நியூஸ்வே



‘‘போலீஸ் கமிஷனர் ஆவது என் வாழ்க்கை லட்சியம்’’ என கம்பீரமாக நெஞ்சு நிமிர்த்தி பேட்டி கொடுத்தார் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சாதிக். அவருக்கு வயது 10. ஆம், ‘ஒருநாள் முதல்வர்’ போல ‘ஒருநாள் போலீஸ்’ கமிஷனர் ஆன சாதிக்கிடம் ஒரு கண்ணீர்க்கதை இருக்கிறது. தன் மூன்று மாமாக்களும் ராணுவத்தில் பணி புரிவதைப் பார்த்து, காக்கி உடை மீது அவனுக்கு ஆசை வந்தது. ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் ஆக வேண்டும் என கனவு கண்டான்.

ஆனால் வாழ்க்கை அவனுக்கு வேறுவிதமான திட்டங்கள் வைத்திருந்தது. மிக அரிதான புற்றுநோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாட்களை அவன் எண்ணிக் கொண்டிருக்கும் உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள். எஞ்சிய நாட்களில் அவனது ஆசைகளை நிறைவேற்ற ஒரு அறக்கட்டளை மேற்கொண்ட முயற்சிக்கு ஐதராபாத் கமிஷனர் மகேந்தர் ரெட்டி சம்மதம் சொல்ல, கமிஷனராக காக்கி உடையில் அவரது நாற்காலியில் ஒருநாள் அமர்ந்திருந்தான் சாதிக். போலீஸ் அணிவகுப்பு மரியாதை, பிரஸ்மீட் என எல்லாவற்றையும் கம்பீரமாக அவன் செய்தாலும், பெற்றோர் கண்கள் குளமாகி இருந்தன.

உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தலைமைச் செயலகத்தில் பிரஸ்மீட் நடத்திக் கொண்டிருந்தபோது திடீர் பவர்கட். கடும் தேடலுக்குப் பிறகு, பவர்கட்டுக்குக் காரணமான வில்லனைக் கண்டறிந்து விட்டார்கள். அது, ஒரு எலி. அது மின் வயரைக் கடித்ததால் பவர்கட்.

கார்த்தி அடுத்து லிங்குசாமியின் படத்தில் நடிப்பதற்காக ரெடியாக     இருந்தார். ஆனால், லிங்கு கதையை இன்னும் செறிவாக்க அதிக நாட்கள் கேட்க, இப்போது அந்த கால்ஷீட்டைத்தான் நாகார்ஜுனாவுடன் சேர்ந்து நடிக்கும் படத்துக்குக் கொடுத்திருக்கிறார்.

‘தெனாலி ராமனி’ல் வடிவேலுவுடன் ஜோடி போட்ட மீனாட்சி தீக்ஷித், அடுத்தும் காமெடி பிரேம்ஜியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். சண்டிகரை பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி, மும்பையில் வசிக்கிறார். மீனாட்சியின் அப்பா ஈஷ்வர் சந்த்ர தீக்ஷித், மும்பையில் சீனியர் லாயராம்.

நம் ஊரில் மணல் மாஃபியா அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இதை டெக்னாலஜி துணை கொண்டு ஒழிக்க நினைக்கிறார். அங்கே இப்போது ஆன்லைனில் மணல் வாங்கலாம். அரசின் கணக்கில் பணம் கட்டினால், லாரியில் வீட்டு வாசலுக்கு மணல் வந்துவிடும்.

11 டைரக்டர்கள்... 11 கதைகள்... ஒவ்வொரு கதையும் இன்னொரு கதையோடு ஏதோ ஒரு விதத்தில் பிணைந்திருக்கிறது. இந்தக் கதைகளின் தொகுப்பே ‘எக்ஸ்’ என்ற படம். நியூயார்க் திரைப்பட விழாவுக்குப் போகும் இந்தப் புதுமை முயற்சிப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார் பியா.

தங்களுக்கு வரும் அப்ளி கேஷன்களில் கடுமையாக வடிகட்டி ஆளெடுக்கும் நிறுவனம் என பெயர் வாங்கி இருக்கிறது கூகுள். ஓராண்டில் விண்ணப்பிக்கும் 30 லட்சம் பேரில் கூகுள் வேலைக்கு எடுப்பது 7 ஆயிரம் பேரை! இது 0.2 சதவீதம்.

அண்ணன் வெங் கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்திலிருந்து தன் பெயரை ‘அப்துல் காலிக்’ என டைட்டில் போட்டு மாறுகிறார் யுவன்ஷங்கர் ராஜா. தன்னை எல்லோரும் ‘அப்துல்’ என அழைக்கவே விரும்புகிறார். சரிங்க யுவா... ஸாரி அப்துல்!

பட்டுப்புழுக்களுக்கு மரபணு மாற்றம் செய்து, இரவிலும் ஒளிரும் விதமாக பட்டு இழைகளை ஜப்பானில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பட்டு இழையில் நெய்த ஒரு உடை, சமீபத்தில் டோக்கியோ நேஷனல் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இப்படி பட்டுப்புடவைகள் நம் ஊரில் வரக்கூடும்!

கே.எஸ்.ரவிக்குமார் ‘லிங்கா’ படத்தை பொங்கலுக்கு வெளியிடத்தான் நினைத்தார். ஆனால், ரஜினியின் வற்புறுத்தலுக்காக அதை டிசம்பர் 12ம் தேதியே வெளியிடத் தீர்மானித்துவிட்டார். இரவும் பகலுமாக உழைத்து ‘லிங்கா’ ரெடியாகிறது.

300 ரூபாயில் உங்களால் என்ன செய்ய முடியும்? ஒரு சினிமா பார்க்க முடியுமா? அன்ஷுல் சின்ஹா இந்த பட்ஜெட்டில் ‘ஆந்திரா தெலங்கானா’ என்ற 5 நிமிடக் குறும்படம் எடுத்திருக்கிறார். இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகி இருக்கிறது.

 மறுபடியும் விஜய்க்கு ரெட்டை வேஷம்தான். சிம்புதேவன் அடுத்து இயக்கப் போகும் படத்தை அப்படித்தான் ரெடி பண்ணி வைத்திருக்கிறார். ஸ்கிரிப்ட் முழுக்க கேட்டு சந்தோஷமாகி விட்டாராம் விஜய். ஷூட்டிங் ஆரம்பித்து விட்டாயிற்று. ஸ்ருதி ஹாசனும், ஹன்சிகாவும் நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி ரீ என்ட்ரி தர, ‘நான் ஈ’ சுதீப்பும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். காமெடிக்கு தம்பிராமையாவும், ரோபோ சங்கரும் இருக்கிறார்களாம்.

இயக்குநர் ராஜுமுருகன் ‘குக்கூ’ படத்திற்குப் பிறகு, தனுஷுக்காக ஒரு கதை ரெடி பண்ணினார். இப்போது அதே கதைக்காக விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார். பந்து விஜய் சேதுபதியின் கையில் இருக்கிறது.


இப்போது கால்ஷீட் கிடைக்காமல் தவிக்க வைப்பது பெரும் நடிகைகள் யாருமில்லை. கானா பாலா ஒரு பாட்டாவது பாடினால்தான் படத்திற்கு நல்லது என நம்பிக்கை பெருகிவிட்டதால், அவரை தொடர்ந்து விரட்டுகிறார்கள். பெரும்பாலான பாடல்களை அவரே எழுதுகிறார். அவரால் தினமும் ஒரு பாடலுக்கு மேல் எழுத முடியவில்லை. இருந்தாலும் அவரது ஆபீஸைச் சுற்றி எப்போதும் கார்கள் வட்ட மிட்டுக் கொண்டிருக்கின்றன.

மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாடு உருவாக்கியிருக்கும் ‘மேஜிக் பிளானட்’டின் திறப்பு விழா சமீபத்தில் கேரளாவில் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட மோகன்லால், அங்கேயே பல வகை மேஜிக்குகள் செய்து காட்டி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது விழாவின் ஹைலைட்!

பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்ட அவர், கிடைத்த ஓய்வுப்பொழுதில் தன் திரைப்பட அனுபவங்களை புத்தகம் ஆக்கியிருக்கிறார். டிசம்பரில் வெளியாகிறது புத்தகம்.

அனுஷ்கா மூன்று சரித்திரப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, உடம்பை ஏற்றியும் இறக்கியும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார். எல்லா படப்பிடிப்பையும் ஜனவரியோடு முடித்துக்கொள்ளக் கேட்டிருக்கிறார். அதற்குப் பிறகு குடும்பத்தோடு இரண்டு மாதம் அமெரிக்க ட்ரிப் போய் ஃபுல் ரெஸ்ட். வேணுமில்ல தங்கத்துக்கு!

அட்லி அடுத்து விஜய்யை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு ஜோடியை முடிவு செய்துவிட்டார்கள். ‘வில்லு’ படத்திற்குப் பிறகு நயன்தாரா விஜய்யின் ஜோடியாகிறார். கலைப்புலி தாணு ரொம்ப நாள் காத்திருப்புக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சூர்யாவின் புது வீடு ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. சிவகுமார்தான் அதை முன்னின்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். அடுத்த ஆண்டில் அந்த வீட்டில் குடியேற நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

விஷால் அல்லும் பகலுமாக ‘ஆம்பள‘ ஷூட்டிங்கில் இருக்கிறார். அவரே முதல் ஆளாக வந்துவிடுவதால் எல்லோரும் ஸ்பாட்டில் ரெடியாகி நிற்கிறார்கள். முன்பு பாலாஜிதான் ரிலீஸ் தேதியை சொல்லிவிட்டு ஷூட்டிங் ஆரம்பிப்பார். அதேமாதிரி 30 வருஷம் கழித்து அந்த டிரெண்டை ஆரம்பித்து விட்டார் விஷால்.

‘இனிமேல் பீரியட் படங்களை எடுப்பதில்லை’ என முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். அதற்கு அதிக காலமும், உழைப்பும், தகவல் சேகரிப்பும் தேவைப்படுவதால் படத்தை முடிக்க வருஷமாகிறது. எனவே துடிப்பான சமூகக் கதைகளை இனி எடுக்கப்போகிறார்.