மொத்தம் ஒன்பது அறைகளும் களஞ்சியம் போலத்தான் இருக்கும். உச்சியில் திறந்தால் கொட்டும்படி ரூமுக்குள் கீழ் மூடியும், மொட்டை மாடியில் கிராமத்திலிருந்து வரும் தானியங்களைக் காய வைத்துப் பிறகு அப்படியே கொட்டுவதற்கு சின்ன நுழைவாயிலும் இருக்கும்.  நான் எழுத ஆரம்பித்ததும், 11 வயதில் நான் ஒரு சிறந்த எழுத்தாளன் ஆனது நினைவுக்கு வருகிறது.

ஆறாம் வகுப்பில் என் தோழன் மூஸா ஜமால் ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினான். அவன் ஒரு விளையாட்டு சாம்பியன். ஐவர் பூப்பந்து ஆட்டத்தில் என்னையும் மற்ற மூன்று ஆட்டக்காரர்களையும் நான்கு மூலைகளில் நிற்க வைத்து, தான் ஒருவனாக மைய ஆட்டக்காரனாக விளையாடி, தன் திறமையிலேயே எங்கள் பள்ளியை மாவட்ட சாம்பியனாக்கியவன்.

உயரம் தாண்டுதல் தவிர மற்ற போட்டிகளில் தான் முதலிடம் பெற்று, என்னைப் பின்னே தள்ளி விட்டு அத்லெடிக் சாம்பியன் பட்டம் பெற்றவன். முஸ்தபா என்பவர் இரண்டாம் இடமும், இப்ராஹிம் என்ற என் நண்பர் மூன்றாமிடமும் பள்ளித் தேர்வுகளில் பெறுவார்கள். நான்காம் இடம் பெற்ற நான் மட்டில் பிற்காலத்தில் ஒரு வழக்கறிஞன் பட்டம் பெற்றேன். என் நண்பர் இப்ராஹிம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தவர்;

வக்கீல் யோசனைக்காக அவர் வீட்டுப் பத்திரத்தை என்னிடம் காண்பித்தபோது அவருடைய பாட்டனாரின் பெயர், சீனிவாச ஐயர் மகன் அப்துல்காதர் என்று குறிப்பிடப்பட்டதைக் கண்டேன்; அதில் ஒரு சந்தோஷம்! நானும் சீனிவாஸ அய்யங்காரின் மகன் சாருஹாசன் என்ற பாதி இஸ்லாமியப் பெயர் கொண்டவன் என்பதில் ஒரு பெருமைகூட.

என் தந்தையார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடைய குருவாக விளங்கிய யாகூப் ஹஸன் என்ற பெரியவரின் பெயரை தன் மூன்று பிள்ளைகளுக்கும் நன்றிக் கடனாகப் பெயரிட்டார்.

மூஸா ஜமால் என் போன்ற அரைகுறையுமில்லை. அல்லது வகுப்பில் நான்காமிடம் பெறும் எனக்கும் பின்னாலே இருந்த 36 ஞான சூனியங்களின் சராசரியுமில்லை. பத்தாம் வகுப்பிலேயே ஒரு கையெழுத்துப் பத்திரிகையின் தொகுப்பாசிரியராகி விட்டான். ஞான சூனியங்கள் எல்லோரும் பின்னாளில் பொருளீட்டி வளமடைந்தது தனிக்கதை.மூஸா ஜமால் தான் ஒரு அறிவுஜீவி என்று எழுத்து மூலம் எல்லா ஆசிரியர்களையும் கவர்ந்தான்.

என்னிடம் தன் பத்திரிகைக்கு ஒரு சிறுகதை எழுதிக் கொடுக்கும்படி கேட்டான். ‘படைப்பு’ என்ற பகுதி யில் என் மூளை அதிகம் உழைத்துப் பழக்கமில்லாததால், என் தாத்தா வீட்டில் மொத்தமாக பைண்ட் செய்யப்பட்ட கோப்பி லிருந்து மூன்று நாட்கள் முனைந்து படித்து ‘பிரசண்ட விகடனில்’ பிரபல எழுத்தாளர் நாடோடி எழுதிய கதையைத் திருடி, ஒரு நாள் முழுதும் மசியில் முக்கி எழுதும் முள் பேனாவால், கையால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து கெட்டித்தாளில் எழுதி, ஜனாப் மூஸா ஜமாலிடம் கொடுத்து விட்டு அந்தக் கருத்துத் திருட்டை மறந்துவிட்டேன்.

ஓரிரு நாட்களில் இந்தக் கதை மட்டும் ‘‘ஓஹோ... ஓஹோ...’’ என்று புகழப்பட்டது. மூஸா அடுத்த முறை கதை கேட்டபோதுதான் ‘கதை எழுதுவதைவிட ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கடினம்’ என்று புரிந்துகொண்டேன். ‘‘இந்தா... நீயே ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்!’’ என்று எங்கள் பாட்டி வீட்டு ‘பிரசண்ட விகடன்’ பைண்டிங்கை அவனிடம் கொடுத்துவிட்டேன்.

மூஸா ஜமால் ஒரு மானஸ்தன். என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டான். இன்று 25 ஆண்டுகள் ஆகிறது, நான் தேசிய விருது பெற்று! என் உயிர்த் தோழனாக இருந்த ஒரு பிரபல எழுத்தாளர் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டது நினைவுக்கு வருகிறது. இது படைப்பாளிகளின் உடன்பிறந்த நோயாக இருக்கலாம்.

பின்னால் இளையான்குடி செருப்புக் கடையில் வேலைக்குச் சேர்ந்த மூஸா ஜமால், நான் மோட்டார் சைக்கிளில் அந்தக் கடையைத் தாண்டி சிவகங்கை கோர்ட்டுக்கு போகும்போது ‘‘இவனெல்லாம் எப்படி படித்து வக்கீலானான்?’’ என்று அடிக்கடி வியந்து விட்டு அல்பாயுசில் காலராவில் காலமாகி விட்டான்.

அந்த பிரபல எழுத்தாளர் நாடோடி அவர்களை பின்னால் சென்னையில் சின்ன அண்ணாமலை என்ற என் தந்தையின் காங்கிரஸ்கார நண்பரின் ‘தமிழ்ப்பண்ணை’ புத்தகக்கடையில் சந்தித்து, நான் அவர் சிறுகதையைத் திருடியதை ஒப்புக்கொண்டேன். அவர் என்னைத் தட்டிக் கொடுத்து, ‘‘பரவாயில்லை! ஒரு தடவை திருடியவன்தான் நல்ல போலீஸ்காரன் ஆகமுடியும்’’ என்றார்.

என் தந்தையார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடைய குருவாக விளங்கிய யாகூப் ஹஸன் என்ற பெரியவரின் பெயரை தன் மூன்று பிள்ளைகளுக்கும் நன்றிக் கடனாகப் பெயரிட்டார்.’’

(நீளும்...)


*சாருஹாசன்